ஞாயிறு, 8 ஜூன், 2014

மத்திய அரசு ஊழியர்கள் கண்டிப்பாக வாரத்தில் 6 நாள் வேலை செய்யவேண்டும் !

வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.   மத்திய அரசு நிறுவனகள் பலவற்றில் 10 பேர் செய்கிற வேலைக்கு 40 பேர் இருந்து கொண்டு, பாதி பேர் அலுவலகத்திற்கு எதோ ஒரு நேரத்திற்குத் தான் போவார்கள். முறை வைத்து, வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல் விடுப்பு எடுப்பதும், அவர்களிடம் மேலதிகாரிகள் கேட்டால் அவர்களை மிரட்டுவதும்,காலை 11 மணிக்கு வந்து,மாலை 3.30 கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடுவதும் நடந்து வருவதால் அன்றே செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல், எப்பொழுதாவது செய்து கால தாமதம் செய்வதும்,சம்பத்தப் பட்டவர் வந்து கேட்டதும் அதற்க்கு ஏதாவது சாக்கு போக்கு சொல்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது.இதற்க்கு இவர்களுக்கு வக்காலத்து வாங்க ஒரு பாது காப்பு சங்கம் என்று ஒன்று இருக்கும். இவற்றுக்கெல்லாம் பெரிய ஆப்பு ஒன்று வைக்கத வரை ஜன நாயகம் சீரழிந்து விடும்.
 பொருளாதாரம் உட்பட பல பிரச்னைகளில், விரைவில் முடிவெடுக்க முடியாமல், மன்மோகன் சிங் தலைமையிலான, அந்த அரசு திணறியது.கிட்டத்தட்ட பக்கவாதத்தால் அவதிப்படும் நோயாளியைப் போல, அந்த அரசு பரிதவித்தது. இதனால், தொழில்கள் முடங்கின; வேலை வாய்ப்புகள் குறைந்தன.முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு துறையிலும் செயலர் அந்தஸ்தில் இருந்த, பல உயர் அதிகாரிகளை, பெரும்பாலான நேரங்களில், டில்லி கோல்ப் மைதானத்தில் தான் பார்க்கலாம்.

அதிகாரிகள் அலட்சியம்
முக்கியமான பணி நேரங்களில் கூட, சில உயர் அதிகாரிகள் இங்கு கோல்ப் விளையாடி நேரத்தை செலவிட்டது உண்டு.'எங்களை யார் அழைக்கப் போகின்றனர். அமைச்சரோ, பிரதமரோ அழைத்தால் தானே கவலைப்பட வேண்டும்' என, அவர்களில் சிலர், அலட்சியமாக கூறியதைக் கேட்டு, வருத்தம் அடைந்தவர்கள் நிறைய பேர்.அந்த அளவுக்கு, அலுவலகத்தில் தங்களின் இருப்பு அவசியம் இல்லை என்ற நினைப்பில், துறை வேலைகளை அப்படியே போட்டு விட்டு, சொந்தப் பணிகளிலும், பொழுது போக்கு அம்சங்களிலும் மூழ்கி இருந்தவர்கள் அதிகம். இதுதவிர, அலுவலகத்திலேயே ஓய்வு எடுத்தபடி, கம்ப்யூட்டர்களில் கேம்ஸ் விளையாடிய அதிகாரிகளும் உண்டு.உயர் அதிகாரிகள் இப்படி என்றால், அடுத்தக்கட்ட அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள், தங்களின் இருக்கைகளிலே அமர்வதில்லை. 'அதிகாரிகள், தங்களை அழைக்க மாட்டார்கள்' என்ற மெத்தனத்தில், அங்கும் இங்கும் சுற்றியபடி, பார்த்தவர்களிடம் எல்லாம் கதை பேசிக் கொண்டிருப்பர்.

மிகவும் சாவகாசமாக, காலை, 11:00 மணிக்கு அலுவலகம் வரும் அவர்கள், மாலை, 4:00 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவர்.உயர்மட்டத்தில் இந்த நிலைமை என்றால், கீழ்நிலை ஊழியர்களின் நிலைமை, அதை விட மோசம். பெரும்பாலான அமைச்சகங்களின் ஊழியர்கள், அலுவலகங்களின் வாயில்களிலும், புல்வெளிகளிலும், மரத்தடிகளிலும் உட்கார்ந்து, கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருப்பர். பல நேரங்களில், 'சீட்டு'க்கள் கூட விளையாடுவர். இத்தனை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுஇருந்த, அதிகார வர்க்கம் மீது, நரேந்திர மோடி அரசு, தன் பார்வையை விரைவில் திருப்பும் என, எதிர்பார்க்கப்பட்டது; அது, தற்போது நடந்துள்ளது.திங்கள் முதல் வெள்ளி வரையிலான, ஐந்து நாட்களில், அமைச்சகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எல்லாம், மிகுந்த நெரிசல் காணப்படும். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், இந்தப் பகுதி முழுவதுமே வெறிச்சோடி காணப்படும்.ஆனால், நேற்று சனிக்கிழமையாக இருந்தும், வழக்கத்துக்கு மாறாக, மத்திய அமைச்சகங்கள் எல்லாம் திறந்துஇருந்தன. அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்பலர் பணிக்கு வந்திருந்தனர். கார் நிறுத்துமிடங்களில் கார்கள் நிறைய அணிவகுத்திருந்தன. இந்த திடீர் மாற்றம் குறித்து, அங்கிருந்த காவலர்களிடம் விசாரித்த போது, 'இன்று விடுமுறை தான். ஆனாலும், பலரும் பணிக்கு வந்துள்ளனர்' என்றனர்.

சுற்றறிக்கை
பின், பணிக்கு வந்திருந்த, ஊழியர்கள் பலரிடம் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது:மத்திய அமைச்சகம் ஒவ்வொன்றுக்கும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து, ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், சனிக்கிழமை, பணிக்கு வர வேண்டும். காலை 9:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை, அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். மதியம், 1:00 முதல் 1:30 வரை, அரை மணி நேரம் மட்டுமே, உணவு இடைவேளை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 'அமைச்சக ஊழியர்கள் அனைவரும், அலுவல் நேரத்தில், தங்களுக்கான அலுவலக அறையிலும், இருக்கையிலும் தான் அமர்ந்திருக்க வேண்டும். வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்' என, மேலதிகாரிகளும், வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.< அமைச்சக உயர் வட்டாரங்களில் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது:அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா, இல்லையா என்பதை பரிசோதிக்கும்படி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.அத்துடன், அனைத்து அமைச்சகங்களிலும், வருகை பதிவுக்கான, பயோமெட்ரிக் சாதனங்களை, விரைவில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது, துறை ரீதியான, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, பலரும், சனிக்கிழமைகளில், இனி, அலுவலகம் வருவர். விரைவில், அரசு தரப்பில் இருந்து, இது தொடர்பாக, அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும். அதன்பின், சனிக்கிழமை வேலை முழு அளவில் நடைமுறைக்கு வந்து விடும்.இவ்வாறு, உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.அமைச்சக ஊழியர்களுக்கு,தற்போது, அறிமுகமாகி உள்ள, ஆறு நாள் வேலை, விரைவில், இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் அமலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்கள் குறைந்தால் பணி நேரம் கூடும்
*கடந்த, 80ம் ஆண்டுகளில், பிரதமராக இந்திரா பதவி வகித்த போது, மத்திய அரசு அலுவலகங்களுக்கு, சனிக்கிழமையும் வேலை நாளாகவே இருந்தது.
*வாரத்தில், ஐந்து நாட்கள் பணிக்கு வந்தால் போதும் என்ற நடைமுறையை, 1989 மே, 21ல், அப்போதைய பிரதமர் ராஜீவ் தான் அமல்படுத்தினார்.
*கடந்த, 25 ஆண்டுகளாக அமலில் இருந்த, ஐந்து நாள் வேலை முறை தான், தற்போது சப்தம் இல்லாமல், மாறத் துவங்கி உள்ளது.
*அனைத்து சனிக்கிழமையும் இனி அரசு வேலை நாளே என, உடனே அறிவித்தால், ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பலாம் என்பதால்,
முதல்கட்டமாக, ஒரு வாரம் விட்டு, மறுவாரம் சனிக்கிழமை வேலை நாளாக இருக்கலாம். இதுபற்றி, பரிசீலனை நடத்து வருகிறது.
*சனிக்கிழமை வேலை நாள் யோசனை, ஒரு வேளை ஏற்கப்படவில்லை எனில், தற்போதுள்ள, ஐந்து நாட்கள் வேலை முறையே அமலில் இருக்கும். அதற்குப் பதிலாக, கூடுதல் நேரங்களில் மத்திய அமைச்சகங்களும், அரசு அலுவலகங்களும் செயல்படும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.

- நமது டில்லி நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: