திங்கள், 2 டிசம்பர், 2013

ஏற்காட்டில் பிரவீன் குமார் என்ன செய்கிறார் ? பொதுமக்களின் பணம் பறிப்பு ! அமைச்சர்கள் வாகனங்களுக்கு சொகுசு வரவேற்பு !

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அந்தத் தொகுதியிலே முகாமிட்ட வர்கள் எல்லாம் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள்.> இந்த தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது, அரசு விருந்தினர் விடுதியில் தங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும், ஒரு சில அமைச்சர்களும், வாரியத் தலைவர்களும் இவற்றை மீறி நடந்து கொண்டார்கள். அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும், அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட வைத்தார்கள். ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி, காரிப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சியின் இலவசப் பொருள்களான விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி போன்றவற்றை ரகசியமாக வழங்கியதை புகைப் படத்தோடு ஏடுகளே வெளியிட்டன.
ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொது மக்களின் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடு வதே இல்லை


தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்த போது, அமைச்சருக்குப் பாதுகாப்பாக காவல் துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு அரசு ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தினர்.
அமைச்சர்களுடன் சென்று வாக்குச் சேகரித்த அரசு அலுவலர், சத்துணவு அமைப்பாளர் ஒருவரின் புகைப்படமே ஏடுகளில் வெளிவந்தது. விதிமுறைகளை மீறி சேலம் மாவட்டம் முழுவதும் முதலமைச்சர் படத்துடன் அம்மா உணவகம், இரட்டை இலைச் சின்னம் பொறித்த அம்மா குடிநீர் விற்பனை கடை, தொகுப்பு வீடுகளில் முதலமைச்சர் படம் ஆகியவை அகற்றப்படாமல் இருந்தன.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் உச்சக்கட்டமாக ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2000 ரூபாயும் வழங்கப்பட்டதாக ஏடுகளிலேயே வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. நடைபெறுவது பொதுத் தேர்தல் அல்ல. ஒரு தொகுதியிலே நடைபெறும் இடைத்தேர்தல்தான். அதற்குத்தான் ஆளுங்கட்சி இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
நடைபெறும் காட்டாட்சிக்கு, தொடர்ந்து நடத்தி வரும் அராஜகங்களுக்கு, ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டாமா? அதற்குத்தான் இந்த இடைத் தேர்தல்! இந்தத் தேர்தலிலும், ஆளுங்கட்சியை வெற்றிபெறச் செய்துவிட்டால், அவர்கள் மேலும் மேலும் அராஜகங்களிலே ஈடுபட வழி ஏற்பட்டு விடும்.


தங்களை எதிர்க்க யாருமே கிடையாது என்ற நினைப்பு அவர்களுக்குத் தோன்றிவிடும். நடைபெறும் ஆட்சியில் எந்தத் தரப்பினரும் நிம்மதியாக இல்லை.
நாட்டிலே எந்தக் குறை ஏற்பட்டாலும், உடனே பிரதமருக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதுகிறார்கள். அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் யாராவது இந்த ஆட்சிக்கு எதிராகவோ, முதல் அமைச்சருக்கு எதிராகவோ பேசினால் போதும், உடனே “அவதூறு வழக்கு” தான்.
இவற்றுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கொரு வாய்ப்பாக இருப்பதுதான் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல். ஏற்காடு இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி என்ற நல்ல செய்தி வரும் என்று நம்புகிறேன்’’என்று கூறியுள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: