வியாழன், 13 நவம்பர், 2014

ஸ்ரீ ரங்கம் இடைதேர்தலில் சு,சாமி களமிறக்கும் ஆசிர்வாதம் ஆச்சார்யா? ராஜாவுக்கு எதிராக சாட்சி சொன்னவர் ,

திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்று சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்ததால் காலியாகியுள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அத்தொகுதியில் பாஜக சார்பில் ஆசிர்வாதம் ஆச்சாரி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆச்சாரி வேறு யாருமல்ல, முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் முன்னாள் உதவியாளராக இருந்தவர். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவுக்கு எதிராக திரும்பியவரும் கூட. கனிமொழி, ராசாவுக்கு எதிராக வலுவான சாட்சியம் அளித்தவரும் கூட இவர் ராசாவுக்கு திரும்பியதுமே, சுப்பிரமணியம் சாமி பக்கம் வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாஜகவிலும் சேர்ந்துள்ளார் ஆச்சாரி.
சாமியின் சிபாரிசால் பாஜகவில் சேர்ந்த ஆச்சாரி தற்போது அரசியல் வியூகக் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
ஆச்சாரிக்கு திருச்சிதான் சொந்த ஊராகும். பல வருடமாக மத்திய அரசுப் பணியில் இருந்தவர். கடைசியாக ராசாவுக்கு முதுநிலை உதவியாளராக இருந்தார். அதன் பின்னர் ரயில்வே அமைச்சகத்திலும் பணியாற்றியுள்ளார். பின்னர் ராஜினாமா செய்து விட்டு சாமி வழியாக பாஜகவுக்கு வந்து சேர்ந்து விட்டார்.
ஆச்சாரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுத் தரப்பில் முக்கிய சாட்சியாக இருக்கிறார். இவர் ராசாவின் டீல்கள் குறித்து பல முக்கியத் தகவல்களை சிபிஐ கோர்ட்டில் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார் என்பதும் முக்கியமானது
இந்த ஆச்சாரி கலைஞர் டிவியின் முக்கிய மூளையாக திகழ்வதே கனிமொழிதான் என்றும் வாக்குமூலம் அளித்து கனிமொழிக்கு எதிரான வழக்கையும் வலுப்படுத்தியவர். ஆச்சாரியின் இந்த வாக்குமூலத்தை மேற்கோள் காட்டித்தான் முன்பு டெல்லி உயர்நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் அளிக்க மறுத்தது என்பதும் நினைவிருக்கலாம்
தற்போது ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆச்சாரியை பாஜக வேட்பாளராக களம் இறக்க சாமி மும்முரமாக முயன்று வருகிறாராம். ஆனால் தமிழக பாஜக தரப்பில் அதில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை.
ஆச்சாரி குறித்து திருச்சி பாஜகவிலேயே யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒருவர் எங்க கட்சியில், அதுவும் எங்க ஊரில் இருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: