ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

வங்காளதேச பல்கலைக்கழக பேராசிரியர் படுகொலை.. University English professor hacked to death


வங்காளதேசத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தீவிரவாதிகள் கை வரிசை சந்தேகிக்கப்படுகிறது. தொடர் படுகொலைகள் வங்காளதேசம், முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்ட நாடாக இருந்தபோதும், மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. ஆனால் அந்த நாட்டில் சமீப காலமாக மதச்சார்பற்ற கருத்துகளை வலைத்தளங்களில் எழுதுகிற கட்டுரையாளர்கள், சிறுபான்மையினர், வெளிநாட்டினர் படுகொலை செய்யப்பட்டு வருவது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
கடைசியாக கடந்த 6-ந் தேதி டாக்கா ஜெகநாத் பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவரும், வலைத்தள கட்டுரையாளருமான நஜிமுதீன் சமத் (வயது 28) என்பவர், பல்கலைக்கழக வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை 3 பேர் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்து விட்டு தப்பினர்.


 பேராசிரியர் படுகொலை இந்த நிலையில் வங்காளதேசத்தின் வடமேற்கு நகரமான ராஜ்சாயில், ராஜ்சா பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் ரசூல் கரீம் சித்திக் (வயது 58), நேற்று காலை 7.30 மணிக்கு வழக்கம் போல வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரது பின்னால் வந்து கழுத்தை கத்தியால் சரமாரியாக வெட்டி வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பினர். அலறியவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்த ரசூல் கரீம் சித்திக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னணி என்ன? இந்த கொடூர கொலையை செய்தது யார், கொலையின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இந்த படுகொலை குறித்து ராஜ்சா போலீஸ் கமிஷனர் முகமது சம்சுதீன் கூறும்போது, “பேராசிரியரின் கழுத்தில் 3 முறை வெட்டு விழுந்துள்ளது. கிட்டத்தட்ட அவரது கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விதத்தை பார்க்கிறபோது, இதில் தீவிரவாதிகளின் கைவரிசை சந்தேகிக்கப்படுகிறது” என கூறினார். வங்காளதேசத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி இதுவரை நடந்துள்ள பல்வேறு கொலைகளுக்கு உள்நாட்டு தீவிரவாதிகள்தான் பொறுப்பேற்றனர். இந்த கொலையிலும் உள்நாட்டு தீவிரவாதிகளின் தொடர்புதான் சந்தேகிக்கப்படுகிறது.

 4-வது பேராசிரியர் ரசூல் கரீம் சித்திக்கிற்கு முன்பு அவர் பணியாற்றி வந்த ராஜ்சா பல்கலைக்கழகத்தில் 3 பேராசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே அந்த பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட 4-வது பேராசிரியர் ரசூல் கரீம் சித்திக் ஆவார்.

அவரைப் பற்றி அவரது சக பேராசிரியர் சகாவத் உசேன் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட பேராசிரியர் ரசூல், அருமையாக தம்புரா வாசிப்பார். ‘கோமால் காந்தார்’ என்ற கலைக்குழுவை நடத்தி வந்தார். அதே பெயரில் 6 மாதத்துக்கு ஒரு முறை வெளிவருகிற பத்திரிகையையும் ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார். அவர் ஒரு போதும் மதம் குறித்து வெளிப்படையாக பேசியதும் இல்லை, எழுதியதும் இல்லை” என கூறினார். பேராசிரியர் ரசூல் கரீம் சித்திக் படுகொலை தொடர்பாக ராஜ்சா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.      dailythanthi.com

கருத்துகள் இல்லை: