வியாழன், 5 டிசம்பர், 2013

ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை பறிப்பது யார்? தமிழ்நாட்டு மக்கள் வெற்றி பெறுவார்களா ? எமக்கு நம்பிக்கையில்லை

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பில் நடைபெற்ற இந்த தேர்தலில் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் வாக்களித்தனர். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் - 2,40,290; பதிவான வாக்குகள் - 2,14,444. ஏறக்குறைய 90 சதவிகித வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ள நிலையில் வெற்றி பெறப்போவது யார்? என்பதை அறிய பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில், கடந்த தேர்தல் முடிவுகளை சற்று ஆராய்ந்து பார்ப்போம். ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 179492. இதில் அ.தி.மு.க. 104221 வாக்குகளும் தி.மு.க. 66639 வாக்குகளும் பெற்றன. அ.தி.மு.க. வேட்பாளர் 37582 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்பொழுது நடைபெற்ற இடைத்தேர்தலில் 214444 வாக்குகள் பதிவாகியிருக்கிறது. 2011 தேர்தலை விட 34952 வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். புதிதாக வாக்களித்துள்ள வாக்காளர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராகதான் இருக்கமுடியும். இந்த கூடுதல் வாக்குகள் யாருக்கு விழுந்திருக்கும்? இந்த புதிய வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிக்கனியைப் பறிப்பது யார்? என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.


2011 தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் தி.மு.க. 406 வாக்குகளையும் அ.தி.மு.க. 65 வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில், தற்பொழுது இரு கட்சிகளும் எவ்வளவு வாக்குகள் பெறும் என்பது 8-ம் தேதியன்று தெரிந்துவிடும்.

ஏற்காடு தொகுதியானது ஏற்காடு, அயோத்தியாப்பட்டினம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும், அயோத்தியாப்பட்டினம், பெலூர், வாழப்பாடி ஆகிய பேரூராட்சிகளையும் உள்ளடக்கியதாகும்.

2011 சட்டமன்ற தேர்தலில் ஏற்காடு ஒன்றியத்தில் அதிமுக 11111 வாக்குகளையும் திமுக 7949 வாக்குகளையும் பெற்றது. அயோத்தியாபட்டினம் ஒன்றியத்தில் அதிமுக 45529 வாக்குகளையும் திமுக 27853 வாக்குகளையும் பெற்றது. இதில் திமுக வேட்பாளர் மாறனின் சொந்த ஊரான பூவனூரில் அதிமுக 652 வாக்குகளையும் திமுக 445 வாக்குகளையும் பெற்றுள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக 8762 வாக்குகளையும் திமுக 4454 வாக்குகளையும் பெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சரோஜாவின் சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டியில் அதிமுக 1509 வாக்குகளையும், திமுக 583 வாக்குகளையும் பெற்றுள்ளது. வாழப்பாடி ஒன்றியத்தில் அதிமுக 26683 வாக்குகளையும் திமுக 18292 வாக்குகளையும் பெற்றது.

அயோத்தியாப்பட்டினம் பேரூராட்சியில் அதிமுக 3778 வாக்குகளையும் திமுக 2106 வாக்குகளையும் பெற்றது. பெலூர் பேரூராட்சியில் அதிமுக 2816 வாக்குகளையும் திமுக 1889 வாக்குகளையும் பெற்றது. வாழப்பாடி பேரூராட்சியில் அதிமுக 5477 வாக்குகளையும் திமுக 3690 வாக்குகளையும் பெற்றது.

2011 உள்ளாட்சி தேர்தலில் அயோத்தியாப்பட்டினம் பேரூராட்சியில் அதிமுக 2876 வாக்குகளையும் திமுக 2134 வாக்குகளையும் பாமக 660 வாக்குகளையும் பெற்றது. பெலூர் பேரூராட்சியில் அதிமுக 2281 வாக்குகளையும் திமுக 291 வாக்குகளையும் பெற்றது. காங்கிரஸ் 653 வாக்குகளை பெற்றது. வாழப்பாடி பேரூராட்சியில் அதிமுக 4309 வாக்குகளையும் திமுக 2374 வாக்குகளையும், காங்கிரஸ் 2508 வாக்குகளையும் பெற்றது.

இத்தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியிலும், தேமுதிக அதிமுக கூட்டணியிலும் இடம்பெற்றது. தேமுதிக இத்தொகுதியில் 2006 சட்டமன்ற தேர்தலில் 10736 வாக்குகளும் 2009 பாராளுமன்ற தேர்தலில் 21949 வாக்குகளையும் பெற்றது. காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் 1989 சட்டமன்ற தேர்தலில் 13430 வாக்குகளும் 1996 சட்டமன்ற தேர்தலில் 12900(தமாகா) வாக்குகளையும் பெற்றது. பாமக இத்தொகுதியில் 1991 சட்டமன்ற தேர்தலில் 7392 வாக்குகளை பெற்றது. தற்பொழுது இக்கட்சிகள் அனைத்தும் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டன. இடைத்தேர்தலிலும் இக்கட்சிகள் போட்டியிடவில்லை. இக்கட்சிகள் யாருக்கு ஆதரவாக ஒட்டளிக்கவேண்டும் என்று தங்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தவில்லை.

2011 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் ஏறக்குறைய 58 சதவிகித வாக்குகளை பெற்ற அதிமுக தற்பொழுது 56லிருந்து 58 சதவிகித வாக்குகளையும்,  37 சதவிகித வாக்குகளை பெற்ற திமுக தற்பொழுது 37லிருந்து 39 சதவிகித வாக்குகளை பெறும் என தெரிகிறது. அதன்படி பார்த்தால், அதிமுக 36455 வாக்குகள் முதல் 45033 வாக்குகள் வரை அதிகமாக பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை: