திங்கள், 16 ஜூன், 2014

இந்திய குடியுரிமைக்கு காத்திருக்கும் பாகிஸ்தானிய பெண்கள் !

லக்னோ : வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அழைப்பு விடுத்தார். மோடியின் அழைப்பை ஏற்று ஷெரீப்பும் பலவித எதிர்ப்புக்களை மீறி மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதுடன், இரு நாட்டு பிரதமர்களும் கை குலுக்கி தங்களின் நட்புறவை பகிர்ந்து கொண்டனர். இச்சம்பவம் இந்திய குடியுரிமை பெற்று, இந்திய மணமகன்களை திருமணம் செய்வதற்காக காத்திருக்கும் பாகிஸ்தான் மணமகள்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
மோடி, பாகிஸ்தானுடன் நட்புறவை பெற விரும்புவதால் தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என சுமார் 356 பாகிஸ்தான் மணப்பெண்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் பெண்கள், இந்தியர்களை திருமணம் செய்து கொண்டு சட்டவிரோதமாக இங்கு தங்கி இருப்பதாக உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய ஆண்களை திருமணம் செய்து கொள்வதற்காக இந்திய குடியுரிமை பெறுவதற்கு முறைப்படி விண்ணப்பித்து 356 பாகிஸ்தான் பெண்கள் மட்டுமே காத்திருப்பதாகவும் உ.பி., அரசு தெரிவித்துள்ளது. உ.பி.,யின் அனைத்து மாவட்டங்களிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்கள் இருப்பதாகவும். ஆனால் அதிகபட்சமாக அலிகார் பகுதியில் மட்டும் 42 பெண்கள் இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்காக முறைப்படி விண்ணப்பித்துள்ளனர்.

சட்டவிரோதமாக உ.பி.,யில் தங்கி இருக்கும் பாகிஸ்தானிய பெண்கள் குறித்த பெரும்பாலான தகவல்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய அரசின் முடிவு வந்த பிறகு நடவடிக்கை எடுக்க காத்திருப்பதாகவும் உ.பி., உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்து நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கும் மணப்பெண்களின் குடும்பத்தினர் தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகள் முடிவுக்கு வந்து, நல்லதொரு நட்புறவு ஏற்பட வேண்டும் எனவும், அவ்வாறு நடந்தால் பாகிஸ்தான் பெண்கள் இந்திய குடியுரிமை பெற்று இந்தியர்களை மணந்து கொள்ளும் காலம் வெகு விரைவில் வரும் எனவும் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள வியாபாரியான பர்வேஸ் ரகுமான் சித்திக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த பர்வேஸ், 2004ம் ஆண்டு இந்தியா வந்து இந்திய பெண்ணான ஷாம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் நீண்டநாள் விசா பெற்று, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பித்தும் வருகிறார். இவர் மோடி பற்றி கூறுகையில், மோடி மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்; தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு சார்க் நாட்டு தலைவர்களை அழைத்து, அண்டை நாடுகளுடனான நட்புறவை அவர் வலுப்படுத்தியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; இது எங்களுக்கு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது; பா.ஜ., ஆட்சி காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நட்பு சிறப்பானதாக இருந்துள்ளது தெரிந்த விஷயம் தான் என தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டில் பாகிஸ்தானின் குஜராத்தில் உள்ள குட்ச் பகுதியைச் சேர்ந்த சுமார் 3000 குடும்பத்தினர்கள் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர். இதன் பிறகு, இப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் பாகிஸ்தான் இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து, இப்பகுதியில் வசித்த பெரும்பாலான இந்துக்கள் தங்களின் வறுமை நிலையை போக்கிக் கொள்ள இந்திய எல்லை பகுதிக்கு குடியேறினர். தங்களுக்கு நிரந்தர இந்திய குடியுரிமை கிடைப்பதற்கு மோடி உதவுவார் என இப்பகுதி மக்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இந்துக்களுக்கு மட்டுமே தற்போது குடியுரிமை பெறும் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது. ஆனால் இரு நாட்டு உறவும் பலப்பட்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக போக்கு நிலவினால் அனைத்து மதத்தினரும், இரு தரப்பிலும் திருமண உறவுகளை தொடர முடியும் என பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யைச் சேர்ந்த அன்வர் ஹூசைன் என்ற வழக்கறிஞர், ரேஹானா என்ற பாகிஸ்தானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வந்து சென்றதால், இந்திய குடியுரிமை பெறும் தனது விண்ணப்பம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து ரேஹானா கூறுகையில், இரு நாட்டு பிரதமர்களும் கை குலுக்கிக் கொண்டதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; இரு நாடுகளுக்கு இடையே உள்ள பனிக்கட்டி நிச்சயம் உருகும்; நானும் விரைவில் முறைப்படி இந்திய குடியுரிமை பெறுவேன்; அந்த நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது என தெரிவித்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: