வியாழன், 28 ஏப்ரல், 2016

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும்: உச்ச நீதிமன்றம்....

புதுடெல்லி 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். முதல்–மந்திரியாக ஹரிஷ் ராவத் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர். இவர்கள் 9 பேரும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து சட்டசபையில் கடந்த மாதம் அரசின் நிதி மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். எனினும் நிதி மசோதா சட்டசபையில் நிறைவேறியதாக சபாநாயகர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டப்படி நீக்கம் செய்வதாகவும் அறிவித்தார். இதையடுத்து சட்டசபையில் மார்ச் 28–ந்தேதி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி மாநில கவர்னர் கே.கே.பால் உத்தரவிட்டார்.


இந்தநிலையில் ஹரிஷ் ராவத், பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏ.க்களுடன் பணப் பேரம் பேசுவதாக எதிர்க்கட்சி தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் அளித்த அவகாசம் முடிவதற்கு ஒரு நாள் முன்பாகவே(மார்ச் 27–ந்தேதி) மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து ஹிரிஷ் ராவத் சார்பில் நைனிடால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ததுடன், முந்தையை நிலையே தொடரும் என தீர்ப்பளித்தது. மேலும், வருகிற 29–ந்தேதி ஹரிஷ் ராவத் அரசு சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்றும் கூறியது. 

இதையடுத்து உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு ஏப்ரல் 27–ந்தேதி வரை இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர். 

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரிஷ் ராவத் பட்ஜெட் தாக்கல் செய்தபோது அதனை எதிர்த்து 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தபோதே அவர் ஆளும் உரிமையை இழந்துவிட்டதாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து மத்திய அரசிடம் 7 கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கின் மீது முடிவு எடுக்கும்வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடரும் என்றும் 29-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் dailythanthi.com

கருத்துகள் இல்லை: