திருவாடுதுறைக்கு 1,500 கோடி, மதுரை ஆதீனம் 1,000 கோடியாம்! சமீபத்தில் முளைத்து வளர்ந்த மாதா அம்ருதானந்தா மாயிக்கு 1,600 கோடியாம்! இன்னும் பங்காரு அடிகள், சாயிபாபா, கல்கி, வைணவ ஜீயர்கள், ரவிசங்கர்ஜி, சிவசங்கர் பாபா, பலவகையான ‘ஆனந்தா’க்கள் இருக்கிறார்கள். சேலம் குட்டி சாமியார் மூக்கு வெளுப்பதற்குள் 300 கோடியாவது சேர்ந்து விடுவார்.
2004 – ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை)
ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி, சங்கரராம அய்யர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முதல் குற்றவாளியாகக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லாப் பண்டிகை நாட்களிலும் அதிகாலையிலேயே தொலைக்காட்சியில் தோன்றி, தனது ஊத்தைத் திருவாய் மலர்ந்து அருளும் இந்தக் கபட சந்நியாசி ஒரு “கிரிமினல்” என்பதைத் தமிழக அரசே பிரகடனம் செய்திருக்கிறது.இ. பி. கோ.-302 (கொலை), 201 (சாட்சி/குற்றவாளியை மறைப்பது), 205 (குற்றத்தை மறைக்க ஆள்மாறாட்டம் செய்தல்), 213 (குற்றத்தை மறைக்கப் பணம் தருதல்), 34 (கிரிமினல் நோக்கத்துக்காகக் கூடிச் செயல்படுதல்), 120-பி (கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல்) ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் இந்த ஜெகத்குரு.
கொலைக்கு முன்னும் பின்னும் கூலிப்படையுடன் சங்கராச் சாரி நடத்திய செல்ஃபோன் உரையாடல், சங்கரமடத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ஜெகத்குரு தனது பிரசாதமாகக் கொலைகாரர்களுக்கு வழங்கிய பணம், பொய்க் குற்றவாளிகளுக்குக் கொடுத்த பணம், சங்கராச்சாரிக்கு கொலைவெறியைத் தூண்டிய சங்கரராமனின் இறுதி எச்சரிக்கைக் கடிதம் போன்ற பல அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.
கொலை நடந்தவுடனேயே இதில் சங்கராச்சாரியின் தொடர்பை சூசகமாக அம்பலப்படுத்தியது ‘நக்கீரன்’. தன் மீதான சந்தேகம் வலுக்கத் தொடங்கி விட்டது என்று புரிந்து கொண்டு அதைத் திசை திருப்புவதற்காக சங்கராச்சாரி “நக்கீரன்” இதழுக்கு அளித்த பேட்டி சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்திருந்தது.
“என்னுடைய பக்தர்கள் யாரேனும் சங்கரராமனைக் கொலை செய்திருக்கக் கூடும்” என்று ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட அந்தப் பேட்டியில் திமிராகவும் அலட்சியமாகவும் கூறியிருக்கிறார் சங்கராச்சாரி. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்றே சங்கராச்சாரியை போலீசு கைது செய்திருக்க வேண்டும்.
ஆனால் ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் அனைத்தும் படைத்த இநத ஆன்மீக அடியாள் படையின் தலைவன், ஒரு பச்சை ரத்தப் படுகொலையைச் செய்துவிட்டு, அந்தக் குற்றத்தின் சுவடு கூட முகத்தில் தெரியாமல் மறைத்துக் கொண்டு தீபாவளியன்று காலை வரை ‘இந்துக்களுக்கு’ அருளாசி வழங்கியிருக்கிறார்.
“மறுக்கவும் மறைக்கவும் முடியாத அளவிற்கு ஆதாரங்கள் சிக்கி விட்டன” என்று புரிந்து கொண்டவுடன் உலகின் ஒரே இந்து சாம்ராச்சியமான நேபாளத்திற்குத் தப்பியோட முயன்று பிடிபட்டிருக்கிறார் இந்தக் கிரிமினல்களின் ஜெகத்குரு.
குற்றவாளிக்கு இராஜ மரியாதை!
ஜெயேந்திரர் சாதாரண குற்றவாளி அல்ல; ஆன்மீகம், அகிம்சை என்று நாட்டுக்கே உபதேசம் செய்து கொண்டு அதன் மூலம் தனது பண பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் பெருக்கிக் கொண்ட ஒரு மடாதிபதி. சாதாரண மனிதர்கள் வறுமையின் காரணமாகவோ, உணர்ச்சி வயப்பட்டோதான் பல குற்றங்களை இழைக்கிறார்கள். ஆனால் இந்த ஜெகத் குருவோ தன்னுடைய வண்டவாளங்களைக் கேள்விக்குள்ளாக்கிய ஒரே காரணத்திற்காக ஒரு பச்சை ரத்தப் படுகொலையை ஆற அமரத் திட்டம் போட்டு நிறைவேற்றியிருக்கிறார் – அதுவும் மக்கள் மிகப் புனிதமாகக் கருதும் ஒரு கோயிலுக்குள்ளே ! இந்தக் கொலையை மறைக்கவும் திசை திருப்பவும் தனது பணபலத்தையும் அதிகாரபலத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்.
தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்படும் ரவுடிகளைக் காட்டிலும் கடுமையான முறையில் நடத்தப்பட வேண்டிய இந்தக் குற்றவாளிக்கு இங்கே ராஜமரியாதை நடக்கிறது; சாதாரண குற்றங்கள் புரிந்த ஏழைகளை உள்ளாடையுடன் நிறுத்தி பிடரியில் கை வைத்து கையில் விலங்கு மாட்டி இழுத்து வரும் போலீசு, ஜெகத்துருவிடம் “தயவுசெய்து வாருங்கள்!“ என்று மன்றாடுகிறது; “நான் போலீசு வேனில் ஏறமாட்டேன்” என்று ஜெயெந்திரர் சொன்னவுடன் காரில் அழைத்து வருகிறது. “சூத்திரன் தொட்டால் பார்பானுக்குத் தீட்டு” என்ற மனுதர்மத்தை மதித்து சங்கராச்சாரியின் மீது விரல் கூடப் படாமல் போலீசு எட்ட நிற்கிறது. “ஜெயேந்திரருக்கு ஒரு பிரமாணரைக் கொண்டுதான் சமையல் செய்து தருகிறோம்” என்று நீதி மன்றத்திலேயே அறிவிக்கிறார் அரசு வழக்குரைஞர் துளசி.
சிறையில் சாதாரண குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிகளும் குற்றமே செய்யாமல் உள்ளே தள்ளப்பட்ட அப்பாவிகளும் சிறையைக் கூட்டுகிறார்கள், கக்கூஸ் கழுவுகிறார்கள், இடுப்பொடிய வேலை வாங்கப்படுகிறார்கள். சங்கராச்சாரியோ அங்கே மூணு வேளை பூஜை செய்கிறாராம் ! அந்த அகிம்சாமூர்த்தி அன்றாடம் பூஜை செய்யவில்லை என்றால் உலகமே அழிந்து விடுமென்பதால் சிறை நிர்வாகமே தேங்காய், பூ, பழம், சூடம் சாம்பிராணி சப்ளை செய்கிறது. சாதாரணக் கைதிகளுககு அலுமினியத் தட்டில் வேகாத சோறு. இந்த நட்சத்திரக் கிரிமினலுக்கோ சில்வர் தட்டில் சோறு, சப்பாத்தி, பால், பழம், குளிக்க வெந்நீர், அன்றாடம் மருத்துவச் சோதனை… இன்னபிற வசதிகள். நாட்டில் எந்தக் கொலைக் குற்றவாளிக்காவது இவ்வளவு மரியாதை நடந்ததுண்டா?
“நான் நீதிபதியிடம் வர மாட்டேன், நீதிபதியை அங்கே வரச் சொல்!” என்று எந்த கட்சித்தலைவராவது போலீசிடம் சொன்னதுண்டா? “ராகு காலத்தில் தீர்ப்பு சொல்லாதே!” என்று நீதிபதிக்கு ஒரு கிரிமினல் உத்திரவிடுவதை யாராவது கேள்விப்பட்டதுண்டா? கைதியையே கண்ணால் பார்க்காமல் ரிமாண்டு உத்தரவு போடும் நீதிபதிகள், ரத்தம் சொட்டச் சொட்டக் கொண்டு வந்து நிறுத்தினாலும் கைதியைத் தலை நிமிர்ந்து பார்க்க மறுக்கும் மாஜிஸ்ட்ரேட்டுகள் இதுதான் மக்களுக்கு நீதிமன்றத்தில் கிடைக்கும் மரியாதை! லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்ட போதோ, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோதோ உயர்நீதி மன்றம் அவசரம் காட்டவில்லை. ஆனால், ஒரு கொலைக் குற்றவாளிக்காக விடுமுறை நாளில் உயர் நீதி மன்றத்தின் கதவுகள் திறக்கின்றன.
மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கே போகாமல் உயர்நீதி மன்றத்தில் நேரடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. அரை நாளில் நூறு ஜாமீன் மனுக்களை விசாரித்துத் தீர்ப்பு சொல்லும் உயர்நீதிமன்றம் ஜெயேந்திரர் மனுவை இரண்டு நாள் விசாரிக்கிறது. “நீதிபதிகளின் பங்களாவிலேயே இவரைச் சிறை வைக்கலாமே” என்று ஒரு கிரிமினலுக்காக நீதிபதியே வாதாடுகிறார்.
“காக்க . . . காக்க. . .கிரிமினல் காக்க”
இத்தனைச் சலுகைகள், அத்தனைச் சொகுசுகளுக்குப் பின்னரும் பார்ப்பன பாரதீய ஜனதா கும்பல் அலறுகிறது; “அவரை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று மன்மோகன் சிங்கிடம் கண்ணீர் விடுகிறார் வாஜ்பாய்; சிறை வாசலில் சூடம் கொளுத்தி “காக்க காக்க கனகவேல் காக்க!” என்று கொலைகாரனைக் காப்பாற்ற கந்தசஷ்டி கவசம் படிக்கிறார் இராம. கோபாலன். வெள்ளைக்காரன் கூட சங்கராச்சாரியைக் கைது செய்ததில்லை என்று விம்மி வெடிக்கிறார் அத்வானி. அமெரிக்க அதிபரிடமும் ஐ. நா. சபையிடமும் முறையிடவேண்டியதுதான் பாக்கி!
சங்கரராமன் என்ற இந்துப் பார்ப்பனரைக் கொலை செய்ததற்காக, சுப்பிரமணி (ஜெயேந்திரர்) என்ற இன்னொரு இந்துப் பார்ப்பனர், ஜெயலலிதா என்ற இந்துப் பார்ப்பனரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இது இந்து விரோத நடவடிக்கை என்கிறது இராமகோபாலய்யரின் இந்து முன்னணி. பார்ப்பனக் கிரிமினல்கள் மட்டும்தான் இந்துக்கள் என்று இவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளலாம். இந்து என்ற சொல்லுக்கு திருடன் என்று ஒரு அகராதியில் பொருள் சொல்லப்பட்டிருப்பதாக கருணாநிதி சொன்னவுடனே தாண்டிக் குதித்த இந்தக் கும்பல், இப்போது தங்கள் நடவடிக்கை மூலம் “திருடர்களும் கொலைக்காரர்களும் மட்டும்தான் இந்துவாக இருக்க முடியும்’ என்று நிரூபிக்கிறது”.
ஒரு இந்துக் கோயிலின் உள்ளேயே வைத்து பட்டப்பகலில் ஒரு இந்து (சங்கரராமன்) கொலை செய்யப்பட்ட போது வாய் திறக்காத இந்து முன்னணி இன்று ஜெயேந்திரர் என்ற இந்துக் கிரிமினலுக்காக வாதாடுகிறது; ஒரு பாவமும் அறியாத சிறுபான்மை மக்களை வம்புக்கிழுத்து “அவர்களுடைய வாக்குகளைக் கைப்பற்றத்தான் இந்தக் கைது நடவடிக்கை” என்று கூறி கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறது.
ஜெகத்குரு கொலை செய்வார் ஜட்ஜ் விசாரிக்கக் கூடாதாம் !
ஆனால், பெரும்பான்மை இந்து மக்கள் இந்தப் பித்தலாட்டத்தை நம்பத் தயராக இல்லை. பாரதிய ஜனதா நடத்தும் ஆர்ப்பாட்டத்திலும் மனிதச் சங்கிலியிலும் பார்ப்பனக் குடுமிகளையும் மாமிகளையும் தவிர வேறு யாரையுமே பார்க்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் தலைக்கேறி ‘துப்பாக்கி எடுப்போம், வெடிகுண்டு வீசுவோம்’ என்று கூச்சலிடுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். நவம்பர் 13-ம் தேதியன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் கூட்டமாக வந்திருந்த அந்த துப்பாக்கி எடுக்கும் சூரப்புலிகளை எமது தோழர்கள் வெறும் பதினைத்தே பேர் விரட்டியடித்த காட்சியையும், வழக்குரைஞர்கள் விரட்ட இவர்கள் பின்னங்கால் குடுமியில் சிக்க தெறித்து ஓடிய காட்சியையும் நாடே பார்த்தது.
சங்கரராமன் கொலை வழக்கில் வெளிவரும் ஆதாரங்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் மறுக்க முடியவில்லை. தனது ஊழல்களையும் முறைகேடுகளையும் எதிர்த்த ராதாகிருஷ்ணன், மாதவன் என்ற இரு பார்ப்பனர்களைக் கொலை செய்வதற்கு ஜெயேந்திரர் கூலிப்படையை ஏவி விட்ட கதையும் இப்போது வெளி வந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஆதாரபூர்வமாக மறுத்து வாதிடுவது சாத்தியமில்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தடாலடியாக அனைத்தையும் மறுக்கிறது.
“இந்துமதத்தின் தலைவரான ஒரு ஜெகத்குரு இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டிருக்க முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். யார் விசாரணை நடத்தி எந்த நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும் எங்கள் நம்பிக்கையை யாரும் மாற்ற முடியாது” என்பது தான் அவர்களுடைய வாதம். ஒரு மடத் தலைவரின் மீதான தங்களது நம்பிக்கையை இறை நம்பிக்கை போன்ற மத நம்பிக்கையாகச் சித்தரித்து, தங்களது இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது “இந்து மத உணர்வைப் புண்படுத்ததுவதாகும்” என்று வாதிடுகிறது இந்தப் பார்ப்பன பாசிசக் கும்பல்.
இவர்களுடைய வாதப்படி “நான்தான் கொலை செய்தேன்” என்று ஒருவேளை ஜெயேந்திரரே ஒப்புக் கொண்டாலும், “ஒரு ஜெகத்குரு கொலை செய்ய முடியாது” என்ற விசுவ இந்து பரிசத்தின் நம்பிக்கையின் காரணமாக அத்வானி வகையறாக்கள் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
“அகழ்வாராய்ச்சி கூடாது, வரலாற்று ஆதாரம் தேவையில்லை, பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் இராமன் பிறந்தான், இது எங்களுடைய நம்பிக்கை, இதன் மீது எந்த நீதிமன்றமும் தீர்ப்புக் கூற முடியாது” என்பதுதான் அயோத்தி பிரச்சினையில் ஆர். எஸ. எஸ் -இன் வாதம். இப்போது ஜெயேந்திரர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும வாதமும் இதுதான்.
வேண்டுமென்றே நள்ளிரவில் கைது செய்தார்கள், பங்களாவில் வைக்காமல் சிறையில் வைத்தார்கள், மோசமாக நடத்தினார்கள்… என்று இவர்கள் கூறுவதெல்லாம் சரக்கில்லாத சப்பைக் கட்டுகள். “ஜெகத்குருவும் அவரை ஒத்த விசுவ இந்து பரிசத்தின் காவி உடைக் கிரிமினல் கூட்டமும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தச் சட்டமோ, நீதிமன்றமோ அவர்களைத் தண்டிக்க முடியாது; தண்டிக்கக் கூடாது” – இதுதான் இவர்களுடைய கோரிக்கை. எனவேதான் “மடங்களுக்குள்ளும கோயில்களுக்குள்ளும் போலீசு நுழைவதைத் தடைசெய்ய சட்டம் இயற்ற வேண்டும்” என்று கோரியிருக்கிறது அனைத்திந்திய சாமியார்கள் சங்கம். இதனை அத்வானியும் சுஷ்மா சுவராஜும் வழிமொழிந்துள்ளனர்.
சதுர்வேதி-மோசடி சாமியார், ஜெயேந்திரர்-சுவாமிகளாம்!
பார்ப்பனச் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டவுடனேயே இப்படித் துள்ளிக் குதிக்கும் இந்தக் கூட்டம் சதுர்வேதி, பிரேமானந்தா போன்ற ‘சூத்திர’ச் சாமியார்கள் கைது செய்யப்பட்டபோது குதிக்கவில்லை; கொந்தளிக்கவுமில்லை. ஸ்வாமிகள் என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கிறார்கள்.
கிரிமினல் என்றும் கூலிப்படைத் தலைவனென்றும் அரசால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளியை மகான் என்றும் உலகை உய்விக்க வந்த உத்தமன் என்றும் வருணித்து பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறது காஞ்சி மடம். அவை தினமணி, இந்து நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன. பிரேமானந்தாவும் சதுர்வேதியும் தங்களைப் பற்றி இப்படி விளம்பரம் கொடுத்திருந்தால் இவர்கள் வெளியிட்டிருப்பார்களா?
‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்ற பார்ப்பனச் சாதிவெறிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த மனுநீதியைச் சட்டமாகவே ஆக்கி பார்ப்பன மடங்கள், ஆதீனங்கள் போன்ற கிரிமினல் கூடாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதாவின் கோரிக்கை.
ஜெகத்குரு நியமனம் எப்படி?
இந்த மடாதிபதிகளும் ஆதீனகர்த்தர்களும் ‘தெய்வப் பிறவி’களா? வானத்திலிருந்து குதித்தவர்களா? அன்றாடம் உழைத்து நேர்மையாக வாழும் கடவுள் நம்பிக்கையுள்ள கோடிக் கணக்கான பக்தர்களின் கால் தூசுக்குக் கூடச் சமமாக முடியாத கயவர்கள்தான் இந்த மடாதிபதிகள்.
நூறு கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்த ஆள்தான் ஜெகத்துக்கே குரு என்றால், இத்தனைக் கோடிப் பேரையும் ஒரு சல்லடையில் போட்டுச் சலித்து இந்த ஆள்தான் ‘பெஸ்ட்’ என்று பொறுக்கி எடுத்தார்களா? ஜெகத் குருவைத் தேர்ந்தெடுக்கும் வழி முறையைச் சொல்லுங்களய்யா மடாதிபதிகளே என்று கேட்கும் உரிமை பக்தர்களுக்கு உண்டா? பத்திரிக்கைகள் தான் கேட்டதுண்டா?
வேத ஆகமங்கள், உபநிடதங்கள், சாத்திரங்களை ஐயந்திரிபு அறக் கற்றவர்கள், அத்யயனம், பாராயணத்தில் கரை கண்டவர்கள் மெய்கண்ட சாத்திரங்களையும், சிவஞான போதத்தையும், பதிகங்களையும், புராணங்களையும் கசடறக் கற்றவர்கள்தான் மடத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமை.
‘இவனை மடத்தில் சேர்த்தால் ஊழலுக்கு உடந்தையாக இருப்பான். இங்கு நடக்கும் ஒழுக்கக் கேடுகளை வெளியே கசிய விடமாட்டான்’ என்ற கிரிமினல் பயோடேட்டாவின் படி தான் இவர்களின் தேர்வே நடக்கிறது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட கிரிமினல்கள் பஞ்சமாபாதங்களையும் செய்யாமல் இருந்தால்தான் நாம் அதிர்ச்சியடைய முடியும்.
“இந்தியாவில் தகுதி தேவைப்படாத ஒரே தொழில் புரோகிதத் தொழில்” என்றார் அம்பேத்கர். சங்கரமடத்தில் பரமாச்சாரியையும், சைவ மடத்தில் ஆதினத்தையும் தெரிவு செய்ய முதல் தகுதி சாதி. கிரிமினலுக்கான தகுதிகள் வளர்ப்பிலேயே தம் சாதிக்காரனுக்குத்தான் உண்டு என்பதில் அவாளுக்கு அவ்வளவு அசாத்திய நம்பிக்கை. இரண்டாவது தகுதி, பத்துக் கொலை செய்தாலும் பதட்டமிட்டாமல் முகத்தைப் பராமரிக்கின்ற “தெய்வீகக் களை” மூன்றாவதாக, மடத்தின் மாஃபியா வேலைகள் மற்றும் மடாதிபதியின் சிற்றின்ப லீலைகள் பற்றிய இரகசியங்களைக் காப்பாற்றும் திறமை. நான்காவதாக, பெரியவர் சமாதி அடைந்து அதிகாரம் தன் கைக்கு வரும்வரை அடக்கி வாசிக்கும் ‘பொறுமை’.
‘ஆன்மீகத்’ தரகுப் பணி
சின்ன பெரியவாள்களும், இளைய சன்னிதானங்களும் இப்படித்தான் பொறுக்கி எடுக்ப்படுகிறார்கள். இவர்கள் பட்டினத்தாரையும் வள்ளலாரையும் போலப் பரதேசியாய்த் திரிகிறார்களா? கோயில் கோயிலாய்ச் சென்று பதிகம் பாடுகிறார்களா? அல்லது சங்கரராமனுக்கு முடிவுரை எழுதிய ஜெயேந்திரர், அத்வைதத்துக்குப் பொழிப்புரை எழுதியிருக்கிறாரா?
ஒரு வெங்காயமுமில்லை. தின்பதும் தூங்குவதும் தான் இவர்களது ஆன்மீகம் நடவடிக்கைகள். இதைப் படித்து ஆத்திரப்படும் அம்பிகள் சின்ன பெரியவாளை எடை மிசினில் ஏற்றிப் பார்க்கட்டும்!
இந்து சமயப் பணி என்ற பெயரில் அரசியல் புரோக்கர் வேலை செய்யும் காஞ்சி மடத்தின் ‘சமயத் தொண்டு’ பற்றி இண்டியன் எக்ஸ்பிரஸில் மாய்ந்து மாய்ந்து துதி பாடும் அம்பிகளுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இருந்தாலும் தங்கள் சாதி பிராண்டைத் தூக்கிப் பிடிப்பதில் அப்படியொரு பத்திரிகா தர்மம். “சங்கரமடத்திலிருந்து ஒரு துண்டு சீட்டு வந்தால் உடனே டிரான்ஸ்பர், உடனே புரமோஷன், உடனே லைசன்ஸ். . .” என்று ‘பெரியவாளுடைய’ செல்வாக்கை விதந்து போற்றுகிறார்களே, அது ஆன்மீகப் பணியல்ல, அரசியல் தரகு வேலை என்று அவர்களுக்குப் புரியாமலா இருக்கிறது?
ஜெயேந்திரரின் யோக்யதை என்ன? அங்கே சொந்த மனைவியோடு போகிறவருக்கும் ஆசி! அடுத்தவன் மனைவியோடு போகிறவனுக்கும் ஆசி! காமக் கொடூரன் சரவணபவன் அண்ணாச்சிக்கும் ஆசி! யோக்கியமான அனந்துவுக்கும் ஆசி! சாராய மல்லையாவுக்கும் ஆசி! சமஸ்கிருதப் பாடசாலைக்கும் ஆசி! மக்கள் யாரையெல்லாம் களவாணி, சாராயக் கடைக்காரன், பொறுக்கி அரசியல்வாதி என்று காறித் துப்புகிறார்களோ அனைவரும் சங்கராச்சாரியிடம் வரிசையாகப் போய்க் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்.
அம்பானி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கையில் தனி விமானம் ஏறி அவசர அவசரமாகப் போய் சங்கராச்சாரி ஆசீர்வாதம் வழங்குகிறார். அம்பானியோ ஜெயேந்திரர் கைதானவுடன் பதறுகிறார். 30 ஆண்டுகளில் குறுக்கு வழியில் பணக்காரனான குற்றவாளி அம்பானியுடன் சுவாமிகளுக்கு என்ன ஆன்மீக உறவு?
ஊர் தாலி அறுத்து துறவிகள் சேர்த்த சொத்து!
தேர்தலில் நிற்கும் ஓட்டுச் சீட்டு அரசியல்வாதியை தேர்தல் கமிசன் “நீ கிரிமினலா? சொத்து விவரம் என்ன? காவல் நிலையத்தில் வழக்கு உண்டா?” உன்று விளக்கம் கேட்க வேண்டும் என்கிறது தேர்தல் கமிசன். இது வாக்காளர்களின் தகவல் பெறும் உரிமை என்கிறது உச்சநீதி மன்றம்.
அம்பானி, டாடா, பிர்லாக்கள் கூட தங்களது பங்குதாரர்களிடம் இந்த ஆண்டு கம்பெனி லாபத்தில் ஓடியிருக்கிறது அல்லது நட்டத்தில் போயிருக்கிறது என்று விளக்கமளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
கோடிக்கணக்கில் சொத்துக்களைப் புரட்டும் இந்த மடாதிபதிகள் யாராவது தங்களைப் பின்பற்றும் அல்லது தங்களோடு மதம் என்ற வகையில் இணைந்த பக்த கோடிகள் யாருக்காவது “இவ்வளவு கோடி சொத்து, இன்றைய தேதிக்கு இலாபம் இவ்வளவு” என்று கணக்கு காட்டுவதுண்டா?
இன்று காஞ்சி மடத்தின் சொத்து 6,000 கோடி (1.2 பில்லியன் டாலர்கள்) என்று இந்துமதம் சார்ந்த இணையத்தளங்கள் கணக்கு சொல்கின்றன. திருவாடுதுறைக்கு 1,500 கோடி, மதுரை ஆதீனம் 1,000 கோடியாம்! சமீபத்தில் முளைத்து வளர்ந்த மாதா அம்ருதானந்தா மாயிக்கு 1,600 கோடியாம்! இன்னும் பங்காரு அடிகள், சாயிபாபா, கல்கி, வைணவ ஜீயர்கள், ரவிசங்கர்ஜி, சிவசங்கர் பாபா, பலவகையான ‘ஆனந்தா’க்கள் இருக்கிறார்கள். சேலம் குட்டி சாமியார் மூக்கு வெளுப்பதற்குள் 300 கோடியாவது சேர்ந்து விடுவார்.
ஜெகத்குருக்களும், ஆதீனங்களும் கழனியில் இறங்கி நாத்து நட்டு அறுப்பு அறுத்தா மடத்திற்குச் சொத்து சேர்த்தார்கள்?
ஒவ்வொரு மடத்துக்கும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களும், மன்னர்களும், வணிகர்களும் தங்க வைடூரியங்களையும் நிலங்களையும் தங்களின் கீழ் வேலை செய்த கூலி விவசாயிகளுடன் சேர்த்தே கொடுத்து ‘குடிநீங்கா தேவதானம்’ என்ற பெயரில் அடிமைப்படுத்தினர். பருவநிலை பொய்த்தாலும் மேல்வாரம், கீழ்வாரம் என்று கடுமையான வரிகளைப் போட்டு, குத்தகை பாக்கி அளக்காத கூலி விவ்சாயிகளைக் கொன்று, புதைத்த இடத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்த மடங்களின் ‘சிவத் தொண்டை’ இன்றும் மக்கள் வாய்வழிக் கதையாகப் பேசி வருகின்றனர்.
ஊரே எறும்பு புற்றிலும், எலி வளையிலும் அரிசியெடுத்துப் பசி போக்கிய பஞ்ச காலத்திலும் குகைக்குள் தானியங்களையும், செல்வங்களையும் பதுக்கி வைத்து, மக்களை வரி போட்டுக் கசக்கிப் பிழிந்த இந்த மடங்களின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்கள் கலகம் செய்த வரலாறு திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டில் “குகையிடிக் கலகம்” என்று குறிப்பிடப்படுகிறது.
ஆன்மீகவாதிகளல்ல ஆளும் வர்க்க ஏஜெண்டுகள்
அன்று முதல் இன்று வரை மதங்களையும் ஆதீனங்களையும் தீனி போட்டு வளப்பவர்கள் ஆளும் வர்க்கங்கள்தான். நிலப் பிரபுக்களின் கொடுங்கோன்மையையும், சுரண்டலையும் சாதி ஆதிக்கத்தையும் நியாயப்படுத்தவும், கரும வினையென்றும், தலை விதியென்றும் கூறி தங்கள் துன்பத்தைச் ககித்துக் கொள்ளுமாறு மக்களை மூளைச் சலவை செய்யவும் மடாதிபதிகளுக்கு மன்னர்கள் கொடுத்த லஞ்சம்தான் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள்.
பார்ப்பனக் குருமார்களையும் ஆதீனங்களையும் மன்னர்கள் பணிந்து வணங்கக் காரணம் அவர்களின் தெய்வீக ஆற்றல் மீது கொண்ட மரியாதை அல்ல; அது ஒரு நாடகம். “நாடாளும் மன்னனே பணிந்து வணங்கும்போது மடாதிபதிகள் தெய்வத்தின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டும்” என்று மக்களை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்.
அந்த நாடகம் இன்றும் தொடர்கிறது. மல்லையாவும், அம்பானியும், பிர்லாவும் கோடி கோடியாய்க் கொட்டியளந்து விட்டு ஜெயேந்திரரின் காலிலும் விழுகிறார்களே, அவர்களுக்குத் தெரியாதா அந்தத் ‘துறவி’யின் யோக்கியதை? அப்துல் கலாம் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை எல்லோரும் ஜெயேந்திரரின் முன் பணிவாகத் தரையில் உட்பார்கிறார்களே, பீடத்தில் அமர்ந்திருக்கும் சுப்பிரமணி ‘முழு மூடன்’ என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாதா?
சங்கர மடம் எனும் சோம்பேறிப் பார்ப்பனக் கூட்டத்தை ஆளும் வர்க்கம் சும்மா தீனி வோட்டு வளர்க்கவிலலை. மக்களை மழுங்கடிக்கும் அருள்வாக்கு, மக்களை அடிமைப்படுத்தும் சாதி வெறி, மக்களைப் பிளவுபடுத்தும் மதவெறி என்பதையெல்லாம் சங்கராச்சாரி ஆளும் வர்க்கத்துக்குத் திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடன்.
“சிவன் சொத்து குல நாசம்” என்று மிரட்டுகிறார்களே, இவர்கள் சேர்த்திருப்பது தான் பல குலங்களை நாசம் செய்து பிடுங்கிய சொத்து. இப்படி ஊர்தாலி அறுத்துச் சேர்த்த சொத்தை நிர்வாகம் செய்வதற்கு வள்ளலாரையும் பட்டினத்தாரையுமா நியமிக்க முடியும்?
அதனால்தான் திருவாவடுதுறை பெரிய ஆதீனத்துக்குச் சின்ன ஆதீனம் மருந்து வைக்கிறார். சின்ன ஆதீனமாக நியமித்த சுவாமிநாதனுக்கு குருபக்தி இல்லையென்று நாலே நாளில் விரட்டியடித்து விட்டுப் போலீசில் புகாரும் கொடுக்கிறார் மதுரை ஆதீனம்.
“மற்ற ஆதீனங்கள் சாமியார்களைப் போல் அல்ல, நாங்கள் ஒரிஜினல் ஆதிசங்கரன் பரம்பரை” என்று பார்ப்பனத் திமிருடன் பீற்றிக் கொண்டிருந்த சங்கரமடம் இன்று சந்தி சிரிக்கிறது. ஜனாதிபதிகள், பிரதமர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், பத்திரிக்கைகள் அனைவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு, தங்களது லீலைகளைச் சாமர்த்தியமாக அமுக்கி வந்த காம – கேடிகள் இன்று சிக்கிக் கொண்டு விட்டார்கள்.
“ஜெயேந்திரர் விஜயேந்திரரின் தம்பிககளும் அவர்களது உறவினர்களும் தான் சங்கரமடத்தின் சொத்தை ஆதிக்கம் செய்கிறார்கள்” என்று ‘இந்து’ பத்திரிக்கையே எழுதுகிறது. வாரிசு அரசியல், ஊழல் அரசியல் என்று அரசியல்வாதிகளைச் சாடும் முற்றும் துறந்த முனிவர்களின் யோக்கியதை இது.
ஜெகத்குருவே, கடவுளை ஏன் கைவிட்டீர்?
குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கும் ஜெயேந்திரர் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று மாஜிஸ்டிரேட்டிடம் முழங்கவில்லை. “நான் நீதிபதியை நம்புகிறேன்; போலீசை நம்ப மாட்டேன்” என்று புலம்புகிறார். “துன்பங்களுக்குக் காரணம் கருமவினை” என்று ஊருக்கு உபதேசம் செய்யும் லோக குரு, தனக்குத் துன்பம் வந்தவுடனே உலகத்திலேயே சிறந்த வக்கீலைத் தேடிப் பிடித்து ஜாமீனுக்காக வாதாடுகிறார்.
பெண்டாட்டி பிள்ளையுடன் இல்லற வாழ்வு நடத்தும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும், மக்கள் பிரச்சினை களுக்காகப் போராடி மாதக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். லோக ஷேமத்துக்காகப் பாடுபடும் இந்த முற்றும் துறந்த முனிவருக்கோ மூணு நாள் சிறையில் தங்க முடியவில்லை. நெய்யும், தயிரும், திராட்சையும், முந்திரியும் தின்று ஏ.சி. ரூமில் வளர்ந்த உடம்பு பங்களா கேட்கிறது.
இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள், தாங்கள் கொண்டிருக்கும் பற்றுதலை நிரூபிக்கத் தம்மைத் தாமே வருத்திக் கொள்கிறார்கள். விரதமிருக்கிறார்கள், தீ மிதிக்கிறார்கள், அலகு குத்துகிறார்கள், உழைத்துச் சேர்த்த பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.
வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கும் மக்கள் கோயில் கோயிலாகச் சுற்றுகிறார்கள். வேலை கிடைக்காத இளைஞர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கடன் சுமை தாளாத விவசாயிகள், வரதட்சிணைக் கொடுமையால் திருமணமாகாத பெண்கள், மருத்துவம் பார்க்க வசதியின்றித் தவிக்கும் நோயாளிகள். . . என்று பரிதவிக்கும மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மடாதிபதிகள் போதாதென்று குட்டிச் சாமியார்களும் சதுர்வேதிகளும் பிணந்தின்னிகள் போல மக்களை மொய்க்கிறார்கள்.
தங்களுடைய கையறு நிலையையும் கடவுள் பக்தியையும் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிக்கத்தான் அந்தச் சாமியார்களும் மடாதிபதிகளும் அவதரித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்ற உண்மையை உணராத வரை மக்களுக்கு விடிவில்லை.
சங்கராச்சாரி முதல் சதுர்வேதி வரை எந்தச் சாமியாருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. “எல்லோருக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்துக் கூலி கொடுக்கிறான்” என்று நம்பும் பக்தர்கள் தான் பழி பாவத்துக்கு அஞ்சுகிறார்கள். “நான்தான் கடவுள்” என்று சொல்லிக் கற்பழிக்கிறான் சதுர்வேதி; கோயிலில் வைத்துக் கொலை செய்யத் திட்டம் போட்டுத் தருகிறான் சங்கராச்சாரி. இதுதான் சாமியார்களின் யோக்கியதை.
பக்தர்களை மொய்க்கும் பிணந்தின்னிகள்!
மக்களிடம் நிலவுவது கடவுள் பக்தி; மடாதிபதிகளிடம் இருப்பதோ காணிக்கை பக்தி. பக்தனைக் கைது செய்து இழுத்துப் போவதைப் பற்றி இந்து முன்ணிக்குக் கவலை இல்லை. பரமாச்சார்யார்களைப் பிடித்து இழுத்தால் பல ஆயிரம் கோடி சொத்தும் சேர்த்து வருகிறதே, அதனால்தான் பதறுகிறது இந்து முன்னணி; “எண்பது கோடி இந்துக்களின் தலைவரைக் கைது செய்வதா?” என்று எகிறுகிறார் அத்வானி; மடத்துக்குள்ளே போலீசு நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று முழங்குகிறது பாரதிய ஜனதா.
“தெருவோர விலை மாதர்களைக் கைது செய்லாம். ஆனால், நட்சத்திர ஓட்டல் விபச்சார விடுதிகளில் போலீசு நுழையக் கூடாது” என்பதைப்போல, “சதுர்வேதியைக் கைது செய்து கொள் சங்கராச்சாரி மீது கை வைக்காதே” என்கிறார்கள் இவர்கள்.
‘ஜெயேந்திரர் கொலை செய்திருப்பார்’ என்பதில் இந்த முன்னணிக்கும், கூலிப்படைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் டி. வி. எஸ். முதலாளிக்கும், விமானம் வழங்கிய விஜய்மல்லையாவுக்கும் எந்தச் சந்தேகமும் இருக்காது. இப்படிச் ‘சொதப்பி’ விட்டாரே என்ற வருத்தமிருக்கலாம், அவ்வளவு தான்.
இருந்தாலும் சினிமாக் கதாநாயகிகளை ‘கைபடாத மலர்கள்’ என்று ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யும் சினிமா முதலாளிகளைப் போல, ‘சங்கர மடம்’ என்ற தங்களுடைய பக்திப் படத்தின் கதாநாயகனான சங்கராச்சாரியை உத்தமனாகச் சித்தரிக்க இவர்கள் முயல்கிறார்கள். ஆனால் மக்கள் இதனை நம்ப மறுக்கிறார்கள் என்பது தான் இவர்களுடைய பிரச்சினை.
ஜெயேந்திரரின் தண்டிக்கப்படாத குற்றங்கள்!
ஏனென்றால் சங்கரமடம் என்பது பார்ப்பன மடம். கிரிமினலாக இருந்தாலும் ஒரு பார்ப்பான்தான் அங்கே சங்கராச்சாரியாக முடியுமே தவிர, எப்பேர்ப்பட்ட பக்தனாக இருந்தாலும் சூத்திரரோ, பஞ்சமரோ சங்கராச்சாரியாக முடியாது.
செத்துப்போன சங்கராச்சாரியின் காலத்தில் பார்ப்பனரல்லாத சாதாரண மக்கள் யாரும் அந்த மடத்தைத் திரும்பிப் பார்த்தது கூட இல்லை.
‘இந்து ஒற்றுமை’ என்ற பெயரில் பார்ப்பனப் பாசிசக் கும்பலான ஆர்.எஸ்.எஸ் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்களை வளைக்கத் தொடங்கிய போதுதான் ஜெயேந்திரருக்கு ‘சேரிப்பாசம்’ வந்தது. சிறுபான்மை மக்களுக்கெதிரான கூலிப்படையாக தலித் மக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் ஜெயேந்திரரின் ‘சேரி விஜயம்’ தொடங்கியது.
அப்போதும் தன்னுடைய சாதித் திமிரை ஜெயேந்திரர் கடுகளவும் விடவில்லை. கூத்திரம்பாக்கம் தலித் மக்கள் கோயிலில் நுழைய உரிமை கேட்டபோது “நீங்கள் சுத்தமில்லை” என்று கூறியது, தன்னை ‘தரிசிக்க’ வந்த மராத்திய முதல்வர் ஷிண்டே, தலித் என்பதால் அவரைப் பத்தடி தள்ளி நிறுத்தியது, சங்கராச்சாரி நடத்தும் கல்லூரியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனிப் பந்தியில் சோறு, தலித் மக்களை ஒடுக்கும் மதமாற்றத் தடைச் சட்டம்… என்று ஜெயேந்திரர் இழைத்துள்ள தீண்டாமைக் குற்றங்களுக்காக வழக்கு தொடர்ந்திருந்தால் சாகும் வரையில் இந்தச் சங்கராச்சாரி உள்ளேயே கிடக்க வேண்டியிருக்கும்.
கிறித்தவ, இசுலாமிய மக்களுககு எதிரான மதவெறியைத் தூண்டும் பேச்சு, குஜராத் படுகொலை நாயகன் மோடிக்கு ஆதரவு, அயோத்தி விவகாரத்தில நடத்திய அயோக்கியத்தனங்கள் ஆகியவற்றுக்காகத் தண்டிப்பதாக இருந்தால் ஜெயேந்திரர் இன்னொரு பிறவி எடுத்துச் சிறை செல்ல வேண்டும்.
சங்கரராமன் கொலையைக் காட்டிலும் கொடியவை மேற்கூறிய குற்றங்கள். தன்னுடைய காம லீலைகளுக்கும், ஊழல்களுக்கும் எதிராகக் கேள்வி எழுப்பிய ஒரே குற்றத்துக்காக சொந்த சாதிக் காரனை, சங்கரமடத்தில் பக்தனைக் கொலை செய்யத் துணியும் ஒரு கிரிமினல் மற்ற சாதி மத மக்களை மயிருக்குச் சமமாகக் கூட மதிக்க மாட்டான் என்பதில் ஐயம் வேண்டுமா?
காறி உமிழ்கிறார்கள் மக்கள்!
இன்று தினமலர், தினமணி போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகள் ஜெயேந்திரருக்கு ஆதரவாக வரிந்து வரிந்து எழுதினாலும், இந்து முன்னணி கும்பல் கரடியாய்க் கத்தினாலும் அதைக் கேட்க நாதியில்லை. பெரும்பான்மை மக்கள் நாத்திகர்களாகி விட்டார்கள் என்று இதற்குப் பொருளல்ல; சங்கராச்சாரி ஒரு பார்ப்பனக் கிரிமினல் என்பதைத் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்களிலேயே கணிசமான பிரிவினர் ஜெயேந்திரர் கொலை செய்திருக்கக் கூடும் என்பதைத் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்தக் கிரிமினலுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு வட நாட்டிலிருந்து வந்து இறங்குகிறார்கள் அத்வானி, தொகடியா, அசோக் சிங்கால் போன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கிரிமினல்கள். பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பனப் பாசிசத்தை விதைக்க வெறி கொண்டு முயற்சிக்கிறார்கள்.
ஆனால், ஜெயேந்திரரைத் தங்களது மதத் தலைவராக பெரும் பான்மை ‘இந்து’ மக்கள் கருதவில்லை; அவர் நிரபராதி என்று நம்பவுமில்லை; மாறாக, எல்லாக் குற்றவாளிகளையும் விசாரிப்பதைப் போல நன்றாகக் ‘கவனித்து’ விசாரித்தால்தான் சங்கராச்சாரி குற்றத்தை ஒப்புக் கொள்வார் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
இனி, ஜெயேந்திரருக்கு ஆதரவாகக் கூட்டம் சேர்க்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழகத்தில் மதவெறியைத் தூண்டும்; வதந்திகளைப் பரப்பி ஆங்காங்கே கலவரத்தைத் துவக்கி வைக்கும். நாத்திகர்களும் கம்யூனிஸ்டுகளும் சங்கரமடத்தின் சொத்தையும் இந்து மத நிறுவனங்களின் சொத்தையும் அபகரிக்க சதி செய்வதாகப் பிரச்சாரம் செய்யும். கிறித்தவர்களும முசுலீம்களும இந்து மதத்தை இழவுபடுத்து வதற்காகத்தான் இவர்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று கூசாமல் புளுகும்.
மொத்தத்தில் கிரிமினல் ஜெயேந்திரருக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட முடியாத காரணத்தால் வெறி பிடித்த நாயின் நிலையில் இருக்கிறது பார்ப்பனப் பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பல். வெறி நாய்களைச் சொல்லித் திருத்த முடியாது.
போராட்டம் தான் இதற்கு விடை. “வழக்கை போலீசு விசாரிக்கும் தண்டனை வழங்கும்” என்று நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜெயேந்திரர் என்ற குற்றவாளி, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பார்ப்பனப் பாசிசக் கும்பலின் தலைவன். எனவே இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நேர்மையுணர்ச்சி கொண்ட ஒவ்வொருவரும் அக்கறை காட்ட வேண்டும்.
ஜெயேந்திரரால் ஏமாற்றப்பட்டிருப்பவர்கள் நாத்திகர்களல்லர்; இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள். காவி உடையணிந்த ஒரு கிரிமினலை ஆன்மீகத் தலைவரென்று நம்பி அவர் காலில் விழுந்த ஒவ்வொருவரும் ஜெயேந்திரரால் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கிரிமினல் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோருவது பெரும்பான்மை இந்துக்களின் கடமை.
மடங்கள், ஆதீனங்கள் என்ற பெயர்களில் மக்களின் துயரத்தைக் காசாக்கிக் கொள்ளும் இத்தகைய கிரிமினல்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைச் சாக்காகக் கொண்டு பார்ப்பன மதவெறியைப் பரப்பவும், தமிழகத்தை குஜராத் ஆக்கவும் சதி செய்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இச்சதியை முறியடிக்க இறை நம்பிக்கை கொண்ட மக்களும், பெரியாரின் தொண்டர்களும், ஜனநாயகவாதிகளும், கம்யூனிஸ்டுப் புரட்சியாளர்களும் இணைந்து போராடுவோம்!
- சங்கர மடத்தை இழுத்து மூடு!
- விஜயேந்திரையும் சங்கர மடத்துப் பார்ப்பனக் கும்பலையும் கைது செய்!
- ஜெயேந்திரருக்குச் சிறப்புச் சலுகை வழங்காதே!
- கொலைக் குற்றவாளியாக நடத்து!
- நீதி விசாரணை முடியும் வரை ஜாமீனில் விடாதே!
- இந்தக் கிரிமினல் கும்பலின் சதி ஆலோசகர்களான ஆர்.வி., சேசன் உள்ளிட்ட பார்ப்பன அதிகார வர்க்கக் கும்பலைக் கைது செய்து விசாரணை நடத்து!
- சங்கரமடத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
- சொத்து விவரங்களை வெளியிடு! vinavu .com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக