சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் இருந்து
சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட பி.எஸ்.என்.எல். இணைப்புகளால் சன் டி.வி.
நிறுவனம் மிகப் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்தது
என்று சி.பி.ஐயிடம் அதன் முன்னாள் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா வாக்குமூலம்
அளித்துள்ளார்.
சென்னை போட் கிளப்பில் உள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்
தயாநிதிமாறனின் வீட்டிலிருந்து, அதிநவீன வசதி கொண்ட பி.எஸ்.என்.எல்.லின்
323 இணைப்புகள் முறைகேடாக சன் டிவிக்கு வழங்கப்பட்டது என்பது புகார்.
இதனால் சுமார் ரூபாய் 440 கோடி அளவுக்கு பி.எஸ்,என்.எல்லுக்கு இழப்பு
ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, தயாநிதிமாறன் தனது சகோதரரின் நிறுவனம் பலனடையும் வகையில்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை
நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் இந்த வழக்கு
அண்மையில் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்னையில்
முகாமிட்டிருந்தனர். அப்போது சன் டிவியின் முன்னாள் நிர்வாகிகள் ஹன்ஸ்ராஜ்
சக்ஸேனா, சரத் ரெட்டி மற்றும் ஏராளமான தொழில்நுட்ப ஊழியர்களிடம் துருவி
துருவி விசாரணை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து சக்ஸேனா உள்ளிட்டோர் டெல்லிக்கும் வரவழைக்கப்பட்டு
விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். அப்போது சி.பி. ஐ அதிகாரிகளிடம், சன்
டி.வி.யில் நிகழ்ச்சித் தயாரிப்பு பிரிவில் நான் வேலை பார்த்தேன்
ஒளிபரப்பு தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது. சன் டி.வி.யில்
முன்னதாக இருந்த 50 இணைப்புகள் அவ்வப்போது செயலிழந்துவிடும். இந்தப்
பிரச்னையை சன் டி.வி. தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன் (டெக்னிக்கல்
கண்ணன்) தீர்த்து வைப்பார்.
ஆனால் பி.எஸ்.என்.எல்.-ன் ஐ.எஸ்.டி.என் இணைப்புகள் கிடைத்த பின்னர்தான் சன்
டிவி நிர்வாகத்தில் மிகப் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட்டது என்று சக்ஸேனா
கூறியுள்ளார்.
அத்துடன் தம் மீதான வழக்குகள் பற்றியும் சக்ஸேனா, சிபிஐ அதிகாரிகளிடம்
விவரித்திருக்கிறார். "என் மீது 22 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் ஒரு
வழக்கு திண்டுக்கல்லில் மோட்டாரைத் திருடியாகக் கூறப்பட்டுள்ளது. ரூ.700
மதிப்புள்ள மோட்டாரை நான் திருடுவேனா? என் வாழ்க்கையில் திண்டுக்கலுக்கு
சென்றதே இல்லை.
இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணைக் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைக்க
வேண்டும். ஏதாவது ஒரு வழக்கில் நான் குற்றவாளி என்று அந்த கமிட்டி
கூறினாலும் நான் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.
மேலும் சென்னையில் செக்கர்ஸ் ஹோட்டலில் நான் தாக்குதல் நடத்தியதாக
குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்த வீடியோ ஆதாரம் என்னிடம்
உள்ளது. அது யாருக்காக நடத்தப்பட்டது என்பது அதில் உள்ளது. தேவைப்படும்போது
இதை அளிக்க தயாராக உள்ளேன் என்றும் சக்ஸேனா கூறியுள்ளார்.
/tamil.oneindia.in
/tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக