சென்னை: சமூக வலைத்தளங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த சர்ச்சை
வெடித்துள்ள நிலையில், இந்தியாவுக்கென்று பிரத்யேக தேசிய மொழி கிடையாது
என்ற தகவல் பலருக்கும் தெரியாமல் உள்ளது. ஆனால் இந்த தகவலை
உறுதிபடுத்தியிருப்பது மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் உயர்நீதிமன்றம்
என்பது இதில் மேலும் ஆச்சரியமான தகவலாகும்.
குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2009ம் ஆண்டு, சுரேஷ் கச்சாடியா என்பவர் ஒரு
பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "இந்தியாவின்
தேசிய மொழி இந்தி. நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்திதான் பேசுகிறார்கள்.
எனவே, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அட்டையின்மீது இந்தி
மொழியில் அப்பொருள் குறித்த விவரங்களை பொரிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
குறிப்பாக, பொருட்களின் விலை, பொருளின் உள்ளடக்கம், தயாரிப்பு தேதி போன்றவை
இந்தியில் எழுதப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டால்தான் பெருவாரியான
மக்களுக்கு தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும்"
என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி எஸ்.ஜே.முகோபாத்யாயா இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
விசாரணையில் வாதவிவாதங்களை கேட்ட கோர்ட், 2010ல் வழங்கிய தனது
தீர்ப்பின்போது, "இந்திதான், இந்தியாவின் தேசிய மொழி, அதுதான் அலுவல் மொழி,
என்பதற்கான ஏதாவது அறிவிக்கைகள் வெளியாகியுள்ளனவா? இதுதொடர்பான அரசாணை
கோர்ட்டில் தாக்கல்செய்யப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியை
ஒரு அலுவல் மொழியாக மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, தேசிய மொழியாக கிடையாது.
எனவே, உற்பத்தியாளர்களுக்கோ, அரசுக்கோ, தயாரிப்பு பொருட்களின்மீது
இந்தியில் கட்டாயமாக பொருள் குறித்த விவரம் எழுதப்பட வேண்டும் என்று
உத்தரவிட முடியாது" என்று தீர்ப்பளித்தது.
தேசிய மொழி அந்தஸ்தில் இல்லாத இந்தியும், பிற மொழிகளைப்போலதான் கருதப்பட
வேண்டும். எனவே இந்தியை அரசு நடைமுறைகளில் கட்டாயப்படுத்த முடியாது
என்பதையும், இந்த தீர்ப்பு அறுதியிட்டு கூறியுள்ளது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக