செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மாட்டிக்கொண்ட மந்திரி பினாமிகள்! கோடி கோடியாக கரன்சி மழை!


vikatan.com தமிழ்நாட்டின் ‘பவர்ஃபுல்’ அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமான, கரூரைச் சேர்ந்த அன்புநாதன் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் பணம், வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்று தகவல்கள் வருகின்றன. கரூரில் 4.75 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்தியாவிலேயே இவ்வளவு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டது கரூரில்தான் என்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி சொல்லி இருக்கிறார். உண்மையில், அன்புநாதனின் வீட்டில் இருந்து பல நூறு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன. உண்மை விவரங்களை அதிகாரிகள் மறைக்கிறார்கள் என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


யார் இந்த அன்புநாதன்?

கரூர் தோட்டக்குறிச்சியை அடுத்த அய்யம்பாளையத்தில் அன்புநாதனின் வீடு உள்ளது. அன்புநாதனின் அப்பா பெரியசாமி, கரூர் பாலிடெக்னிக் கல்லூரியின் பங்குதாரராக இருந்தவர். அப்பாவின் மறைவுக்குப் பிறகு, கல்லூரி நிர்வாகத்தில் இருந்து விலகினார் அன்புநாதன். அதன்மூலம் கிடைத்த பணத்தில் ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் என லோக்கலில் அவர் வலம்வந்தார். தனது சகோதரியை திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளார். சகோதரியின் கணவர் மூலம் நத்தம் விசுவநாதன் நெருக்கமாகிறார். கூடவே, ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும் நெருக்கமாகிறார்.

கரூரில் செய்துவந்த ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களுக்கு முழுக்குப் போட்டுவிட்டு,   சென்னை உட்பட சில முக்கிய நகரங்களில் தனது பிசினஸ்களை அதிகரித்து உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், அன்புநாதன் மூலமாக பல கோடிகள் சினிமா துறையில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கரூர் குன்னம்சத்திரத்தில் உள்ள அன்னை மகளிர் கல்லூரியும், திருச்சி ஆர்.வி.எஸ் கல்லூரியும் இவரது கட்டுப்பாட்டில் இருக்கின்றனவாம். ஆர்.வி.எஸ் கல்லூரியை அமைச்சர் வைத்திலிங்கம் தரப்புக்கு மாற்றிவிட ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள்.

பண்ணை வீட்டில் அமைச்சர்கள்!

இப்போது ஓ.பன்னீர்செல்வம்,  நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி என அனைவரும் அன்புநாதனுக்கு மிகமிக நெருக்கம் என்கிறார்கள். அமைச்சர்கள் பன்னீர் செல்வமும், நத்தம் விசுவநாதனும் அன்புநாதனுக்குச் சொந்தமான கரூர் அய்யம்பாளையத்தில் உள்ள பண்ணைவீட்டில் சில முறை தங்கிச் சென்றதாகவும் சொல்கிறார்கள். அன்புநாதன் வீட்டுக்கு ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் சர்வசாதாரணமாக வந்து போவாராம். கல்லூரி ஒன்றை விலைக்கு வாங்கும் விவகாரத்தில், செந்தில்பாலாஜிக்கும் அன்புநாதனுக்கும் பகை ஏற்பட, அவர்கள் இருவரும் எதிரும்புதிருமாக உள்ளார்களாம். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை வீழ்த்தியதன் பின்னணியில் அன்புநாதன் இருந்தார் என்றும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. கரூர் தொகுதி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ள விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளராக கொண்டுவரப்பட்டது, பின்னர் அவரது பதவி பறிக்கப்பட்டது என அனைத்துக்கும் அன்புநாதனே காரணம் எனச் சொல்லப்பட்டது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், தொகுதிப் பொறுப்பாளர்களாக இருந்த அமைச்சர்களின் சார்பாக அந்தந்தத் தொகுதிகளுக்கு, பணம் சப்ளை செய்யும் பொறுப்பு அன்புநாதனிடம் ஒப்படைக்கப் பட்டதாம். அந்தக் காரியத்தை அவர் கச்சிதமாக செய்துமுடித்தாராம். திருச்சி, கோவை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள தொகுதிகளுக்கு, ஆம்புலன்ஸ் மூலம் எந்தப் பிரச்னையும் இல்லாமல், பாதுகாப்பாக பணம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே, இந்தத் தேர்தலிலும் கரன்சிகளை சப்ளை செய்வதற்கான பொறுப்பு சில மாதங்களுக்கு முன்பாக, அன்புநாதனிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் பல இடங்களில் பண சப்ளை கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டு விட்டதாம். 
கண்டுகொள்ளாத அதிகாரிகள்...

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி காலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, கரூர் மாவட்ட எஸ்.பி-யான வந்திதா பாண்டேவுக்கு போன் செய்துள்ளார். கரூர் அய்யம்பாளையம் பிரிவுச் சாலையில்  அன்புநாதனுக்குச் சொந்தமான குடோனில் ஆய்வு நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார். அதுவரை, லோக்கல் அதிகாரிகள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். லக்கானி உத்தரவை அடுத்து, காலை 10.30 மணிக்கு வந்திதா பாண்டே மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், அன்புநாதனின் அய்யம்பாளையம் குடோனுக்குள் சென்றனர். குடோனின் நுழைவாயிலில் இருந்த ஆளுயர இரும்புக்கதவை போலீஸார் பூட்டிவிட்டனர். அந்தக் கதவின் ஓட்டைகள் வழியாகக்கூட யாரும் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்பதில் போலீஸார் கவனமாக இருந்தனர். கீழே விரிக்கப்பட்டிருந்த தார்பாய்களால் அந்தக் கதவை போலீஸ் அதிகாரிகள் மூடினர். அடுத்து, தேர்தல் செலவுக்கணக்குப் பார்வையாளர் சில்ஆசிஷ், அவரைத் தொடர்ந்து வருமானவரித் துறை இணை ஆணையர் மணிகண்டன், ராஜசேகர், நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் குடோனுக்குள் சென்றனர். 

அடுத்ததாக, மாவட்டத் தேர்தல் துணை அலுவலரான டி.ஆர்.ஓ அருணா அங்கு வந்தார். மாலையிலும், அடுத்த நாள் காலையிலும் என 24 மணி நேரத்துக்கு மேல் சோதனை தொடர்ந்தது.

இந்த ரெய்டு தொடர்பான தகவல் காட்டுத்தீ போல பரவியது. அய்யம்பாளையம் பொதுமக்கள், அ.தி.மு.க-வினர், தி.மு.க-வினர் என ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
திகில் நிமிடங்கள்...

முதல் நாள் நடைபெற்ற 5 மணி நேர சோதனையில், ரூ.10.33 லட்சம் கரன்சி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுதவிர, 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், ரப்பர் பேண்ட்கள், காலிப் பெட்டிகள், 4 கார்கள், ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். TN91-Y.1669 என்ற பதிவுஎண் கொண்ட அந்த ஆம்புலன்ஸில், ‘நேஷனல் ஹெல்த் ரூரல் டெவலப்மென்ட் ஸ்கீம்’, ‘கவர்ன்மென்ட் ஆப் இந்தியா’ என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதைச் சோதனை நடத்திய அதிகாரிகள் சொல்ல  மறுத்தனர். குறிப்பாக, சோதனை நடந்த முதல் நாள் மாலை 4.45 மணிவரை எஸ்.பி-யான வந்திதா பாண்டே, டி.ஆர்.ஓ-வான அருணா ஆகியோர் விசாரணை குறித்து வாயே திறக்கவில்லை.

வருமானவரித் துறை அதிகாரி நடராஜன், வருமானவரித் துறை இணைய இயக்குநர் (தேர்தல்) மணிகண்டன்,  தேர்தல் பார்வையாளர் சில் ஆசிஸ் ஆகியோர், அந்தக் குடோனுக்கு எதிரே உள்ள அன்புநாதன் வீட்டில்  சோதனை செய்வதற்காக நீதிமன்ற ஆணையுடன் வந்தனர். அவர்களைக் கண்டு, அன்புநாதனின் வழக்கறிஞர் பாஸ்கரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் பதறிப் போனார்கள். ‘அன்புநாதன் திருநெல்வேலியில் இருக்கிறார். அவர் வந்ததும் சோதனை நடத்திக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள். ‘எங்களிடம் கோர்ட் ஆர்டர் இருக்கிறது. சட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது. இரவு 7.30 வரை காத்திருக்கிறோம். அதற்குள் வரவில்லை என்றால், பூட்டை உடைக்க வேண்டியிருக்கும்’ என அதிகாரிகள் கறார் காட்டினர். இரவு 7.45-க்கு அன்புநாதன் அங்கு வந்தார். தனது வீட்டுக் கதவை திறந்துவிட்டார். அதன்பிறகு, நள்ளிரவு வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தப் பணமும் அங்குதான் பதுக்கப்பட்டு இருந்துள்ளது. அந்தப் பணக்கட்டுகளைப் பார்த்து அதிகாரிகள் மிரண்டு போனார்களாம்.

அறிக்கைவிட அவசரம் ஏன்?


விசாரணை நடந்துகொண்டிந்தபோதே, 22-ம் தேதி மாலையில், சென்னையில் இருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ‘சோதனையில் ரூ.10.3 லட்சம், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், காலிப் பெட்டிகள், ரப்பர் பேண்ட்கள், வாக்காளர் பட்டியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. குடோனில் நின்றிருந்த மத்திய அரசுக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ், ஒரு டிராக்டர், 4 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன என அந்த அறிக்கையில் லக்கானி குறிப்பிட்டு இருந்தார். சோதனை முடிவதற்கு முன்பாகவே, கைப்பற்றப்பட்ட தொகை குறித்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுந்தது. பின்னர் 4.77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அன்புநாதனுக்குச் சொந்தமான இடங்களில் விடிய விடிய நடந்த சோதனை அடுத்த நாளான 23-ம் தேதி மதியம் வரை தொடர்ந்தது.  இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா திருச்சிக்கு வருவதையொட்டி, பந்தோபஸ்துக்குப் போகிறோம் என சில காக்கிகளைப் பாதுகாப்புக்கு நிறுத்திவிட்டு, போலீஸ் அதிகாரிகள் கிளம்பினர். அதைக் கண்டு, பதறிய அதிகாரிகள், உயிர் பயத்துடன் சோதனையைத் தொடர்ந்தனர்.

23-ம் தேதி மதியம் 6 பெட்டிகளுடன் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். 

ஆம்புலன்ஸில் பணம் கடத்தல்...

ஆம்புலன்ஸ் மூலமாக கரன்சிகளை நகர்த்தி இருப்பது, இந்தச் சோதனையின் மூலமாக வெட்டவெளிச்சம் ஆகியிருக்கிறது. யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசுக்குச் சொந்தமானது என ஆம்புலன்ஸ் மீது ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இந்த ஆம்புலன்ஸ், அந்தப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வந்ததும் இப்போது தெரியவந்துள்ளது.

அன்புநாதனின் குடோன், வீடு உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவின் காட்சிப் பதிவுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். ஜெயலலிதா கூட்டத்துக்காக திருச்சியில் முகாமிட்டிருந்த டி.ஜி.பி திரிபாதி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், போன் செய்து அந்த வீடியோ சிப்பைக் கேட்டுள்ளனர். ஆனால், அந்த சிப், வருமானவரித் துறையினர் வசம்போனது. தினமும் இரவு ஏழு மணிக்கு மேல், கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கியக் காவல் துறை அதிகாரிகள், அன்புநாதனின் குடோனுக்கு வந்து செல்வதும், மாலை நேரங்களில் ஏகப்பட்ட கார்கள் அங்கு நிற்பதுமான காட்சிகள் அதில் பதிவாகி இருக்கிறதாம். நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ்., ரவீந்திரநாத் குமார் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்துபோனது, காவல் துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் பணம் கொண்டு செல்லப்பட்டது ஆகிய காட்சிகளும் அதில் உள்ளனவாம்.

மீடியாவை ஏன் அனுமதிக்கவில்லை?

மணிக்கணக்கில் விசாரணையும், ரெய்டும் நடந்தபோதிலும் ஒரு போட்டோகூட யாரும் எடுத்துவிடக் கூடாது என்பதில், அதிகாரிகள் கவனமாக இருந்தனர். விசாரணை முடிந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வெளியேபோன சிறிது நேரத்தில், அன்புநாதனின் ஆதரவாளர்களான அ.தி.மு.க-வினர் பத்திரிகையாளர்களை விரட்டினர். காரை ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று செய்தியாளர்கள் சிலரை மிரட்டினர். எல்லாவற்றையும் போலீஸார் வேடிக்கை பார்த்தனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.10 கோடி!

அன்புநாதன் வீட்டில் சோதனை நடப்பது பற்றிய தகவல் அறிந்து பதறிய ஐவர் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு போன் செய்துள்ளார். ‘இதற்கு மேல் எதுவும் செய்யாதீங்க. ராஜேஷ் லக்கானி உத்தரவு போட்டால் எதையாவது சொல்லிச் சமாளிங்க. எல்லாத்தையும் அம்மா பாத்துக்குவாங்க. டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலமா சரிசெய்துக்கலாம்’ என்று சொன்னாராம். அதையடுத்து, சோதனை நடத்திய அதிகாரிகள் பின்வாங்கியுள்ளனர். தலைமைத் தேர்தல் அதிகாரிஅலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு என்பதால், வேறு வழியில்லாமல், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஆளும் கட்சியினர், ஒரு தொகுதிக்கு 10 கோடி ரூபாய் வீதம், செலவு செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதற்கான பணத்தை ஆங்காங்கே பதுக்கி வைத்து இருக்கிறார் களாம். அந்தப் பணத்தை, ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டுசென்று பட்டுவாடா செய்வதுதான் திட்டமாம்.

கொங்கு மண்டலம், திருச்சி, திண்டுக்கல் பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டநிலையில், அதுகுறித்த தகவலைத் தேர்தல் ஆணையத்துக்கு யாரோ தெரிவித்துள்ளனர். இவற்றை எல்லாம் அதிகாரிகள் மறைக்க நினைத்துள்ளனர். ரூ.10.3 லட்சம் பறிமுதல் செய்ததாக முதலில் கணக்குக் காட்டினர். அடுத்து? கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ.4.75 கோடி வருமானவரித் துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். பிரச்னை பெரிதாவதை உணர்ந்த பிறகுதான், மத்திய அரசின் பெயர், முத்திரை ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தியதாக அன்புநாதன் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே சுதந்திரப் போராட்டத் தியாகி ஓ.கே.ஆர் என்பவரின் பேரனும், அ.தி.மு.க பிரமுகருமான மணிமாறன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மணிமாறனின் ஃபேக்டரி, குடோனுக்குக் கடந்த சில நாட்களாக நிறைய கார்கள் வந்துபோவதாக தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் வந்துள்ளன. எனவே, ராஜேஷ் லக்கானி சோதனை நடத்த உத்தரவிட்டார். சோதனை நடந்தபோது, பத்திரிகையாளர்கள் உட்பட யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றும் அதிகாரிகள் சமாளித்தனர்.

பணம் பட்டுவாடா ஏஜென்ட்கள்!

தமிழகம் முழுவதும் தேர்தல் கமிஷன் நடத்தி வரும் அதிரடிச் சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. எழும்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 5 கோடி ரூபாயைப் பதுக்கி வைத்திருந்த விஜய், ஆனந்த் என்ற இரண்டு இளைஞர்கள், வருமானவரித் துறையிடம் ஏப்ரல் 24-ம் தேதி சிக்கினர். இவர்கள் இருவரும், கார்டன் வட்டாரத்துடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களாம். தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யும் ஏஜென்ட்டாக இவர்கள் செயல்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இதுகுறித்து வருமானவரித் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “எழும்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் பணம் இருப்பதாகத் தகவல் வந்தது. அங்கு சென்று சோதனை செய்தோம். அந்த வீட்டில் 4 கோடியே 93 லட்சத்து 84 ஆயிரத்து 300 ரூபாய் இருந்தது. அந்த வீட்டில் லேப்டாப், சிம்கார்டுகள், பென்டிரைவ்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினோம். லேப்டாப்பில், அ.தி.மு.க பிரமுகர்கள் 8 பேருடைய கணக்கு விவரங்கள் இருந்தன. ஏப்ரல் 25 அன்று விஜய், ஆனந்த் ஆகியோரிடம் பணம் தொடர்பாக விசாரணை நடத்தினோம். அவர்களிடம் பணத்துக்கான எந்த ஆவணங்களும் இல்லை. இதுதொடர்பாக, தேர்தல் அலுவலர்களிடம் அறிக்கை சமர்ப்பிப்போம். அதன்பிறகு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

யார் இந்த விஜய், ஆனந்த்?

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ஆவராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், விஜயகுமார். கடந்த 12 வருடங்களுக்கு முன் சென்னையில் செட்டிலாகிவிட்டார். கடந்த நாடளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தார். உடனே அவருக்கு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போது அதை, அ.தி.மு.க-வினரே அதிர்ச்சியோடு பார்த்தார்கள். அதன்பிறகு விஜயகுமார் விஸ்வரூப வளர்ச்சி கண்டார் என்கிறார்கள். மன்னார்குடி குடும்பத்தால்தான் கட்சியில் முக்கியப் பதவி பெற்றார் என்கிறார்கள்.

விஜயகுமாரின் மகன்கள்தான் விஜய், ஆனந்த். சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள ‘கமாண்டர்ஸ் கோர்ட்’ என்ற 16 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகைக்குக் குடிவந்தார் விஜய். மூன்று பெட்ரூம் வசதியுள்ள அந்த வீட்டுக்கு ஒரு மாத வாடகை ரூ.60 ஆயிரம். இவர், வெளிநாட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது தம்பி ஆனந்த், மங்களூரில் சட்டக்கல்வி படித்து வருகிறார். இவர்கள் இருவர் உட்பட 4 பேர் அங்கு தங்கி இருந்தனர்.

விஜய், ஆனந்த் ஆகிய இருவரும் ஐ.டி கம்பெனி தொடங்க, தனியார் ஏஜென்ட் மூலம் வட்டிக்குப் பணம் வாங்கியதாக வருமானவரித் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இவர்கள் வாக்காளர்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்யும் ஏஜென்ட்களாக செயல்பட்டு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விஜய்யின் லேப்டாப்பில், அ.தி.மு.க பிரமுகர்கள் 8 பேருடைய பெயர்களும், கணக்கு விவரங்களும் இருந்துள்ளன. அதில், விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரும் உள்ளதாம்.

அடுக்குமாடிக்கு வந்த பணம்!


இதுபற்றி கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். “விஜயகுமார், மன்னார்குடி குடும்பத்துடன் நெருங்கியத் தொடர்பில் உள்ளவராம். அதன்மூலம், அவரது மகன்கள் விஜய், ஆனந்த் ஆகிய இருவரும் கார்டனுடன் நெருக்கமாகி இருக்கிறார்கள். இவர்கள்தான், ஜெயலலிதாவின் பிரசார வாகனத்தில் எல்.இ.டி செட்அப் செய்தார்களாம். இவர்கள் இருவரும் அ.தி.மு.க-வில் உறுப்பினர்களாகக்கூட இல்லை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பணி இவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இந்தச் சோதனை நடந்தபோதுகூட ஒரு கோடி ரூபாய் பணம் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சோதனை நடந்த விவரம் தெரிந்ததும் அந்தப் பணம் மீண்டும் உரிய  இடத்துக்கே  எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது என்று அதிர்ச்சித் தகவலைச் சொன்னார்கள்.

தலைமறைவான தலைகள்!

மூன்று மாதங்களாக இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு விலை உயர்ந்த சொகுசுக் கார்கள் வந்த விவரங்கள் பற்றிய பதிவுகள் எல்லாம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளன. அந்தப் பதிவுகளையும் இப்போது வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவற்றை வைத்து, யார் யார் விஜய், ஆனந்த்தை சந்தித்தார்கள் என்றும் விசாரித்து வருகிறார்கள். விஜய், ஆனந்துடன் தங்கியிருந்தவர்கள் இப்போது தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

விஜய்யின் அப்பா விஜயகுமாரிடம் இதுகுறித்து பேசினோம். ‘‘நான் கட்சிப் பொறுப்பில் இருந்தாலும் பெரிய அளவில் ஆக்டிவ் ஆக இல்லை. என் மகன் விஜய் கார்ப்பரேட் நிறுவனத்தில் பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து புதிய சாப்ட்ஃவேர் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காக சென்னையில் தங்கி இருந்தான்.

அவனைப் பார்க்க எனது மற்றொரு மகன் ஆனந்த் அங்கு வந்திருந்தான். இந்த நிலையில்தான், யாரோ கொடுத்த தவறான தகவலின்பேரில் அங்கு சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்தப் பணம், நிறுவனம் தொடங்குவதற்காக வைத்திருந்தது. அதற்கான ஆவணங்களை வருமானவரித் துறையினரிடம் சமர்பிப்போம். ஊடகங்களில் சொல்வதுபோல எனக்கும், அமைச்சர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்றார்.

- சண்.சரவணக்குமார், சி.ய.ஆனந்தகுமார், எஸ்.மகேஷ், மா.அ.மோகன் பிரபாகரன், கே.குணசீலன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து

கருத்துகள் இல்லை: