சனி, 14 ஜூன், 2014

பாமக திமுக கூட்டணி மீண்டும் ஏற்படுமா ? தினமலரின் செய்தி !

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் கடுமையான விரக்தியில் இருக்கும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தில் நடக்கவிருக்கும் திருமண விழாவை வைத்து, அடுத்த கட்ட அரசியலுக்கு வித்திடும் யோசனையில் இருப்பதாக, கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.
ராமதாசின் மகன் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவுக்கும், மகள் காந்திமதியின் மகன் ப்ரித்திவனுக்கும் திருமணம் செய்ய, குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். இதற்கான நிச்சயதார்த்த விழாவையும் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருக்கின்றனர். விரைவில், திருமண நிச்சயதார்த்த விழா நடக்கவிருக்கிறது. அடுத்த சில மாதங்களுக்குள் திருமணம் நடத்திடவும் முடிவெடுக்கப்படும். அந்த திருமண நிகழ்ச்சிக்கு, அகில இந்திய அளவில் தலைவர்களை அழைக்கவும் முடிவெடுத்திருக்கின்றனர்.
இதற்காக, அன்புமணியே நேரடியாக தலைவர்களை சந்தித்து, அழைப்பிதழ் கொடுக்கவும் முடிவாகி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் தலைவர்கள் பலரையும் ராமதாஸ் நேரில் சென்று, திருமணத்துக்கு வருமாறு அழைக்கவும் தீர்மானித்திருக்கின்றனர். அப்போது, பா.ம.க.,வின் அடுத்த கட்ட அரசியல் குறித்து, தீர்மானிக்கவும் ராமதாஸ் முடிவெடுத்திருக்கிறார். லோக்சபா தேர்தலில் பா.ம.க.,வை விடவும் கூடுதலாக தோல்வி அடைந்திருந்தாலும், கட்சியைப் பொறுத்த வரையில் அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியான பெரிய இயக்கம் தி.மு.க., என்பதால், தி.மு.க.,வோடு, 2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலை சேர்ந்து சந்திக்கலாம் என்கிற எண்ணம், பா.ம.க.,வில் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. திருமண விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது, கூட்டணிக்கான முகூர்த்தைத்தையும் குறிக்கலாம் என, ராமதாஸ் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.




இது குறித்து, பா.ம.க., வட்டாரங்களில் கூறியதாவது:

தமிழகத்தைப் பொறுத்த வரையில் லோக்சபா தேர்தல் மூலம் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க., தன்னை அடையாளப்படுத்தி விட்டது. அந்த இயக்கம் தனித்தே தேர்தலை சந்தித்து, 37 தொகுதிகளில் வென்று விட்டது. அதனால், இனி அந்த இயக்கம் யாருடனும் கூட்டணி சேர விரும்பாது. ஆனால், அந்த இயக்கத்தை வீழ்த்தி, வெற்றி பெற வேண்டும் என்றால், அ.தி.மு.க.,வுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தி.மு.க., வலுவான மற்ற இயக்கங்களோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால்தான் அது முடியும். இந்நிலையில், வரும் 2016ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில், தி.மு.க.,வோடு கூட்டணி சேர்ந்து போட்டியிடலாம் என, பா.ம.க.,வினர் விரும்புகின்றனர். அதை நிறுவனர் ராமதாசும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதனால், விரைவில் தன்னுடைய பேரன் - பேத்திக்கு நடக்கவிருக்கும் திருமண விழாவை வாய்ப்பாக வைத்து, புதிய கூட்டணிக்கு அச்சாரமிட அவர் முயற்சிக்கப் போகிறார். திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை ராமதாஸ் சந்திக்கப் போகிறார். அதை ஏற்று கருணாநிதியும் திருமண விழாவுக்கு கட்டாயம் வருவார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும், இரண்டு இயக்கங்களும் பொதுவான விஷயங்களில் இணைந்து செயல்படும். அதன்பின், கூட்டணி இயற்கையாகவே அமைந்து விடும். எங்களைப் போலவே ஒத்த கருத்துடையவர்களையும் புதிய கூட்டணியில் இணைத்துக் கொள்வோம். தற்போது நாங்கள் பா.ஜ., கூட்டணியில்தான் இருக்கிறோம். இருந்தாலும், அந்த கட்சியோடு பா.ம.க.,வை இணைக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் விரும்புகின்றனர். அதற்கு வாய்ப்பு இல்லை என்பாதால், மாற்று அணி குறித்து நாங்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறோம். முதல்வர் ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக, வாய்ப்பு இருந்தால், பா.ஜ.,வையும் தி.மு.க., பக்கம் கொண்டு வந்து, தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் ராமதாசே வலுவான கூட்டணியை ஏற்படுத்துவார். அந்த முயற்சியை கருணாநிதியும் தி.மு.க.,வும் நழுவ விடாது. இவ்வாறு, பா.ம.க., வட்டாரங்களில் தெரிவித்தனர்.



இது குறித்து தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது:

இப்படியொரு விஷயம் இருப்பது குறித்து, தி.மு.க., தரப்புக்கு தகவல் எதுவும் இல்லை. அப்படியொரு வாய்ப்பு அமையுமானால், தி.மு.க, தரப்பு, அதை பயன்படுத்திக் கொள்ளும். 2016 சட்டசபை தேர்தலை மனதில் வைத்துத்தான், தற்போது தி.மு.க.,வில் எல்லா விஷயங்களும் நடக்கின்றன. முதல் கட்டமாக, தேர்தல் தோல்வியில் இருந்து கட்சித் தொண்டர்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக கட்சி அமைப்புகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுத்துவதில், தலைமை தீவிரமாக இருக்கிறது. அந்த பணிகள் முடிந்ததும்தான், மற்ற விஷயங்களில் தலைமை கவனம் செலுத்தும். முன்னதாக, தொலை நோக்கு எண்ணத்துடன் யார் ஒத்த எண்ணத்துடன் வந்தாலும், அவர்களுடன் கட்சி இணைந்து, அரசியல் செய்யும். அது தேர்தல் கூட்டணியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்களில் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: