திங்கள், 9 ஜூன், 2014

பாஜக சர்வம் மோடிமயமாகிறது ? பெருசுகளுக்கு கவர்னர் பதவி ! கட்டாய ஒய்வு ?

பாஜக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா போன்ற மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் ஜஸ்வந்த் சிங், லக்னெள தொகுதி முன்னாள் எம்.பி. லால்ஜி தாண்டன், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் கைலாஷ் ஜோஷி மற்றும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கேசரிநாத் திரிபாதி ஆகியோரும் ஆளுநர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
இவர்களில் கான்பூர் தொகுதி எம்.பி.யான முரளி மனோகர் ஜோஷிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. கல்யாண் சிங் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.

இந்த ஆண்டில் மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கர்நாடக ஆளுநர் பரத்வாஜ், ஹரியாணா ஆளுநர் ஜகன்னாத் பஹாடியா, திரிபுரா ஆளுநர் தேவானந்த் குன்வர் மற்றும் ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா ஆகியோரது 5 ஆண்டு பதவி காலம் 3 மாதங்களில் நிறைவடையவுள்ளது.
இவர்களில், பரத்வாஜும், மார்கரெட் ஆல்வாவும் மாநில அரசுடன் இணக்கமான உறவினை கொண்டுள்ளனர்.
மேலும், குஜராத் ஆளுநர் கமலா பேனிவால், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன், அஸ்ஸாம் ஆளுநர் ஜே.பி.பட்நாயக், பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் பாட்டீல் மற்றும் ஹிமாசல பிரதேச ஆளுநர் ஊர்மிளா சிங் ஆகியோரும் 5 ஆண்டு பதவிக்காலத்தை அடுத்த 6 முதல் 8 மாதங்களில் நிறைவு செய்யவுள்ளனர்.
குஜராத்தில் லோக் ஆயுக்தவை அமல்படுத்துவது தொடர்பாக அப்போதைய முதல்வர் மோடியுடன் பேனிவாலுக்கு சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டன.
கேரள ஆளுநர் ஷீலா தீட்சித், ஜம்மு-காஷ்மீரில் இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆளுநராக நியமிக்கப்பட்ட என்.என்.வோரா, மணிப்பூர் ஆளுநர் வி.கே.துக்கல், உத்தரப்பிரதேச ஆளுநர் பி.எல்.ஜோஷி, கோவா ஆளுநர் பி.வி. வாஞ்சூ, மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கர நாராயணன், தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. dinamani.com

கருத்துகள் இல்லை: