மலையாளத்தில்
வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ’சால்ட் அண்டு பெப்பர்’ திரைப்படத்தை
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்
பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடிகை சினேகா மற்றும் ஊர்வசி,
ஐஸ்வர்யா, தம்பி ராமையா ஆகியோர் உன் சமையல் அறையில் திரைப்படத்தில்
நடித்திருக்கின்றனர்.தொல்பொருள்
ஆய்வாளராக பணியாற்றும் பிரகாஷ் ராஜ், ஆய்வு செய்வதிலேயே தனது இளமைக்
காலங்களை கழித்துவிடுகிறார். சிற்பங்களை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல்,
உணவையும் ஆய்வு செய்து ருசியாக சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர் பிரகாஷ்
ராஜ். பெண் பார்க்கச் சென்ற இடத்தில் பெண்ணைப் பார்க்காமல் அருமையான
வடையைச் சுட்ட தம்பி ராமையாவை தன் வீட்டிற்கு சமையல்காரனாக
அழைத்துவந்துவிடும் அளவிற்கு உணவின் மீது பிரியம் கொண்டவர்.
படத்தின்
கதாநாயகியான சினேகாவிற்கு செவ்வாய் தோஷம், நாக தோஷம் இருப்பதால் திருமணம்
தட்டிக் கழித்துக் கொண்டே செல்லும். ஒரு நாள் தோசை சாப்பிட ஆசைப்பட்டு
ஹோட்டலுக்கு ஃபோன் செய்வதற்கு பதில், சினேகா பிரகாஷ் ராஜுக்கு ஃபோன்
செய்துவிடுவார். சினேகா ஆர்டர் கொடுக்க ’இது ஹோட்டல் இல்லை’ என பிரகாஷ்
ராஜ் சொல்ல, ’இதை முன்பே சொல்லவேண்டியது தானே?’ என சினேகா சொல்ல
இருவருக்குமிடையே கடும் வார்த்தை மோதல்கள் நிகழும். பிறகு கோபத்தில் அதிகம்
பேசிவிட்டோமே என பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்கிறார்.
பதிலுக்கு
சினேகாவும் மன்னிப்புக் கேட்க, மோதலுக்குப் பின் காதல் தானே! தோசையால்
அறிந்துகொண்ட இவர்கள் இருவருக்கும் பலவகை உணவுகளைப் பற்றிய பேச்சு
நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு சமயத்தில் நேரில் சந்திக்க முடிவெடுக்கும்
இருவருக்கும், அவர்கள் வயது பற்றிய தாழ்வு மனப்பான்மை தலைதூக்கிவிடுகிறது.
நேரில்
பார்த்து பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வது என்ற அச்சத்தால், பிரகாஷ்
ராஜ் தனது அக்கா மகனையும், சினேகா தன்னுடன் தங்கியிருக்கும் இளம்பெண்ணையும்
அனுப்பிவைக்கிறார். நேரில் சந்தித்துக் கொள்ளும் சின்னஞ்சிறுசுகள்
இருவருக்கும் காதல் பற்றிக்கொள்வது தான் டுவிஸ்ட். அந்த இளம் காதல் ஜோடிகள்
சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜும் சினேகாவும் சேர்ந்தார்களா? என்பது
க்ளைமாக்ஸ்.
பிரகாஷ்
ராஜைப் பொருத்தவரையில் வழக்கமான, சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தியிருக்கிறார். பிடித்த உணவை ருசித்து சாப்பிடும் போது
வாலிபனாகவும், காதோரம் இருக்கும் வெண்முடியைப் பார்த்து முகம் சுளிக்கும்
போது முதிர்ச்சியடைந்தவராகவும் அருமையாக வித்தியாசம் காட்டி
நடித்திருக்கிறார்.
சினேகா!
பெரிய கண்ணாடி, இறுக்கம் இல்லாத ஆடை என சினேகாவை அதிக வயதுடையவராகக்
காட்டவேண்டும் என்பதற்காக பிரகாஷ் ராஜ் எவ்வளவோ முயன்றிருக்கிறார். ஆனால்
தனது டிரேட்மார்க் சிரிப்பின் மூலம் அவ்வப்போது பளிச்சிடுகிறார் சினேகா.
சால்ட்
அன்ட் பெப்பர் திரைப்படத்தை பார்த்துவிட்டதாலோ என்னவோ மற்ற
கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
பிரகாஷ்
ராஜும் சினேகாவும் கேக் செய்யும் காட்சிகளும், தங்களுக்குள் காதல்
வந்துவிட்டதை உணர்ந்து இருவரும் வெட்கப்படும் காட்சியும் க்ளாஸ்.
காட்டுவாசியாக வரும் அந்த பெரியவர் ஒரு வசனமும் பேசாவிட்டாலும்,
முகபாவனைகளால் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
’இந்த
பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது’ பாடலும், இளையராஜாவின்
குரலில் ஒலிக்கும் ’காற்று வெளியில் உனை கூவி அழைக்கிறேன்’ என்ற பாடலும்
கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கின்றன.
காட்சிகளில்
தோன்றும் கோபம், மகிழ்ச்சி, வருத்தம் யாவும் இளையராஜாவின் இசையிலும்
எதிரொலிப்பது சிறப்பு. கேக் செய்யும் காட்சியில் வரும் பின்னணி இசையும்,
காட்சியமைப்பும் நம்மையறியாமல் நம் வாயை கேக் சாப்பிட திறக்க வைக்கின்றன.
ஆபாசம்
இல்லாமல் ஒரு நல்ல தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த படத்தை
தமிழில் எடுத்ததாக பிரகாஷ் ராஜ் பெருமைப்பட்டுக்கொள்வது பொருத்தமானது தான்.
காதல் என்றதும் காமத்தை முன்னிறுத்தாமல் காதலை காதலாகவே காட்டியிருக்கிறது
உன் சமையல் அறையில்...
உணவை
உணவாக பார்க்காமல் ஒரு உணர்வாக பார்க்க வேண்டும். உயிர் வாழ்வதற்காக
உண்கிறோம் என்பதைத் தாண்டி உணவின் மூலம் பல நல்ல உறவுகளும் கிடைக்கும்
என்றும் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். உன் சமையல் அறையில் படம்
பார்த்த பலருக்கும் உணவை மென்று தின்ன வேண்டும் என்ற ஆசை வந்திருக்கும்.
அதே போல் ஒரு படம் பார்த்தோம், முடிந்துவிட்டது என்று நினைக்காமல் ஒவ்வொரு
காட்சியையும் நிதானமாக மென்று ருசிக்கலாம்.
உன் சமையல் அறையில்... - சுவைக்கிறது! cinema.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக