சனி, 30 ஜூலை, 2016

ஜெய(சுய)மோகன் பார்வையில் டி,எம். கிருஷ்ணா ஒரு பார்ப்பன துரோகி.. மனுஷ்ய புத்திரன்

thetimestamil.com :கர்நாடக இசைப்பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு ரமோன் மகஸேசே விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்து எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். தனது முகநூல் எழுதியுள்ள பதிவில்,
“ஜெயமோகனை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒருவர் நிதானமிழக்கும்போது எந்த அளவிற்கு செல்வார் என்பதற்கு திரும்பத் திரும்ப காணக்கிடைக்கும் உதாரணமாக அவர் இருக்கிறார். டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே விருது அளிக்கப்பட்டதை அவர் கடுமையாக தாக்குகிறார். ’’சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்’’ என்று எழுதுகிறார். ஜெயமோகனைபோலவே எனக்கும் இசை பற்றி எதுவும் தெரியாது என்பதால் இதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த விருது இசையில் டி,.எம் கிருஷ்ணா நிகழ்த்திய சாதனைகளுக்காக அல்ல மாறாக ஒரு பிரபல இசைக்கலைஞராக சமூக நல்லிணகத்திற்காகவும் நீதிக்காகவும் பொது வெளியில் அவர் எழுப்பிய குரலுக்காக்காகவே இந்த விருது வழங்கபட்டிருக்கிறது.

இந்த விருதிற்கு எல்லாவிதத்திலும் தகுதியானவர் டி,எம் கிருஷ்ணா. சஞ்சய் சுப்பிமணியம் போன்றவர்கள் உன்னதமான\ சாஸ்திரிய சங்கீதத்திற்காக ஆற்றும் உன்னதமான பணிக்காக மட்டுமே வழங்கபடக்கூடிய பல விருதுகளை பெறக்கூடும். அப்போது டி,எம். கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் யாருக் கோவித்துக்கொள்ள மாட்டார்கள் .
தமிழ்நாட்டில் இந்தியாவையே பதட்டமடையச் செய்த பல பிரச்சினைகளில் எத்தனை பிரபல கலை ஆளுமைகள் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்? பல சமயங்களில் தங்கள் ஸ்தானங்களுக்கோ வாய்ப்புகளுக்கோ எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்று மெளனமாக கடந்து போயிருக்கிறார்கள். இந்த சூழலில் டி.எம் கிருஷ்ணா போன்ற நிலைப்பாடுகளைக்கொண்ட அதை துணிச்சலாக வெளிப்படுத்தக் கூடிய கலைஞர்கள் அபூர்வமாகவே இங்கு இருக்கிறார்கள். கமல் போன்ற முற்போக்குவாதிகள் மோடியின் ஸ்வட்ச் பாரத்தில் இணைந்து குப்பை அள்ளிப்போடும் புனிதப்பணியை செய்துகொண்டிருந்த காலத்தில் மோடியின் மதவாத நோக்கங்களை டி.எம் கிருஷ்ணா கடுமையாக எதிர்த்தார்.
டி.எம்.கிருஷ்ணா மோடியின் வகுப்புவாத வாத அணுகுமுறைகளை பகிரங்கமாக எதிர்த்தார் என்பதுதான் ஜெயமோகன் உட்பட பலருக்கும் இங்கு பிரச்சினை. எங்களைப்போன்ற மிலேச்சர்களோ, சூத்திரர்களோ மோடியை எதிர்ப்பது இயல்பானதுதான். ஆனால் டி.எம். கிருஷ்ணா போன்ற ஒரு கர்நாடக இசைக்கலைஞர் இந்தியாவில் இந்துத்துவா பெரும்பான்மை வாதத்தை எதிர்க்கிறபோது அவர்கள் கட்டமைக்க விரும்புகிற பண்பாட்டு அதிகாரத்தில் ஒரு ஓட்டை விழுகிறது. அதனால்தான் வேறு யார்மீதும் வருகிற கோபத்தைவிடவும் கிருஷ்ணா மீது அதீதமான வெறுப்பு ஏற்படுகிறது. எதிரியை மன்னிக்கலாம். துரோகியை மன்னிகலாமா? டி,எம். கிருஷ்ணா போன்ற சொந்த சாதிய மதிப்பிடுகளுக்கு துரோகம் செய்யக் கூடியவர்கள்தான் நம்பிக்கைகுரிய சக்திகள்.
ஜெயமோகன் தன் குறிப்பை இப்படி முடிக்கிறார்:
‘’ தமிழின் பண்பாட்டியக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர் அவர். மிக எளியமுறையில்கூட தமிழக இலக்கியம், கலைமரபு பற்றிய அறிமுகமே இல்லாத ‘பெரியவீட்டுப்பிள்ளை’. பொத்தாம்பொதுவான ஒரு மொழியில் எது பொதுவெளியில் ‘அதிர்வு’களை உருவாக்குமோ அதைமட்டும் பேசும் காலி டப்பா.
ஆக, அவருடைய தி இண்டு பின்னணி மட்டுமே இவ்விருதுக்கான தகுதியை உருவாக்கியிருக்கிறது. இந்த விருது மட்டும் இல்லையென்றால் இந்தக்குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை.’’
இந்தியாவில் மனித உரிமை சார்ந்த , கருத்து சுதந்திரம் சார்ந்த, ஜனநாயகம் சார்ந்த பல போராட்டங்களில் இந்தியாவின் மத்தியதர வர்க்கத்தினரும் சில சமயம் ’எலைட்’ என்று சொல்லக்கூடிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களும் முக்கியமான பங்கை செலுத்தியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் இந்தியாவின் மிகப்பெரிய ’எலைட் ’புரட்சியாளர்கள் காந்தியும் நேருவும்தான். போகிற போக்கில் ஏழை- பணக்காரன் வித்தியாசத்தை அடித்துவிட்டால் அது உண்மையாகிவிடுமா?
சரி ஒரு எலைட் புரசியாளரைப் பற்றி இவ்வளவு தாக்குகிற ஜெயமோகன் கையால் மலம் அள்ளும் அவலத்திற்கு எதிராக போராடி வரும் பொசவாடா விலசனுக்கும் மகசேசே விருது கிருஷ்ணாவோடு சேர்த்து வழங்கபட்டிருகிறதே.. அந்த ஒடுக்கப்பட்ட சமூக புரட்சியாளனை வாழ்த்தி இரண்டு வரி எழுதியிருக்கலாமே.
‘’ இந்தக்குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை’’ என்று ஜெயமோகன் எழுதுகிறார். ஆனால் இரண்டு நாளைக்கு எண்ணற்ற குறை குடங்கள் தன்னைப்பற்றி பேசவேண்டும் எந்தற்காகத்தானே இந்த provoking ?
ஜெயமோகனின் இந்தக் குறிப்பு ஏற்படுத்தும் உணர்வு அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் ‘’ சமீபத்தில் மிகக்கூசிய ஒருதருணம் இது.’’

1 கருத்து:

ilankumaran சொன்னது…

அருமையான சூடு. ஆனால் சுய மோகனுக்கு உறைக்காது.