வெள்ளி, 29 ஏப்ரல், 2016

கரூர் டாஸ்மாக்கில் மூவர் பலி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

karur-tasmac-protest-13ரூரில் டாஸ்மாக் பாரில் சாராயத்தை குடித்த திருப்பூரைச் சேர்ந்த துரைசாமி அங்கேயே இறந்துகிடந்தார். மேலும் ஈரோட்டைச் சேர்ந்த கணேசன், பொன்னமராவதியைச் சேர்ந்த கருப்பையா ஆகியோர் டாஸ்மாக் பாரில் சாராயத்தை குடித்துவிட்டு வெளியில் வந்து துடிதுடித்து செத்துக் கிடந்தனர். தமிழகத்தில் நடைபெறும் ஜெயலலிதாவின் சாராய ஆட்சியினால் தினமும் அப்பாவி மக்கள் தங்கள் உயிரை பலி கொடுக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். இதனை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
குடிபோதையால் தமிழ் சமூகமே சீரழிக்கப்பட்டு, பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் எனக் குடிப்பது அதிகரித்துள்ளது. ஒரு கோடிபேர் குடி நோயாளியாக உள்ளனர். லட்சக்கணக்கான பெண்கள் வாழ்க்கையை இழந்து விதவையாக உள்ளனர்.
கடந்த ஓராண்டு காலமாக டாஸ்மாக்கை மூடக் கோரி மக்களும் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றனர். சசிபெருமாள் அநியாயமாக கொல்லப்பட்டார்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை ஒருமாதத்திற்கு மேலாக சிறையில் அடைந்தது இந்த அரசு. மேலப்பாளையூர் விவசாயிகள் ஒருமாதம் சிறை வைக்கப்பட்டனர். கடையை மூடச்சொல்லி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போட்டு கோவை, சென்னை, கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஊருக்கு ஊரு சாரயம் என பாடல் பாடிய கோவனை தேச தூரோக வழக்கில் கைது, மதுவிலக்கை அமல்படுத்து என்ற திருச்சி மாநாட்டில் பேசியதற்காக மக்கள் அதிகாரம்
அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது தேச துரோக வழக்கு இதுதான் ஜெயாவின் டாஸ்மாக் மீதான நிலைப்பாடு. ஆனால் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பிரச்சார உரையின்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சமுகத்தை சீரழித்துவிட்டு வாக்குக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை விட்டெறிந்து மீண்டும் முதல்வராக முடியும் என்ற ஆணவம்தான் இவ்வாறு அவரை பேசவைக்கிறது. எந்த சுயமரியாதை அற்ற அடிமைகளாக இருக்கும் அ.தி.மு.க. கட்சிக்காரர்களை போல அனைத்து மக்களையும் ஏளனமாக நினைத்து வருகிறார். எனவே ஜெயலலிதா எக்காலத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த போவதுமில்லை. மக்களே ஒன்றுபட்டு களத்தில் இறங்கி டாஸ்மாக்கை இழுத்து மூடுவது மட்டுமே இதற்கு தீர்வாகும்.
karur-tasmac-protest-01எனவே டாஸ்மாக்கின் மூலம் மூவர் உயிரை பறித்த இந்த அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக்கோரியும் 26-04-2016 காலை 10.30 மணியளவில் கரூர் பேருந்து நிலையம் தென்புறம் உள்ள தந்தி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கினார்.  பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மேற்படி சம்பவத்தை கண்டித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் தோழர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி தோழர்களை வேனில் ஏற்றினார்கள். பெண்கள், குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்ட தோழர்களை போலீசார் கைது செய்து கரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருநீலகண்டர் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

கருத்துகள் இல்லை: