
ஆனால், ஆளும்கட்சியோடு கடுமையான மோதல் ஏற்பட்டுவிட, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகினார்விஜயகாந்த்.இதனால், வெறுப்படைந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களில் பலர், ஆளும்கட்சி ஆதரவு நிலை எடுத்து, செயல்பட ஆரம்பித்தனர். கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திர னும் கட்சியை விட்டு விலகி, அ.தி.மு.க,வில் இணைந்தார்.இந்த சூழ்நிலையில், லோக்சபா தேர்தல் வர, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் கட்சி படு தோல்வி அடைந்தது. ஓட்டு வங்கியிலும் பெரும் சரிவு ஏற்பட்டது.
இதனால்,கட்சிக்கு எதிர்காலம் இல்லை என முடிவெடுத்து, கட்சி நிர்வாகிகள், லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆகியோர், மாற்று முகாம் தேடி செல்வதற்கு ஆயத்தமாவதாக தகவல் பரவியது. அதனால், கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து விடலாம் என்கிற யோசனை, விஜயகாந்துக்கு சொல்லப்பட, அது குறித்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.ஆனால், விஜயகாந்த இந்த முயற்சிக்கு திடீர் என, முட்டுக்கட்டை போட்டு விட்டதாக, கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது.
விஜயகாந்தின் திடீர் மனமாற்றம் குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்களில் கூறியதாவது:
ஏற்கனவே எம்.ஜி.ஆர்., பெயரில் தனிக்கட்சி நடத்தி வந்த முன்னாள் அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர், கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்தார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கூட அங்கே அவரால், முக்கியத்துவத்துடன் செயல்பட முடியவில்லை. இதனால், அவர் அங்கிருந்து வெளியேறி காங்கிரசில் இணைந்தார். எல்லோரையும் எளிதில் அனுசரித்துப் போகக்கூடிய அவராலேயேபா.ஜ.,வுக்குள் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்போது, விஜயகாந்த் போன்ற முன் கோபியால், நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்க முடியாது.
பட வேலை முடிந்ததும்...
இந்த விஷயத்தை பலரும் விஜயகாந்திடம் எடுத்துச் சொன்னார்கள். அதன்பின் தான், அவர் பா.ஜ.,வில் கட்சியை இணைக்கும் எண்ணத்தை, மொத்தமாக மாற்றிக் கொண்டு விட்டார். கட்சியை மறுசீரமைக்கும் எண்ணத்தில் இருக்கிறார். மகன் நடிக்கும், 'சகாப்தம்' பட வேலைகள் முடிந்ததும், கட்சியை சீரமைக்கும் பணியில் இறங்குவார். இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
-நமது சிறப்பு நிருபர்- dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக