வியாழன், 28 ஏப்ரல், 2016

25,000 கோடி கொள்ளை ..அதிக விலை கொடுத்து மின்சாரம்....கமிஷன் எவ்வளவு?

நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி பதிவாகி இருந்தது. இந்த வழக்கின் பின்புலம் என்ன? சூரிய மின்சக்தி விவகாரத்தில் மின் துறையில் நடந்தது என்ன? மின் திட்டம்: கடந்த 2014 செப்டம்பரில் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி தனியார் முதலீட்டாளர்கள் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க முன்வந்தால் அவர்களிடம் இருந்து ஒரு யூனிட்டுக்கு 7.01 ரூபாய் என்ற விலைக்கு மின்சாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின்வாரியம் கொள்முதல் செய்யும்.    அட, நம்ம மோடியின் ஆப்த நண்பர் அடானியிடம் கேட்டால் யாரிடம் கொடுத்தார்கள் என்ற விவரம் கிடைக்குமே.. அவருக்காகத் தானே எல்லா தில்லாலங்கடியும் அரங்கேறியது. இந்த "அதிரடி" செய்தி நாத்தத்துக்கு வைத்த ஆப்பா, இல்லை அடானிக்கு வைத்த ஆப்பான்னு தெரியல்லை.


இந்த திட்டத்தில் மொத்தம் 3,000 மெகாவாட் வரை அனுமதிக்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் 2015 செப்டம்பருக்குள் மின் நிலையத்தை நிறுவி மின்சார உற்பத்தியை துவங்கி விட வேண்டும் என்பது நிபந்தனை.இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை மற்ற மாநிலங்களின் விலையை விட அதிகமாக இருந்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இதனால் 110 முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தனர்.

ரூ.20 லட்சம் : ஆனால் ''துறையின் உயர் மட்டத்தினர் சூரிய மின் நிலையம் அமைக்க முதலில் ஒரு மெகாவாட்டிற்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டனர். பின் இதுவே ஒரு மெகாவாட்டிற்கு 40 லட்சம் ரூபாயானது. இந்தவிஷயத்தை தலைமை பொறியாளர் அந்தஸ்தில் இருந்த ஒருவர் கவனித்துக் கொண்டார்,'' என பெயர் வெளியிட விரும்பாத மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலில் ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்களில் பலர் இவ்வளவு லஞ்சம் கேட்கப்பட்டதால் பின்வாங்கினர். அதனால் 2015 செப்டம்பருக்குள் 3,000 மெகாவாட் இலக்கில் 600 மெகாவாட் உற்பத்தியை மட்டுமே கூடுதலாக பெற
முடிந்தது.லஞ்சம் கேட்பதற்கு

காரணமாக 'வெயில் தன்னாலே அடித்தபடி தானே இருக்கப் போகிறது. உங்களுக்கு என்ன கரி வாங்குற செலவா, இல்ல லேபரா? ஒரு செலவும் கிடையாது. நல்ல லாபம் வருமில்ல...' என மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக விரக்தியடைந்த முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

நீட்டிப்பு:
இருப்பினும் செப்டம்பர் 2015க்குள் மேலும் 880 மெகாவாட்டிற்கான பேரம் கனிந்தது. ஆனால் இந்த பேரங்கள் கிட்டத்தட்ட கடைசி நேரத்தில் கனிந்ததால் அந்தந்த நிறுவனங்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் நிலையம் அமைத்து உற்பத்தியை துவங்க அவகாசம் இல்லாமல் போனது.அதனால் இந்த பேரங்கள் மூலம் கிடைக்கக் கூடிய 352 கோடி ரூபாய்லஞ்சம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டது. அதனால் இந்த திட்டத்தின் காலக்கெடுவை நீட்டிக்க மின்வாரிய உயர் மட்டத்தினர் திட்டமிட்டனர்.

திட்டத்தை நீட்டிக்க வேண்டுமானால் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி வேண்டும். அதற்காக ஆணையத்தில் இருந்த மூன்று பேரில் இரண்டு பேரை அமைச்சர், 'கரெக்ட்' பண்ணி விட்டதாக விஷயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து 'ஒரு யூனிட் 7.01 ரூபாய் கட்டண ஆணை 2016 ஏப்.,1 வரை நீட்டிக்கப்படுகிறது' என 2015 ஏப்., 1ம் தேதி ஒழுங்கு முறை ஆணையம் உத்தர விட்டது. ஆணையத்தில் இருவர் இசைந்து கொடுக்க நாகல்சாமி என்ற உறுப்பினர் மட்டும் 'சூரிய சக்தி மின்சாரம் விலை குறைந்து வரும் நிலையில் ஒரு யூனிட், 7.01 ரூபாய் என்ற விலைக்கு 25 ஆண்டுகள் மின்சாரம் வாங்கினால் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' எனக் கூறி தனி ஆணை வெளியிட்டார். ஆனால் அரசு இதை கண்டுகொள்ளவில்லை.

அவரது முடிவு பற்றி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி 'தினமலர்' நாளிதழுக்கு, நேற்று அளித்த பேட்டியில் ''ரெனியூவபல் பவர் ஆப்லிகேஷன் என்ற ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்த மின் வினியோகத்தில் குறிப்பிட்ட அளவு காற்றாலை சூரிய சக்தி போன்ற மரபுசாரா மின்சாரம் இருக்க வேண்டும். அதில் சூரிய சக்தி மின்சார அளவு, 0.05 சதவீதம் என்றளவில் உள்ளது.
அதன்படி மின் வாரியம் 7.01 ரூபாய் விலையில் அதிகபட்சமாக சூரிய சக்தி மின் கொள்முதலில் 30 மெகாவாட் மட்டும் ஒப்பந்தம் செய்தால் போதும். ஆனால், அதானி நிறுவனத்திடம் மட்டும், 648 மெகாவாட் < ஒப்பந்தம் செய்தது சட்ட விரோதம்,'' என்று தெரிவித்தார்.அதானி நிறுவனம் 2015 ஜூலையிலேயே தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அதன் உற்பத்தி 2015 செப்டம்பர் காலக்கெடுவுக்குள் துவங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லஞ்சம் எவ்வளவு?இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 1,480 மெகாவாட் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 525 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டுஉள்ளது என நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., பிரமுகர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் சமீபகால வருமான வரி ரெய்டுகளில் பறிமுதல் செய்யப்படுவதாக வரும் செய்திகளின் பின்னணியில் ஒரு அமைச்சர் மீது தேர்தல் நேரத்தில் லஞ்ச புகார் எழுந்திருப்பது மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.

இடம் வாங்கியதில் 'மெகா வசூல்!':
சூரிய சக்தி மின் நிலையத் திட்டமெல்லாம் பாராட்டத்தக்கது தான். ஆனால் அதை மக்களுக்குப் பயன்பட விடாமல் செய்தது யார்? இக்கேள்விக்கு கீழே உள்ள தகவல்களில் விடை கிடைக்கும்.ஒரு மெகாவாட் திறன் உடைய சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் தேவை.

விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில், 2014க்கு முன் வரை 1 ஏக்கர் நிலம் சராசரியாக 2 லட்சம் ரூபாய்க்கும் கிராமங்களில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. அந்த இடங்களின் உரிமையாளர்களில் பலர் வெளியூர்களில் வசித்தனர். சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கும் நிறுவனங்களுக்கு அந்த நிலத்தை விற்க மின் துறையின் உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் மூலம் இடத்தின் உரிமையாளர்களை அடையாளம் கண்டனர். பின் அவர்களிடம் இருந்து தேசிய நெடுஞ்

சாலையை ஒட்டி உள்ள இடங்களை சராசரியாக 50 ஆயிரம் ரூபாய்க்கும் கிராமத்தில் உள்ள நிலத்தை 20 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த விலைக்கும் மிரட்டி வாங்கி உள்ளனர்.பின் அந்த நிலத்தை தனியார் நிறுவனங்களிடம் 1 ஏக்கர் ஐந்து - ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். 1 ஏக்கருக்கு சராசரியாக 5 லட்சம் ரூபாய் என வைத்து கொண்டால் 5,000 ஏக்கர் விற்பனை செய்ததன் மூலம் 250 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளனர்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: