ambedkarதன் கொள்கையை தன்னுடைய ஆதரவாளர்களிடமும், தன்னைப் போலவே கொள்கையாளர்களிடமும் திரும்ப திரும்ப சொல்வதும் கைதட்டு வாங்குவதும் பெரிய விசயமல்ல, அதன் பயன் பேசுகிறவர்களுக்கு  மட்டும்தான்.
தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களிடம் அதைப் பற்றி பேசுவதற்கும் அவர்களிடம் விவாதிப்பதற்கும் நேர்மையும் துணிச்சலும் எதிர்பார்ப்பற்ற அர்பணிப்பும் வேண்டும்.
அப்படி செயல் பட்ட தலைவர்கள்  இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் தான்.
தன் கொள்கைகளுக்காக செருப்பு வீச்சை சந்தித்தப் பிறகும் அவமானப்படுத்துவார்கள் என்று தெரிந்தே, இன்னும் தீவிரமாக  செயல்பட்டார்  பெரியார்.
டாக்டர் அம்பேத்கரும், தன் கொள்கையின் எதிரி யாரோ அவர்களிடம் நேரடியாக மோதுவார். எந்த செல்வாக்கான பின்னணியும் இல்லாமல் தன் அறிவின் தயவிலும் தன் கொள்கையின் உறுதியிலும் அந்த துணிச்சல் அவரிடம் நிரம்பி வழிந்தது.
அதிகார வர்கத்திடமே நேருக்கு நேர் அதைச் செய்தார். வெள்ளை ஆளும் வர்கத்திடம் மட்டுமல்ல, காந்தி போன்ற மிகப் பெரிய ஆளுமைகளை எதிர்த்தும், விவாதங்களில் ‘ரணகள’ படுத்தியிருக்கிறார்.
வட்டமேசை மாநாட்டில் அவர் கையாண்ட விவாத முறை நினைத்துப் பார்த்தாலே… சிலிர்க்கிறது.
மிகைப்படுத்தப்பட்ட சினிமா கதாநாயகனைவிட பல மடங்கு சக்தி மிக்க ஒரு நபராகவே அதில் அவர் காட்சித் தருகிறார்.

களத்தில் அவர் தனியாக அறிவாயுதத்தோடு….
எதிர் திசையில் வெள்ளை அரசு, வெள்ளையனுக்கு  விசுவாசமாக வேலை பார்க்கும், இந்திய ஆளும் கும்பல், ஆதிக்க ஜாதிக்காரர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களுக்கெல்லாம் தலைவரான காந்தி; எல்லோரும் அதிகாரம், செல்வாக்கு என்கிற ஆயுதங்களோடு அம்பேத்கரை குத்திக் கிழிக்க காத்திருக்கிறார்கள்.
கொடிய ஆயுதங்களோடு கொல்வதற்குத் தயாராக இருக்கிற வில்லன்களை, ஓடி வந்து சுவரில் ஏறி திரும்ப எகிறி, ஓரே உதையில் எல்லோரையும் வீழ்த்துகிற நாயகனைப் போல், டாக்டர் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் எல்லோரையும் தும்சம் செய்தார்.
டாக்டர் அம்பேத்கருக்கு இன்னொரு மிக முக்கியமான சிறப்பிருக்கிறது; அவர் தலைவர் மட்டுமல்ல, இந்தியாவின் மிக முக்கியமான முதன்மையான ஆய்வாளர்.
மற்ற ஆய்வாளர்களைப் போல் ‘..என்று இருந்தது..’ என்று மட்டும் சொல்லிவிட்டு பதுங்கிக் கொள்பவரல்ல, தன்  ஆய்வு முடிவு என்ன சொல்கிறதோ அந்த முடிவிலிருந்து தன் அரசியல் கண்ணோட்டத்தை துவங்குவார், விவரிப்பார், விளக்குவார், எவ்வளவு நுட்பமான சிக்கல்களுக்குள்ளும் லாவகமாக உள் நுழைந்து சதி வலைகளை அறுத்தெறிவார். அதற்கு ஆதாரங்களை வரலாற்றிலிருந்து போதும் போதும் என்கிற அளவிற்கு அள்ளி வீசுவார்.
இந்திய வரலாறை பல்வேறு கண்ணோட்டங்களில் எழுதிய மதவாதிகள், முற்போக்காளர்கள் எல்லோருமே, வேத காலத்திற்கு முன் இந்தியாவிற்கு வரலாறே இல்லை என்பது போன்ற முன் முடிவுகளோடே, இந்தியாவை வேத காலத்திலிருந்தே பார்த்தார்கள். ராகுல் சாங்கிருத்யாயன் போன்ற மார்க்சிய கண்ணோட்டம் கொண்டவர்களும் இதற்கு விதி விலக்கல்ல.
வேத, இதிகாச, புராண காலங்களின் சதிகளை அம்பலப்படுத்தி அதை தகர்த்த ஆய்வாளர், டாக்டர் அம்பேத்கர் ஒருவரே.
அவரின் தீவிரமான வாசிப்பும் ஆய்வுமே அவரின் ஆயுளை 65 வயதிற்குள் முடித்துவிட்டது. அவர் மரணத்தில் சதி இருக்கிறது என்றார் பெரியார். அவரின் ஆய்வுகளைப் படிக்கும்போது அந்த சதிக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.ம்  இந்தியாவில் பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் அப்புறம்தான் அத்தனை தலைகளும்