செவ்வாய், 10 ஜூன், 2014

காவியிருளில் எல்லா அதிகாரங்களையும் தானே கையிலெடுத்துக் கொள்ளும் மோடி?

மோடி - முதலாளிகள்தச்சார்பின்மையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையே தந்திருக்கின்றன. எனினும் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் இப்படி ஒரு முடிவின் தவிர்க்கவியலாமையை நாம் புரிந்து கொள்ள முடியும். தேர்தல் பிரச்சாரத்தின் முதல் சுற்றிலேயே தான் படுதோல்வி அடையவிருப்பதை காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ ஒப்புக் கொண்டு விட்டது. ஒருவேளை பாரதிய ஜனதா கட்சிக்குப் பதிலாக மாநிலக் கட்சிகள் பெரும்பான்மை பெற்று கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், அது விரைவிலேயே பதவிச் சண்டைகளால் தன்னைத்தானே கவிழ்த்துக் கொண்டு, ”வலிமையான நிலையான மோடியின் ஆட்சி” வருவதற்கு இப்போது உள்ளதைக் காட்டிலும் உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும்.
பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றிராமல், அ.தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட ”மதச்சார்பற்ற” கட்சிகளின் ”தயவில்” ஆட்சி அமைத்திருந்தால் அக்கட்சிகள் மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும்  கடிவாளம் போட்டிருப்பார்கள் என்று நாம் நம்புவதற்கு இடமிருக்கிறதா?
குறைந்தபட்ச செயல்திட்டமொன்றை அறிவித்து இயங்கிய ”மிதவாதி” வாஜ்பாய் ஆட்சியில்தான் இந்துத்துவ பாடத்திட்டத் திணிப்பு முதல் கார்கில், நாடாளுமன்றத் தாக்குதல், கிறித்தவர்கள் மீதான தாக்குதல், குஜராத் படுகொலை வரையிலான அனைத்தும் அரங்கேறின. ஆகவே, மாநிலக் கட்சிகள் எனப்படுபவை தாங்கள் அளிக்கும் ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகளையோ, இன்ன பிறவற்றையோ கேட்டிருக்குமேயன்றி, இந்துத்துவக் கொள்கையை விட்டுக் கொடுக்கும்படி மோடியிடம் கேட்டிருக்கப் போவதில்லை. மொத்தத்தில், ஆட்சியதிகாரத்தில் அமர விடாமல் மோடியைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குள் இல்லை என்பதே உண்மை.
காங்கிரசைப் பொறுத்தவரை அது பாரதிய ஜனதாவின் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளுக்கு எல்லாக் காலங்களிலும் துணை நின்றிருக்கிறது; மோடி, அத்வானி உள்ளிட்ட எல்லா குற்றவாளிகளையும் காப்பாற்றி விட்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. மாநிலக் கட்சிகளோ பல சந்தர்ப்பங்களில் பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. ”மதச்சார்பின்மை” என்பது இக்கட்சிகளுடைய முகமூடியே அன்றி முகமல்ல என்பதால், இவர்களை மதச்சார்பின்மையின் காவலர்களாக எண்ணி மயங்குவதிலோ, இவர்கள் மோடியைக் கட்டுப்படுத்தி விடுவார்கள் என்று கனவு காண்பதிலோ பொருளேதும் இல்லை.
மேலும், மோடியின் வெற்றியை ”மதச்சார்பின்மைக்கு ஆபத்து” என்ற கோணத்தில் மாத்திரம் அணுகுவதும் தவறு. இது காங்கிரசின் மிதவாத இந்து மதவாதத்தையும், பிற கட்சிகளின் மதச்சார்பின்மை வேடத்தையும், காங்கிரசு உள்ளிட்ட எல்லாக் கட்சிகளாலும் அமல்படுத்தப்படும் மறுகாலனியாக்க கொள்கைகளையும் மறைமுகமாக அங்கீகரிப்பதாகி விடும்.
இந்திய தரகு முதலாளிகள், தங்களது மறுகாலனியாக்கக் கொள்ளையைத் தீவிரமாகவும் தடையின்றியும் நடத்துவதற்கான உத்திரவாதமாகவும், எதிர்ப்புகளைப் பிளந்து அழிக்கும் ஈட்டியாகவும் பார்ப்பன பாசிச மோடியை மதிப்பிடுகிறார்கள். மோடியின் ஆட்சி என்பது பார்ப்பன பாசிசத்தின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் மூலதனத்தின் சர்வாதிகாரம். மோடியின் இந்த உண்மை முகத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதனால்தான் மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்க கொள்கைகளால் பாதிக்கப்பட்டு குமுறிக் கொண்டிருந்த மக்கள், காங்கிரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது என்ற பெயரில், எண்ணெய் சட்டியிலிருந்து தப்ப முயன்று எரியும் அடுப்புக்குள் விழுந்திருக்கிறார்கள்.
சார்க் தலைவர்களுடன் மோடி
“சக்கரவர்த்தி’ மோடியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட தெற்காசிய ‘குறுநில மன்னர்கள்’
தனது தீய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மந்திரவாதியால் உருவாக்கி ஏவி விடப்படும் பூதத்தைப் போல, இந்திய தரகு முதலாளி வர்க்கத்தால் மக்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் தீய சக்தியே மோடி. இதனைப் புரிந்து கொள்ளாமல், ”மோடி பிரதமராகியிருப்பது குறித்து கவலைப்படவேண்டிய வர்கள் சிறுபான்மை மக்களே” என்று யாரேனும் எண்ணிக்கொண்டிருந்தால், அவர்களுடைய தப்பெண்ணத்தை அகற்றி, ”நான் உங்கள் அனைவரின் எதிரி” என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்குத் தனது நடைமுறையின் மூலம் மோடி விரைவிலேயே புரிய வைப்பார்.
***
ளும் வர்க்க ஊடகங்களால், ஒரு மசாலா கதாநாயகனைப் போல இந்தியா முழுவதும் மேடையேற்றப்பட்ட மோடி என்ற முப்பரிமாண ஹோலோகிராம், தனது பேராற்றல் குறித்துத் தானே கொண்ட மயக்கத்தினால், இந்த தேசத்தைக் காக்க வந்த மீட்பனாகத் தன்னைக் கருதிக்கொண்டு உணர்ச்சி வயப்பட்டுக் கண்ணீர் விடுகிறது. ஆனால், இந்துக் கடவுளர்களைப் போல மோடிக்கு முதுகுப் பக்கம் கை முளைத்தால் மட்டுமே, இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்று  முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே எள்ளி நகையாடுகின்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன? உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாக ஏற்றுமதி வாப்புகள் சுருங்கி விட்டதாலும், பணக்கார வர்க்கத்தையும், மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட உள்நாட்டு நுகர்பொருள் சந்தை விரிவடைய வழியின்றித் தேங்கி நிற்பதாலும், தொழில் உற்பத்தி துறைகள் அனைத்தும் தேங்கிக் கிடக்கின்றன. முதலாளிகளுக்கும் நுகர்வோருக்கும் குறைந்த வட்டியில் கடனை வாரி வழங்குவதற்கு பணவீக்கம் தடையாக இருக்கிறது. வட்டி வீதத்தைக் குறைத்தால், அது பணவீக்கத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, அந்நிய நிதி மூலதனத்தின் வெளியேற்றத்துக்கும் வழி வகுக்கும். முதலாளி வர்க்கம் விரும்பும் வரிச்சலுகைகளையும் ஊக்கத்தொகைகளையும் வாரி வழங்க இயலாமல் பட்ஜெட் பற்றாக்குறை மோடியை தடுக்கும். கிரெடிட் சூயிஸ் என்ற முதலீட்டு வங்கியின் ஆகஸ்டு 2013 அறிக்கையின்படி, அரசுடைமை வங்கிகளின் வாராக்கடன் 6.3 இலட்சம் கோடி ரூபாய். கடனாளிகளில் மோடியின் புரவலர்களான அதானி, அம்பானி, எஸ்ஸார், வேதாந்தா உள்ளிட்ட தரகு முதலாளிகளும் அடக்கம். தங்களுடைய கடனில் குறைந்தபட்சம்  3 இலட்சம் கோடியைத் தள்ளுபடி செய்யுமாறு கோருகிறார்கள் தரகு முதலாளிகள். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அந்தச் சுமையனைத்தையும் மக்களின் தலை மீது இறக்குவார் மோடி. ”சப் கா விகாஸ்” (அனைவருக்கும் முன்னேற்றம்) என்பன போன்ற மோடியின் பஞ்ச் டயலாக்குகள் விரைவிலேயே நகைச்சுவைத் துணுக்குகளாகும்.
மோடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளுக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம், மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும்  ஒழித்துக்கட்டக் கோருகிறது. காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை ரத்து செய்வது, தரகு முதலாளிகளின் நில ஆக்கிரமிப்பை எளிதாக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்துவது, சுரங்க நிறுவனங்கள் காடுகளை விழுங்குவதற்குத் தடையாக இருக்கும் சுற்றுச் சூழல் சட்டங்களை அகற்றி கனிம வளக் கொள்ளையையைத் துரிதப்படுத்துவது, பழங்குடியினர் உரிமைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்வது, அரசுத்துறை வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளைத் தனியார்மயமாக்குவது – என இந்தப் பட்டியல் நீள்கிறது. கடுமையான மக்கள் போராட்டங்களைச் சந்திக்காமல் இவற்றை மோடியால் நிறைவேற்றித் தர முடியாது.
தங்களுக்கு மானியம் வழங்குவது, பொதுச் சொத்துகளைக் கொள்ளையிட வழியமைத்துக் கொடுப்பது, சந்தைகளை உருவாக்கிக் கொடுப்பது போன்ற பணிகளை செய்யும் பணிப்பெண்ணாக அரசு இருக்க வேண்டுமேயன்றி, தங்களை நெறிப்படுத்துகின்ற அதிகாரம் கூட அரசுக்கு இருக்கக் கூடாது என்பது தரகு முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது.
புதிய தாராளவாதத்தின் தலையாய இந்தக் கொள்கையை அமல்படுத்துவதில், மோடி ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறார். குஜராத் முதல்வராக இருந்தபோது உள்துறை, தொழில்துறை, மின்சாரம், பெட்ரோகெமிக்கல்,  துறைமுகம், சுரங்கம், கனிம வளங்கள் ஆகிய துறைகள் அனைத்தையும் தன் வசமே வைத்திருந்தார்.  இவை அனைத்தும் அதானி, அம்பானி, டாடா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்களின் தொழில்களோடு தொடர்புடைய துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் துறைகளில் முதலாளிகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, இரண்டே நாட்களில் எல்லா தொழில்களுக்கும் உரிமம் வழங்கினார் மோடி என்பதுதான் டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகள் அனைவரும் மோடியைப் புகழ்வதற்கான காரணம்.
சூப்பர் மேன் மோடிசுற்றுச்சூழல், தொழிலாளர் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் அவற்றின் சட்டதிட்டங்களும் காகிதத்தில் இன்னும் உயிரோடு இருக்கும்போதே, அவற்றை முடமாக்கி, முதலாளிகளின் வரைமுறையற்ற கொள்ளைக்கு வழி செய்து கொடுப்பதுதான் மோடியின் ஒற்றைச் சாளர நிர்வாக முறை. ”குறைவான அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற மோடியின்முழக்கத்துக்குப் பொருள், அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது மட்டுல்ல; மாறாக, முதலாளிகளை மேற்பார்வையிடுவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அரசு கொண்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் வெட்டிக் குறைப்பது என்பதும்தான்.
தற்போது மத்திய அமைச்சகங்கள் இந்தத் திசையில்தான் மாற்றியமைக்கப்படுகின்றன. தனித்தனி அமைச்சர்களின் அதிகாரமும், அமைச்சர்கள் குழுவின் அதிகாரமும் பிடுங்கப்படுகிறது. தரகு முதலாளிகளுடன் நிரந்தரமான நேரடித் தொடர்பில் உள்ளவர்களும், அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டவர்களுமான அதிகார வர்க்கத்தினரின் கையில் அதிகாரம் குவிக்கப்பட்டு, எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகளும் நேரடியாக மோடியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு அமைச்சர்கள் பொம்மைகளாக்கப்படுகின்றனர். சொல்லிக்கொள்ளப்படும் அதிகாரப் பகிர்வு, துறைசார் வேலைப்பிரிவினை, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு  ஆகிய கோட்பாடுகளைக் குப்பையில் வீசி விட்டு, எல்லா அதிகாரங்களையும் தானே கையிலெடுத்துக் கொள்ளும் மோடியின் இந்தப் பாணியை திறமையென்றும் வேகமென்றும் போற்றுகின்றன ஆளும் வர்க்க ஊடகங்கள்.
இருப்பினும், ”குஜராத் மாடல்” என்றழைக்கப்படும் மோடி மஸ்தானின் மை டப்பா மர்மம் தற்போது விலகத் தொடங்கி விட்டது. ”உள்கட்டுமானத் துறை, இயற்கை வளங்களை அகழ்ந்தெடுத்தல், அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றில் தேங்கியிருக்கும் கோப்புகள் மீது நூறு நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” என்ற உத்தரவும், மோடியின் பத்து கட்டளைகளும் அதானி, அம்பானி, எஸ்ஸார் போன்ற தரகு முதலாளிகளின் கொள்ளையுடன் நேரடியாகத் தொடர்புள்ளவை. இவையன்றி இராணுவ தளவாடத் துறையில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார் அருண் ஜேட்லி. காங்கிரசு அரசின் டீசல் விலை உயர்வுக்கு எதிராக சண்டமாருதம் செய்த பா.ஜ.க., மன்மோகனின் அடியொற்றி டீசல் விலை உயர்வை அறிவித்திருக்கிறது. வழக்கம்போல தமிழக மீனவர்களைக் கைது செய்து மோடியின் பதவியேற்பு விழா நாடகத்தை அம்பலமாக்குகிறார் ராஜபக்சே.
திறமை, உறுதி, துரிதமான முடிவெடுக்கும் திறன் என்ற பெயர்களில் ஆளும் வர்க்கத்தால் சந்தைப்படுத்தப்பட்டு, அறிவிழந்த காரியவாத நடுத்தர வர்க்கத்தினரால் மெச்சிக் கொள்ளப்பட்ட மோடியின் ஆட்சி பல்லிளிப்பதற்கு அதிக காலம் தேவைப்படாது. மோடியின் தோல்விகளும் முறைகேடுகளும் அம்பலமாகத் தொடங்கியதும், ஊடகவியலாளர்கள் அமைச்சர்களின் திறமையின்மையைப் பற்றி முதலில் அங்கலாய்ப்பார்கள். பின்னர் மோடியின் எதேச்சாதிகார நிர்வாக முறையை ”ஆராய்ந்து கண்டுபிடித்து” ஆய்வுக்கட்டுரை எழுதுவார்கள்.
மறுபக்கம், நாட்டின் கவனத்தை ஆர்.எஸ்.எஸ். கும்பல் திட்டமிட்டே திசை திருப்பும். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குதல், ராமன் கோவில், வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவல், பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சினைகளைக் கிளறுவதன் மூலம் கிளப்பப்படும் காவிப்புழுதி, மோடியின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை மறைக்க பார்ப்பன பாசிசக் கும்பலுக்குப் பயன்படும். ஆயினும், பார்ப்பன பாசிசத்தின் வர்க்க அரசியல் உள்ளடக்கம், அதாவது, திறமையான நிர்வாகம், வளர்ச்சி என்ற மோடியின் முழக்கங்களுக்கும், இந்துத்துவக் கொள்கைக்கும் இடையிலான தொப்பூள்கொடி உறவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகும்.
-தலையங்கம். vinavu.com

கருத்துகள் இல்லை: