வியாழன், 28 ஏப்ரல், 2016

விகடன்:அன்றே தப்பித்த அன்புநாதன்... பாஸ்போர்ட்டை முடக்க இப்போது ஏற்பாடாம்?!

ஆன்மிக உள்ளங்கள் தங்களின் ஆக்கினையை குளிர்வித்துக் கொள்ள தேடிவரும் அய்யர்மலைதான் கரூர் மாவட்டத்தின் அடையாளம். கடந்த சில நாட்களாக, 'அன்புநாதன்  ஊராம்பா இது...' என்று கரூர் பக்கம் சுற்றுலா போகிறவர்கள் அடையாளப்படுத்திச் சொல்லும் அளவுக்கு அன்புநாதன் என்ற பெயர் பிரசித்தமாகி விட்டிருக்கிறது.
தேர்தல் பிரசாரப் பயணத்தின் போது, திமுக தலைவர் கருணாநிதி, ' அன்புநாதனோ, அன்பு இல்லாத நாதனோ கைப்பற்றிய பணம் எவ்வளவு என்று மக்களுக்கு சொல்லுங்கள்' என்றதோடு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும்  கோரிக்கை விடுத்தார். ஆளுங் கட்சியான அதிமுகவுக்கு எதிராக நிற்கும் அத்தனை கட்சிகளுமே சிபிஐ விசாரணையைக் கோரியுள்ளன.

கரூரின் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அன்புநாதனின் வீடு, கிடங்கு, தோட்டம் என்று அனைத்து இடங்களிலும், சில நாட்களுக்கு முன்னர் வருமானவரித் துறையினரின் நடத்திய சோதனையும் பிடிபட்ட  கோடிகளும் இதுவரையில் இந்தியத் தேர்தல் ஆணையம்  சந்தித்திராத ஒன்று.
'இன்னும் கொஞ்சம் சீரியசாக  தேர்தல் நேரத்தில் வேலை பார்த்தால், பல லட்சம் கோடிகள் கிடைக்கும் போலிருக்கிறதே'  என்ற எதிர்பார்ப்பில் வருமான வரித்துறை வேகம் காட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆணையமும்  தீவிர விசாரணையை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
அன்புநாதன் மெயின் கேரக்டர் என்று வலிந்து சொல்லப்படுகிறதோ என்ற சந்தேகமும் விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
நாம் கடந்த 24-04-2016 வெளியிட்டிருந்த செய்தியில்,  'அன்புநாதன் பொறுப்பில் இருந்து இத்தனை கோடிகளை கைப்பற்றியிருந்தும் கூட, அவரை சரியாகக் கூட விசாரிக்காமல் தப்ப விட்டிருக்கின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தோம்.
அதே போல் அன்புநாதனின் நண்பரான வேலாயுதம் பாளையத்தை அடுத்த அதியமான் கோட்டையைச் சேர்ந்த மணிமாறன் குறித்தும்,  அவரது வீட்டையும் வருமான வரித்துறையினர் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டதையும் சொல்லியிருந்தோம்.
அன்புநாதன்  கிடங்கில் 10.33 லட்சம் , வீட்டில்  4.77 கோடி ரூபாய்,  ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ்,  பணம் எண்ணக் கூடிய  மெஷின்கள் 12  கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதியமான் கோட்டை மணிமாறன் வீட்டில் எவ்வளவு கிடைத்தது என்ற கேள்விக்கு, எந்த பதிலும் கிடைக்க வில்லை. அதை விட மணிமாறன் இப்போது எங்கே? அன்புநாதன் இப்போது எங்கே என்ற கேள்விகள்தான் பிரதானமாய் எழுந்துள்ளது.
அன்புநாதன் யார் பிடியில் (விசாரணையில் ? ! ) இப்போது இருக்கிறார்  அல்லது எங்கே இருக்கிறார்... என்பதெல்லாம் பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கும்  அடுத்த கேள்விகள்.
மந்திரிகளின் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட அன்புநாதனின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்த விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் உள்ளது தனிக்கதை.
அன்புநாதன் எங்கேயும் தப்பித்துச் சென்று விடாதபடி (?!) அவருடைய நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்களாம் இப்போது. அவருடைய புகைப்படங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும்  கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புநாதனின் செல்போன்கள் இரண்டையும் கைப்பற்றியதோடு, அவருடைய ஐ-பேட் மற்றும் பல தகவல்களை உள்ளடக்கிய டைரி ஆகியவை, விசாரணை அதிகாரிகளின் பிடியில் இருக்கின்றன.
"இப்போது எந்த செல்போன் நம்பரை வைத்து அன்புநாதனுடைய ' டவர்- ஏரியா ' வை வாட்சிங்கில் வைப்பீர்கள் ? மணிமாறனாவது வாட்சிங்கில் இருக்கிறாரா?" என்று பல கேள்விகள் வரிசையாக வந்து நிற்கின்றன.
'ஒன்றல்ல, பல மந்திரிகளின் செயல்பாட்டுக்குப் பின்னால் அன்புநாதனின் செயல்பாடுகள் இருந்திருக்கிறது. தேர்தல் முடிவைப் பொறுத்து, அன்புநாதன் மூலமாக அவர்களின் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விவகாரம் வெளியில் தெரிய வரலாம்.
சென்னையின் பிரபல நகைக் கடையில் அன்புநாதன் மூலமாக இறக்கப்பட்ட  தங்கங்களும், வைரங்களும் வெளியில் வருமா என்றும் தெரியவில்லை' என்கிறது நம்மிடம் பேசிய அந்த டீம்...
என்ன நடக்கிறது?
ந.பா.சேதுராமன் விகடன்.com

கருத்துகள் இல்லை: