வியாழன், 13 நவம்பர், 2014

மகாராஷ்ட்ராவில் பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு நிரந்தரமா? மைனோரிட்டி அரசு எல்லாம் கலைஞர் அரசு ஆகுமா?

புதுடில்லி : 'சிவசேனா உடனான கூட்டணி தேவையே இல்லை' என, பாரதிய ஜனதா முடிவு செய்தால், பார்லிமென்டில் சட்டங்களையும், அரசியல் சட்ட திருத்தங்களையும் நிறைவேற்றுவதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பிரச்னைகளை சந்திக்கலாம் என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவசேனா:மகாராஷ்டிராவில், சிவசேனா - பா.ஜ., இடையே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து விட்டது. எதிர்க்கட்சியாக அமர சிவசேனா முடிவு செய்து விட்டது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பாக, சிவசேனா இன்னும் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை.   முதுகில் குத்திய செயல் பா ஜ கவின் செயல். மத்தியில் அசுர பலத்தில் ஆட்சியில் உள்ளதால்..மோடி பெயரை சொல்லி ஓட்டுவேட்டை ஆடிடலாம் என்கிற தப்புக்கணக்கே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். அதனால்தான் இதுவரை இல்லாத அளவுக்கு பா ஜ கவின் ஆதிக்கம் அதிகம் இருக்க காண்கின்றோம். சிவசேனாவை வைத்துதான் பா ஜ க மும்பையில் வளர்ந்துள்ளது. இப்போது வேண்டுமானால் அதனை மறைக்கலாம்..அல்லது மறக்கலாம்..ஆனால் இதுவே உண்மை. பா ஜ கவின் வீழ்சிக்கு மும்பையே ஆரம்பமாக இருக்கும். ஏனென்றால் அவ்வளவு அரசியல் கூத்துகளும் இனி அங்கே நிறைவேறும். குதிரை பேரம் துவங்கப்பட்டு மத்தியில் அப்படி விலைக்கு வாங்கியவருக்கு உடனடியாக மந்திரி பதவி கொடுத்த முறை பா ஜ கவின் அருவருப்பான அரசியலுக்கு சிறந்த உதாரணம்..அதனால்தான் பா ஜ க சிவசேனையின் முதுகில் குத்திவிட்டு இப்போது தவிக்கின்றது...தவறான முன்னுதாரணம்..வீழ்ச்சிக்கு வித்திட்டுவிட்டது பா ஜ க..உறுதியாக..
மகாராஷ்டிரா சட்டசபையில், எதிர்க்கட்சியாக அமர, சிவசேனா முடிவு செய்தாலும், அம்மாநில சட்டசபையில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று விட்டது.பட்நாவிஸ் அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது ஒன்றும் பெரிய விஷயமில்லை. சிவசேனா உடனான கூட்டணி தேவையே இல்லை என, பா.ஜ., மேலிடம் உறுதியான முடிவை மேற்கொண்டால், வரும் நாட்களில், மகாராஷ்டிரா சட்டசபையில் மட்டுமின்றி, பார்லிமென்டிலும் சட்ட மசோதாக்களையும், அரசியல் சட்ட திருத்தங்களையும் நிறைவேற்றுவதில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை இல்லை:



இது தொடர்பாக, அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது: லோக்சபாவில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும், ராஜ்யசபாவில், அந்தக் கட்சிக்கோ, அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கோ பெரும்பான்மை இல்லை. அதனால், இன்சூரன்ஸ் திருத்த மசோதா, நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா, சரக்குகள் மற்றும் சேவை வரிகள் தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதா போன்றவற்றை, பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

பா.ஜ., - சிவசேனா கூட்டணி,மத்தியில் தொடர்ந்தால் மட்டுமே, பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் கூட, மத்திய அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும். உறவை தொடர வேண்டும் இல்லையெனில், பெரும்பான்மை இல்லாமல், சட்ட திருத்த மசோதாக்கள் மற்றும் அரசியல் சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்ற முடியாத நிலைமை உருவாகும். அது, பல வகையிலும், மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.அதனால், தற்போதைய நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பல விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனில், சிவசேனாவின் ஆதரவை தொடர்ந்து கிடைக்கச் செய்வதே புத்திசாலித்தனமாக முடிவாக இருக்கும். வரும் ஆண்டுகளில், ராஜ்யசபாவில், பா.ஜ., - எம்.பி.,க்களின் பலம் அதிகரிக்கும் வரை, சிவசேனா உறவை தொடர்வதே சரியாக இருக்கும்.இந்த விஷயத்தை புரிந்து கொண்டதாலோ என்னவோ, பா.ஜ., உடனான கூட்டணி விஷயத்தில், சிவசேனா விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்கிறது. அதை, பா.ஜ., தலைவர்களும் புரிந்து கொண்டால் சரி.இவ்வாறு, அரசியல் ஆய்வாளர்கள் கூறினர்.

392 பேர் ஆதரவு தேவை



*பார்லிமென்டின் இரு சபைகளிலும், நியமன உறுப்பினர்களையும் சேர்த்து, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 790 (லோக்சபா - 545, ராஜ்யசபா - 245).
*பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, அரசியல் சட்ட திருத்த மசோதாவை, மோடி அரசு நிறைவேற்ற வேண்டும் எனில், 395க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. சிவசேனா உடனான உறவை துண்டித்தால், இதில், 18 எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறையும். அப்போது, தேவையான எம்.பி.,க்களின் ஆதரவு கிடைக்காமல் போகும்.
*அதேநேரத்தில், மும்பை மாநகராட்சியை சிறப்பாக நடத்திச் செல்ல வேண்டும் எனில், சிவசேனாவுக்கு, பா.ஜ.,வின் ஆதரவு தேவை. இல்லையெனில், அங்கும் பல வகையிலும் சிக்கல் உருவாகும்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: