செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சார்யா வாதத்தை ரத்து செய்ய கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஆச்சாரியா வாதத்தை ஏற்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா 4 நாட்கள் தனது வாதத்தை முன்வைத்தார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் ரத்னம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எழுதியுள்ள சுயசரிதை நூலில், சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த பல்வேறு விஷயங்களை எதிர்மறையாக குறிப்பிட்டுள்ளார். இதுபோல ஒரு தலைபட்சமாக நடந்து கொள்ளும் ஆச்சார்யா, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராகக் கூடாது என கூறப்பட்டிருந்தது.

  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால், இந்த மனுவை தற்போது விசாரிக்க முடியாது என்று தெரிவித்து, மனுவை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை: