சனி, 30 ஜூலை, 2016

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அரசு பேருந்தில் பயணம்


கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்ல அவசர அவசரமாக ரயில் நிலையம் செல்கிறார் அவர். ஆனால், நூலிழையில் ரயிலைத் தவற விடுகிறார். என்ன செய்யலாம் என்று யோசித்து சில நிமிடங்களில் பேருந்து நிலையம் சென்று அரசு பேருந்தில் ஏறுகிறார். வண்டி பரபரப்பு முடிந்து சற்று ஆயாசமாக, அதன்பின்தான் தன் அருகில் சிலர் ஆச்சர்யமாக நின்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். ‘சார் ஒரு செல்ஃபி’ என அன்போடு அவர்கள் கேட்க, வியர்த்து விறுவிறுத்து இருந்தாலும் அன்புக்கு மதிப்பு கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்
அந்த வெள்ளை வேட்டி, சட்டை கதர்சட்டைக்காரர். எடுத்து முடித்தும் ‘ரொம்ப நன்றி மிஸ்டர் எக்ஸ் சி.எம்’ என்று தனது சீட்டுக்கு திரும்புகின்றனர். ஆம், அவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி. கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்குச் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, திருவனந்தபுரத்துக்கு திரும்பும்போதே ரயிலை தவறவிட்டு, மேற்கண்டதெல்லாம் அரங்கேறியது. அரசுப் பேருந்தில் பயணித்தபோது கண்டக்டராக இருந்த பெண், ‘அவரிடம் உதவியாளர் இருக்கிறாரா?’ என்று கேட்டுள்ளார். ‘இல்லை’ என்று கூறி ‘ஒரு டிக்கெட் போதும்’ என்று கேட்டு வாங்கிக் கொண்டார். பேருந்திலேயே திருவனந்தபுரம் பயணித்தார். பேருந்தில் பயணிக்கும் விஷயம் அறிந்து திருவனந்தபுரம் குவிந்தனர் செய்தியாளர்கள். அவர்களிடம் பேசிய உம்மன்சாண்டி, ‘மாநில அரசின் பேருந்தில் பயணம் செய்வதை எப்போதும் விரும்புவேன். அதிலும் விரைவு பேருந்தில் செல்வது ரொம்ப பிடிக்கும். ஆனால், நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் பயணம் செய்ய முடிவதில்லை. இப்போது நமக்கு பெரிய வேலை இல்லை. ஓய்வில் இருக்கிறோம். (முதல்வராக இல்லை என்பதை வேடிக்கையாக கூறுகிறார்) அதனால், இந்த முறை என் ஆசையை நிறைவேற்ற பேருந்தில் பயணித்தேன்’ என்றார் புன்னகைத்தபடி.
கிட்டத்தட்ட 75 கி.மீ பேருந்து பயணம் உம்மன்சாண்டிக்குப் பெருத்த உற்சாகம் கொடுத்தது என்பதை அவரின் முகத்தில் மிளிர்ந்த புன்னகையில் இருந்தே அறிந்துக் கொள்ள முடிந்தது. பக்கத்து தெருவுக்கு போகவே காரும், பாதுகாவலர்களும், வழியெங்கும் கட்-அவுட்டும், ஆரத்தி வரவேற்பும் எதிர்பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் முன்மாதிரி அரசியல்வாதியாக இருக்கும் உம்மன்சாண்டிக்கு வாழ்த்துகள். இதேபோல் முன்னாள் திரிபுரா முதல்வர் நிரூபன் சக்கரவர்த்தி தனது பதவிகாலத்துக்குப் பிறகு சைக்கிள் ரிக்க்ஷாவில் தான் கட்சி அலுவலகத்துக்கு தனது பயணங்களை மேற்கொண்டார். புதுவை முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், ஒருமுறை தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது ஆட்டோவில் பயணித்தே மருத்துவமனை சென்றார். அதேபோல் முன்னாள் புதுவை முதல்வர் ரங்கசாமி, தெருவோர தேநீர் கடைகளில் தேநீர் அருந்துவதும், அவ்வப்போது சைக்கிளில் கட்சி அலுவலகத்துக்குப் பயணிப்பதும் அவர் வழக்கம். இவர்கள் எளிமைக்கு ஒரு சல்யூட். மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: