nurses-2  சில என்.ஜி.ஓ பேர்வழிகள் ரோட்டில் சுற்றிக்கொண்டிருப்பவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு போய்விடுகிறார்கள். ஊர் பெயர் தெரியாத அவர்களை இந்த செவிலியர்களும் மருத்துவர்களும் தான் கவனித்துக்கொள்கிறார்கள். சேர்த்து விட்ட என் ஜி வோக்களோ அதை சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக போட்டுவிட்டு வள்ளல் இமேஜை உயர்த்திக் கொள்கிறார்கள். அன்றாடம் நோயாளிகளுக்கு சேவை செய்யும் செவிலியர்களுக்கு அதெல்லாம் கிடையாது.
சமயங்களில் தங்கள் சொந்த காசை கூட செலவழித்து அவர்களை பராமரிக்கிறார்கள். வழியற்ற நோயாளிகள், வயதானவர்களுக்கு உணவு, உடை, கிடைக்காத மருந்துகள் என்று அவ்வப்போது செய்கிறார்கள். எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இதை செய்வதில்லை.
ரசு மருத்துவமனை செவிலியர்களின் பணி குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்ற போது, அரசு செவிலியர்கள் என்றால் சரியான நேரத்திற்கு வேலைக்கு வரமாட்டார்கள், பொறுப்பாக வேலை செய்ய மாட்டார்கள் என்று பொதுப் புத்தியில் உறைந்திருப்பதற்கு மாறாக அனைவரும் சுறுசுறுப்புடன் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். நின்று சில நிமிடங்களுக்கு மேல் பேசமுடியாத அளவுக்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடிக் கொண்டும், நோயாளிகளை பராமரிக்கும் வேலையிலும் மூழ்கியிருந்தார்கள்.

ஆரம்பத்தில் பேசிய ஒரு சிலர் சொல்லி வைத்தாற்போல் ‘மேட்ரனை (தலைமை செவிலியர்) பாருங்கள், நாங்கள் வெளி ஆட்கள் யாரிடமும் பேசக்கூடாது’ என்று கூறினார்கள். ஏதாவது பேசினால் வேலைக்கு ஆபத்து என்று அஞ்சினார்கள். ஜனநாயகம், பேச்சுரிமை என்று  பலரும் பேசினாலும் தனியார் நிறுவனங்களும் சரி, அரசு நிர்வாகமும் சரி தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு வைத்திருப்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
இதையும் மீறி மதியம் உணவு இடைவேளை சமயத்தில் சிலரிடம் பேச முடிந்தது.
அரசு மருத்துவமனைகளில் அரசு நிரந்தர ஊழியர்களான செவிலியர்கள், பெருமளவிலான ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளும் கூட வேலை செய்கின்றனர். செவிலியர் மாணவிகளின் பாடத்திட்டம் செய்முறை வகுப்புகளையே பிரதானமாக கொண்டிருப்பதால் ஏறக்குறைய இவர்களும் செவிலியர் வேலையைத்தான் செய்கிறார்கள்.  ஆண் செவிலியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு.  இவர்கள் போக உதவிச் செவிலியர்களும் உள்ளனர்.
முதலில் உதவி செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். இவர்களது பாடத்திட்டத்தின் படி காலை 7 மணி முதல் 1 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். மதியம் 2-4 வரைதான் வகுப்பறை கல்வி. மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் அதுவும் கிடையாது. முழுநேரமும் மருத்துவமனையில்தான் வேலை. இவர்களுக்கு படிப்பும், வேலையும் வேறு வேறு அல்ல. இதற்காக சம்பளமோ, உதவித் தொகையோ எதுவும் வழங்கப்படுவதில்லை. மாறாக வேலையும் செய்து, கல்விக் கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கிறது. பல கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் இத்தகைய செவிலியர் மாணவர்களே பணிச்சுமையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இவர்களின் பிரதான வேலை மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப நோயாளிகளின் உணவு பழக்கங்களை முறைப்படுத்துவது, நோயாளிகளை பாராமரிப்பது போன்றவை. இது போக செவிலியர்கள் கூறும் பிற வேலைகளையும் செய்கிறார்கள். சமயங்களில் தரையை சுத்தம் செய்யும்  வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. செவிலியர்களுக்கு மூன்று ஆண்டு பட்டய படிப்பு போல, உதவி செவிலியர்களுக்கு ஒரு ஆண்டு பட்டய படிப்பு இருக்கிறது. ஏதாவது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் இவர்கள்.
nurse-caringமருத்துவமனை வேலை எப்படி இருக்கிறது? என்று கேட்டோம்.
“ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. பல்வேறு விதமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வேலை முடிந்து போன பிறகு சரியாக சாப்பிட முடியாது, தூங்க முடியாது. தீயில் கரிந்து வருபவர்களை பார்த்த பிறகு எப்படி சாப்பிட முடியும். நேத்திக்கு நீங்க வந்திருந்தீங்கன்னா இந்த இடத்தில் நின்று பேச முடியாது. அவ்வளவு நாற்றம். இப்போ கூட ஒருத்தர் அட்மிட் ஆகியிருக்காரு பெரிய புண். அதை சுத்தம் பண்ணி விடணும். போகப் போக பழகிருச்சி. இதை மனசுக்கு புடிச்சு தான் செய்யுறோம், வேண்டா வேறுப்பா யாரும் இந்த வேலைய செய்ய முடியாது”
“அன்னிக்கு ஒரு தாத்தா பாட்டி உள் நோயாளியா வந்தாங்க. அவங்க பையன் தான் கொண்டு வந்து சேத்தாரு அதோட சரி அப்புறம் வரதே இல்ல. வயசானவங்கல்ல, இருந்த இடத்திலேயே சிறுநீர், மலம் எல்லாம் போயிருவாங்க. நாங்க தான் பாத்துகிட்டோம். அவங்க போகும் போது என் தலையில் கைவெச்சி நல்லாயிருமானு சொன்னாங்க. இதுக்குமேல என்ன வேணும்” கண்கள் பிரகாசிக்க நெகிழ்ச்சியுடன் கூறினார், அந்த மாணவி.
“மருத்துவர்களை விட நாங்க தான் அதிக நேரம் நோயாளிகளோடு இருக்கிறோம். அதுனால மக்கள் எங்க மேல அன்பா இருப்பாங்க. குணமாகி போனவங்க கூட எதுனா வேலையா இந்த பக்கம் வந்தாங்கன்னா எங்கள பாக்க வருவாங்க. எப்படி இருக்கீங்கனு கேட்டுட்டு போவாங்க. சந்தோசமா இருக்கும்”
“இதையும் மீறி சிலர் எங்களை ‘சம்பளம் வாங்குறீங்கல்ல…’-ன்னு திட்டுவாங்க.  எங்களுக்கு சம்பளம் கிடையாதுனு அவங்களுக்கு தெரியாது” என்கிறார் பாவமாக.
உதவி செவிலியர்களின் நிலைக்கும் செவிலியர்களின் நிலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தற்போது செவிலியர்களை, அரசு மருத்துவமனை வேலைகளுக்கு எடுப்பதில்லை. உற்பத்தி தொழில்களில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி சுரண்டுவது போல மருத்துவத் துறையிலும் ஒப்பந்த முறையில் தான் செவிலியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அரசு ஊழியராக நியமித்தால் அடிப்படை ஊதியம் மட்டும் மாதம் ரூ 19,000 மேல் கொடுக்க வேண்டியிருப்பதால் மாதம் ரூ 5,000 சம்பளத்திற்கு ஒப்பந்த செவிலியர்களை நியமிக்கிறார்கள். சில ஆண்டுகள் வேலை செய்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர்களும் வேலை செய்கிறார்கள். தூண்டிலில் சிக்கிய புழு போலத்தான் இவர்களது நிலையும்.
nurses-strikeசெவிலியர்களுக்கு மூன்று ஷிஃப்டுகள் உள்ளன. காலை 7-1 வரை மதியம் 1-7 வரை இரவு 7-7 வரை என்ற அட்டவணைப்படி பணிபுரிகிறார்கள். இது தான் வரையறுக்கப்பட்ட வேலை நேரம் என்றாலும் இதன்படி கறாராக நடப்பதில்லை. “அவசர கேஸ்னா இருந்துதான ஆகனும். ஆப்பரேசன் தியேட்டர்ல இருக்கோம். மணி ஆயிருச்சின்னு கிளம்பவா முடியும்?. எப்போ முடியுதோ அப்பத்தான் கிளம்ப முடியும். சில சமயம் சீக்கிரமா முடியும். சில சமயம் இரவு வரை இருக்க வேண்டி இருக்கும்” என்றார் ஒரு செவிலியர்.
போதிய ஊழியர்கள் இல்லாததும் இவர்களின் வேலை நேரம் அதிகரிப்பதற்கு ஒரு காரணம். அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். ஆயினும் போதிய செவிலியர்கள், பணிக்கு அமர்த்தப்படுவதில்லை.
30 ஆண்டு அனுபவமுள்ள மூத்த செவிலியர் இதை விளக்கி கூறினார்.
“தம்பி இங்க எல்லாமே பற்றாக்குறைதான். இப்ப பாரு இந்த வார்டுல நாலு மாடி இருக்கு. ஒரு மாடிக்கு இரண்டு நர்ஸ் வெச்சாக்கூட 8 பேர் இருக்கணும். ஆனா நாங்க இரண்டு பேருதான் இருக்கோம். இதுகூட பரவாயில்ல. இரவு பணியில ஒருத்தி மட்டும் தான் இருக்கா. அவ தான் எல்லா நோயாளிகளுக்கும் ஊசி போடனும், ஏதும் அவசர தேவைனா பாத்துக்கனும், புதுசா அட்மிட் ஆகுறவங்களையும் பாத்துக்கணும். எப்படி முடியும். ஆனாலும் பாத்துக்குறோம். எங்க வாழ்க்கையே டென்சன்ல தான் ஓடுது. இதனாலயே எங்க எல்லாருக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழவு நோய் எல்லாம் இருக்கு.”
“வேலைக்கு போதிய ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்க்காமல் புதிய புதிய துறைகளை உருவாக்கிடுறாங்க. மருத்துவர்கள் கொஞ்ச நேரம் பாத்துவிட்டு போயிருவாங்க. நாங்கள் தான் 24 மணி நேரமும் உடன்  இருந்து பார்க்கணும். ஆனா அதுக்கு போதிய ஆட்கள் இல்லை.”
“இதனாலேயே எங்களுக்கு லீவ் கிடைப்பதில்லை. வருசத்துக்கு 34  நாள் லீவிருக்கு. பேப்பர்ல தான் இருக்கும், எடுக்க முடியாது. ஆள் பற்றாக்குறை. இப்போ எல்லோருக்கும் கோடை விடுமுறை, எங்களுக்கு கிடையாது. பசங்களை வீட்டில் வெச்சி வெளியே பூட்டிட்டு வந்திருக்கேன்.”
nurses-struggleஇங்கு கடுமையான பணிச்சூழலுக்குப் பின்னர் வீட்டிற்குச் சென்று வீட்டு வேலைகளையும் இவர்தான் செய்கிறார். “கணவர் உதவி பண்ணிணா நல்லாத்தான் இருக்கும். ஆனா நம்ம கலாச்சாரம் அப்படி இல்லைல. நாங்க தான பாத்துக்கனும்” என்கிறார். முதலாளித்துவ வகைப்பட்ட அரசு சுரண்டல் பணி நிமித்தமும், பார்ப்பன ஆணாதிக்க சமூகத்தின் சுரண்டலை வாழ்க்கை நிமித்தமும் சேர்த்து அனுபவிக்கிறார்கள் நமது செவிலியர்கள்.
கடுமையான பணிச்சுமை, ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகக்குறைந்த சம்பளம், எப்பொழுதும் நோயாளிகளோடு புழங்குவது, தாங்கள் கவனமுடன் பராமரிக்கும் நோயாளிகள் இறப்பது போன்றவற்றால் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள். ஆயினும் கார்ப்பரேட் நிறுவனங்களது நடுத்தர வர்க்க ஊழியர்களின் மன உளைச்சல், மன அழுத்தத்திற்கு இருக்கும் ஊடக மற்றும் வெகுஜன கவனம் இவர்களுக்கு இல்லை. புதிதாக வேலைக்கு வரும்போது மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் இவர்கள் நாளடைவில், இதுதான் வாழ்க்கை என்று பழகிக் கொள்கிறார்கள்.
“கவுன்சிலிங், உடற்பயிற்சி, ஆசனம் மாதிரி ஏதுமில்லையா?”
“அதெல்லாம் தெரியாது. தெரிஞ்சாலும் பண்றதுக்கு நேரமில்லை, காலையில் 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை பாத்துட்டு 7 மணிக்கு மருத்துவமனை வந்துறோம். திரும்ப வீட்டுக்குபோன பிறகும் வீட்டு வேல பாக்கனும். இதுக்கு நடுவுல அதெல்லாம் எப்படி பண்ண முடியும்” என்கிறார்கள்.
“மருத்துவமனை நிர்வாகம் எதுவும் செய்வதில்லையா?”
“நோய் தொற்றிக்கொள்ளாமல் இருக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டி.டி, ஹெப்பாடிடஸ் இன்ஜெக்சன்னு சில தடுப்பூசிகள் போட்டுக்க சொல்லுவாங்க. அவ்வளவுதான்”
nursesநோயாளிகளின் உடனடி தொடர்பில் இருப்பவர்கள் செவிலியர்களே என்பதால் மருத்துவமனையின் செயல்பாட்டில் அதிருப்தி கொள்ளும் நோயாளிகளின் கோபத்திற்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. தங்களின் வேலை அழுத்தங்களுக்கிடையே இதையும் பொறுமையுடன் சமாளிக்கிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருப்பதில்லை. மருத்துவதுறை தனியார் மயமாக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் பாராமுகமாக கைவிடப்பட்டுள்ளதே இதற்கு காரணம். சில சமயங்களில் போதிய மருந்துகள் கூட கைவசம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது  செவிலியர்கள் தான் அதை சமாளிக்கிறார்கள்.
“படுக்கை பிரச்சனை இருக்கு. பற்றாக்குறைனு வரும் போது யாருக்கு அத்தியாவசியமா தேவைப்படுதோ அவங்களுக்கு கொடுக்க சொல்லுவோம். மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு கண்டிப்பா படுக்கை தேவை. அதுனால டிஸ்சார்ஜ் ஆகுற மாதிரி யாராவது இருந்தாங்கன்ன அவங்களை தரையில் படுக்க சொல்லிட்டு இவங்களுக்கு கொடுக்க சொல்லுவோம். இது புரிஞ்சிக்காம மத்த நோயாளிகள் எங்ககூட சண்டை போடுவாங்க. நாங்க என்ன எங்களுக்கா சார் கேக்குறோம். அதை புரிஞ்சிக்காம சண்ட போடுவாங்க. மருத்துவர்கள் இந்த நோயாளிக்கு படுக்கை ஏற்பாடு பண்ணுங்கனு சொல்லிட்டு போயிருவாங்க. நாங்க தான் இவங்க கோவத்தை சமாளிச்சி ஏற்பாடு பண்ணணும். எல்லா சமயமும் ஒரே மாதிரி இருக்க முடியாதுல்ல, சமயத்துல எங்களுக்கும் கோபம் வரும் என்ன செய்றது”
“மருந்து பற்றாக்குறை பொதுவா வருவதில்லை. சில சமயங்களில் நீரிழவு நோய் மருந்துகள் தட்டுப்பாடு வரும். அப்போது வெளியிலிருந்து வாங்க சொல்லுவோம்” என்கிறார்கள் செவிலியர்கள்.
உயர்கல்வி பயின்று சமூக அந்தஸ்துடன் இருக்கும் மருத்துவர்கள், சாதாரண செவிலியர்களான உங்களிடம் எப்படி பழகுகிறார்கள்?
“அவங்களுக்கு காரியம் ஆகணும்னா, வார்டுல நல்லா பேசுவாங்க. வெளியில பாத்தா கண்டுக்க மாட்டாங்க. ஆண், பெண் இரண்டு பேருமே இப்படித்தான். வழிஞ்சி பேசுற ஒரு சில டாக்டர்களும் இருக்காங்க.”
உதவி செவிலியர் ஒருவரிடம் இதை கேட்டபோது “மருத்துவர்கள் எங்களை மரியாதையாக தான் நடத்துவாங்க. எங்களுக்கு “நன்றி” கூட சொல்லுவாங்க” என்றார் பெருமிதமாக.
பணியிடங்களில் பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை சந்திக்கும் பெண்களுக்கு இவர்களும் விதிவிலக்கில்லை.
சில மாதங்களுக்கு முன்பு கீழ்பாக்கம் மருத்துமனையில் ஒரு ஆண் செவிலியருக்கும் பெண் செவிலியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த ஆண் செவிலியரும், நோயாளி ஒருவரும் இணைந்து அப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முயற்சித்திருக்கினறனர். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆண் செவிலியர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை ஒரு செவிலியர் தெரிவித்தார்.
பணியிடத்தில் இவ்வளவு பிரச்சனைகளையும் சந்தித்து வேலை செய்யும் தங்களை சமூகமும், குடும்பமும் மிக மோசமாக பார்ப்பதாக சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.
“பொதுவா நர்ஸ் வேலைனா கல்யாணம் பண்ண யோசிக்குறாங்க. ஏதோ தப்பான வேலை மாதிரி பாக்குறாங்க. இதையும் மீறி, ‘வேலை பாக்குறா, சம்பளம் வரும்னு’ கல்யாணம் பண்ணிக்கிறாங்க. பின்னாடி இரவு வேலைக்கு செல்ல வேண்டியிருப்பது, நர்ஸ் வேலை பற்றி இருக்கும் தவறான பார்வை இவற்றால் குடும்பத்தில் பிரச்சனை வருது. நிறைய விவாகரத்து நடக்கிறது. தற்கொலைகளும் நடக்குது. என்னை பொறுத்த வரைக்கும் நர்ஸ் வேலை பாக்குறவங்க நம்மளை புரிஞ்சிகிட்டவங்களை பாத்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும். இல்லைனா பிரச்சனைதான். ஆனா அதுக்கு வீட்டுல ஒத்துக்கமாட்டாங்க.” என்றார் ஒரு செவிலியர் பயிற்சி மாணவி.
இவர் கூற்றுக்கு ஆதாரமாக அவரிடம் புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாவிடினும் பத்திரிகைகளின் நர்ஸ் ஜோக்குகள், சினிமாவின் மலிவான காமெடிகள் என செவிலியர்கள் பற்றி பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள பார்வையை இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
அனுபவமிக்க செவிலியர்கள் இதை வேறு விதமாக சொல்கிறார்கள். இது  செவிலியர்களுக்கு மட்டுமேயுள்ள பிரச்சனையல்ல, வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்குமான பிரச்சனை என்கிறார்கள்.
“ஆண்களுக்கு தங்கள் மனைவி இரவு பணிக்கு செல்வதும், தங்களைவிட அதிகம் சம்பளம் வாங்குவதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் பிரச்சனை வருகிறது.” என்கிறார்கள்.
பொதுவில் செவிலியர்களிடம் பேசிய போது அவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டு வேலை மீது ஆசை இருப்பதை பார்க்க முடிந்தது. அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த வேலைமுறை, போட்டி தேர்வு போன்ற காரணங்களால் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு பெருமளவு குறைந்து விட்டதே இதற்கு காரணம். இங்கு நாலாயிரத்தும் ஐயாயிரத்துக்கும் சிரமப்படுவதை விடுத்து மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றால் நிறைய சம்பளம் கிடைக்கும் என்கிறார்கள்.
ஆனால் பலர் வெளிநாடுகளில் எவ்வளவு சம்பளம் என்று கூட சரியாக அறிந்திருக்கவில்லை. ஆனால் இங்கு கிடைக்கும் நாலாயிரத்தைவிட நிச்சயம் அதிகம் என்று நம்புகிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு மூன்று ஆண்டு அனுபவம் தேவை. வெளிநாட்டு வேலைக்கு வீட்டில் அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் அதற்கும் போட்டித் தேர்வு எழுத வேண்டியிருப்பதும் இவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது.
அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள், வகுப்பறை பாடங்களை விட செய்முறையாக கற்றுக் கொள்வது அதிகமாக இருப்பதால்தான் போட்டித்தேர்வு குறித்து அஞ்சுகிறார்கள்.
பேசிக்கொண்டிருக்கும் போதே அவசரஊர்தி மணி எழுப்பிக் கொண்டே உள்ளேவர நம்மிடம் விடைபெற்றார்கள்.
மறுகாலனியாக்க கொள்கைகளின் காரணமாக அரசுபொதுமருத்துவமனைகளை அரசு பாராமுகமாக கைவிட்டாலும், அவை ஓரளவு  இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள் தான் முதன்மையான காரணம் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
உதாரணமாக ஒன்றை சொல்லலாம். சமூகசேவை செய்கிறேன் என்ற பெயரில் சில என்.ஜி.ஓ பேர்வழிகள் ரோட்டில் சுற்றிக்கொண்டிருப்பவர்களை அரசு மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு போய்விடுகிறார்கள். ஊர் பெயர் தெரியாத அவர்களை இந்த செவிலியர்களும் மருத்துவர்களும் தான் கவனித்துக்கொள்கிறார்கள். சேர்த்து விட்ட என் ஜி வோக்களோ அதை சமூக வலைத்தளங்களில் புகைப்படமாக போட்டுவிட்டு வள்ளல் இமேஜை உயர்த்திக் கொள்கிறார்கள். அன்றாடம் நோயாளிகளுக்கு சேவை செய்யும் செவிலியர்களுக்கு அதெல்லாம் கிடையாது.
சமயங்களில் தங்கள் சொந்த காசை கூட செலவழித்து அவர்களை பராமரிக்கிறார்கள். வழியற்ற நோயாளிகள், வயதானவர்களுக்கு உணவு, உடை, கிடைக்காத மருந்துகள் என்று அவ்வப்போது செய்கிறார்கள். எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து இதை செய்வதில்லை.
அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இது சாத்தியம். விபத்தில் அடிபட்டவர் தங்கள் ஊழியர் இல்லை என்பதால் தாம் நிறுத்தி வைத்திருக்கும் ஆம்புலன்ஸை அனுப்ப மறுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் இருக்கிறதா என்பதை சோதித்து அறிந்த பின்னரே, சிகிச்சை ஆரம்பிக்க ஒத்துக்கொள்ளும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பற்றி ஏற்கனவே வினவில் எழுதியிருந்தோம். இந்த பணம் புடுங்கி மருத்துவமனைகளை ஒழித்து சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அரசு மருத்துவமனைகளை பாதுகாக்க வேண்டியதன் தேவையை கண்கூடாக அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த அரசு மருத்துவமனைகளும் இத்தகைய செவிலியர்களும் இல்லை என்றால் நமது மக்கள் அன்றாடம் காக்கை குருவி போல கேட்பாரின்றி வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் நீங்கள் அரசு மருத்துவமனைகளை பார்த்து வரவே செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு கிடைத்திருக்கும் இந்த ஆடம்பர வாழ்க்கை என்பது இத்தகைய ஏழைகளிடமிருந்து எடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டு குற்ற உணர்ச்சி அடைய முடியும்.
-    வினவு செய்தியாளர் குழு.
(மாதந்தோறும் வினவு செய்தியாளர் குழு இப்படி ஒரு பிரிவினரிடம் நேரில் சென்று கள ஆய்வு நடத்தி எழுதி வெளியிடுகிறோம். இதில் நீங்களும் கலந்து கொள்ள விருப்பமா? இப்போதைக்கு சென்னை, பெங்களூரு நண்பர்கள்  தொடர்பு கொள்ளுங்கள் vinavu@gmail.com)