வியாழன், 12 ஜூன், 2014

Chennai மெட்ரோவுக்கு பிரேசில் ரயில் பெட்டிகள் வரத்து !

சென்னை மெட்ரோ ரெயில் சேவைக்காக பிரேசில் நாட்டில் உள்ள அல்ஸ்டாம் ரெயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் ரூ.1471.3 கோடி செலவில் 42 ரெயில்களுக்கு தலா 4 பெட்டிகள் வீதம் 168 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி 9 ரெயில்கள் பிரேசில் நாட்டிலும், 33 ரெயில்கள் ஆந்திரா மாநிலம் தடா ஸ்ரீ சிட்டியில் உள்ள அல்ஸ்டாம் ரெயில் நிறுவனத்திற்கான ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து தயாரித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிரேசில் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 9 ரெயில்களும், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் இருந்து 3 ரெயில்கள் ராட்சத லாரிகள் மூலமாகவும் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு டிராக் சோதனை, உள்சோதனை, மின்சார இணைப்புகளுக்கான சோதனைகள் நடந்து வருகிறது.


ஒப்பந்தப்படி பிரேசில் அல்ஸ்டாம் ரெயில் பெட்டி தொழிற்சாலையிலிருந்து கடைசியாக கடந்த 8–ந்தேதி கொண்டுவரப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட 2 ரெயில்கள் சுங்கசோதனைக்கு பின்னர் துறைமுகத்திலிருந்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில்வே பணிமனைக்கு நேற்று அதிகாலை ராட்சத லாரிகளில் கொண்டுவரப்பட்டன.

இந்த ரெயில்கள் 800 மீட்டர் சோதனை ஓட்டப்பாதையில் இறக்கப்பட்டு, மெட்ரோ ரெயில்வே நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பார்வையிட்டனர். பின்னர் 2 ரெயில்களும் முதல் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ரெயில்களின் எண்ணிக்கை உயர்வு

இந்த 2 ரெயில்கள் வருகையால் கோயம்பேடு ரெயில்வே பணிமனையில் ரெயில்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கோயம்பேடு பணிமனை ஒரு பரபரப்பான ரெயில்வே பணிமனையாக மாறி உள்ளது. விரைவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் இருந்து மேலும் 2 ரெயில்கள் கோயம்பேடு பணிமனைக்கு வரஉள்ளன.

மேற்கண்ட தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: