திங்கள், 2 டிசம்பர், 2013

நம்மாத்து பொம்மனாட்டிகளையும் அழைச்சுண்டு வாங்கோ ! மனுநீதிக்கு அப்புறம்தான் மனுஷாளோட நீதியெல்லாம்.

சமயத்துல நம்ம சப்போர்டர்ஸ் கூட ஏதாச்சும் வினையா பண்ணிடறா. நம்ம சுப்புணிய பாருங்கோ, எனக்காகவும் நம்ம மதத்துக்காகவும் எவ்வளவோ பண்ணிண்டுருக்கான். நம்ம தீர்ப்பு வந்ததும் வாய வச்சுகிட்டு சும்மாயில்லாம ஜெயலலிதா மன்னிப்பு கேக்கணும்னு சொல்றான். அதை கேட்டதுலேருந்து எனக்கு பேதி நிக்கவேயில்லை
குருமூர்த்தியே தன் கட்டுரையில உண்மை குற்றவாளிகள கண்டுபிடிக்கணும்னு போற போக்குல சொல்றாண்டா. இன்னொரு இலைக்கட்டுக்கு ஆர்டர் பண்ற மாதிரிதான்
இத்தன நாள் கஷ்டத்தை கக்கத்துல வச்சுண்டு நான் பட்ட அவஸ்தை அந்த பகவானுக்கும் நேக்கும்தாண்டா தெரியும். அப்பப்பா எத்தனை ஏச்சு பேச்சு! எத்தனை அலைக்கழிப்பு! காமாட்சி விளக்கு, காஷாயம், அர்த்தஜாம பூஜைன்னு ஆன்மீக சமாச்சாரங்களோட புழங்கிண்டிருந்த என்னை காராகிரகத்துக்கு அனுப்ப இவாளுக்கு எப்படி மனசு வந்தது? மத்தில வாஜ்பாய் மாமா ஆட்சி நடக்குற தைரியத்துல அன்னைக்கு ஒரு பிரஸ்மீட்டுல நாலு வார்த்தை கூடுதலா பேசிட்டேன். அதுக்காக இந்த பொம்மனாட்டி என்னை என்ன பாடு படுத்திடுத்து பார்த்தேளா? ஆந்திராவுல சிவனேன்னு கிடந்தவனை ஒரு போலீஸ்காரன் வரியா இல்லை கையைப் பிடிச்சு இழுத்துட்டு போகவான்னு கேக்குறான். அந்த பதட்டத்துல அவனாண்ட பூணூல் தட்டுப்படுதான்னு செக் பண்ண முடியுமா இல்ல அவன் என்ன ஜாதின்னு கேக்கத்தான் முடியுமா சொல்லுங்கோ.. மனச கல்லாக்கிகிட்டு கார்ல ஏறிட்டேன். அப்போ, இந்த தின்னுட்டு தூங்குற சின்னப்பய “நேக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா பேஷா அழைச்சுண்டு போங்கோ”ன்னு சொல்றான். இதுக்குத்தான் வாரிசா நாம பெத்த புள்ளை இருக்கணும்குறது. அந்த சமயத்துலதான் நேக்கு இந்த பங்காரு, கல்கி சாமியாருங்க மேலேயெல்லாம் பொறாமை வந்துட்டுது.
போலீஸ் காவலில் சங்கராச்சாரி
நான் அப்படி என்னடா தப்பு பண்ணினேன்? முருகன் சூரனை என்ன பண்ணினார்? கிருஷ்ணன் கம்சனை என்ன பண்ணினார்? சிவன் தன் மருமான் மன்மதனை என்ன பண்ணினார்? அதெல்லாம் விடுங்கோ… நீங்கல்லாம் கொசு கடிச்சா என்ன செய்வேள்? நீங்கள்ல்லாம் வதம் பண்ணினா நியாயம். எனக்கு மட்டும் இபிகோ முன்னூத்தியேழா?
அதுவும் பெருமாள் கோயில்லயே மர்டரான்னு சிலர் புலம்பறதா கேள்விப்பட்டேன். ஏண்டா மாபாவிகளா.. அதுக்காக நாமக்காரவாளே கவலைப்படலை, உங்களுக்கு ஏன் மேலும் கீழும் எரியறது? ஸ்பாட்டை எல்லாம் முடிவு பண்ண நான் என்ன தெலுங்கு வில்லனா? அது அனுப்பி வச்ச அப்புவோட வசதிக்காக இருக்கலாம் இல்ல அழைச்சுண்ட பெருமாளோட விருப்பமா இருக்கலாம். இடையில என்னை ஏன் இழுக்கறேள்? சங்கர்ராமன் பையனே வெட்டினவாளுக்கு மட்டும் தண்டணை கிடைச்சா போதும்னு சொல்றான். ஆனா இந்த பக்தியில்லாத மனுஷாதான் என்னை கோத்து விடணும்ங்கறதுலேயே குறியா திரியறா. அவாள்ளாம் ஒண்ணை நினைவுல வைக்கணும், மனுநீதிக்கு அப்புறம்தான் மனுஷாளோட நீதியெல்லாம்.
மடத்தோட தொடர்பில் இருந்த பொம்மனாட்டிகளுக்கெல்லாம் செலவு பண்ணினேன்னு பத்திரிக்கையெல்லாம் எழுதினா.. நான் கேக்குறேன் மடத்து சேவை செய்யிறவாளுக்கு மடம் பணம் தராட்டா வேற யாருதான் செய்வா? நான் அவாளுக்கு மட்டுமா பண்ணினேன்? இந்த பேப்பர்காரவாளுக்கு பக்கம் பக்கமா விளம்பரம் தரல? அதை ஒரு அறிக்கையா கொடுக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?? என்னண்ட பணம் வாங்கி தின்னுட்டு எனக்கெதிரா சாட்சி சொன்ன ரவி சுப்பிரமணியன் மாதிரிதாண்டா இந்த பத்திரிக்கைக்காரவாளும். என்ன செய்ய, நன்றி கெட்டவா சகவாசமும் நமக்கு தேவைப்படறதே!!
மனுநீதியை காப்பாத்தற என்னையே மனு போட்டு பார்க்கும்படியா வச்சுட்டா.. ஜட்ஜு போஸ்டுக்கு ஆளை ரெக்கமண்டு பண்ற என்னையே ஒரு ஜட்ஜு முன்னால கையை கட்டி நிக்க வச்சுட்டா. ஆனானப்பட்ட தொழிலதிபரெல்லாம் கால்ல விழுந்து ஆசி வாங்குற என்னையே மல்லாக்க படுத்த வாக்குல வாக்கு மூலம் தர வச்சுட்டா.. சீனாவுக்கு யாத்திரை போறச்சே கூட போர்வெல் போட்டு தண்ணி குடிச்சவன் நானு, என்னை சென்ட்ரல் ஜெயில்ல வெந்நீர் வாளி தூக்க வச்சுட்டாடா. டிவியில அருளுரை சொன்ன என்னை ஒரு சப் இன்ஸ்பெக்டர் அக்யூஸ்டுன்னு கூப்பிட்டாண்டா. என்னை பெட்டிஷனர்னு கூப்பிட வைக்கவே நம்மவாளெல்லாம் ரொம்ப சிரமப்பட்டுட்டா. அப்போவெல்லாம் நேக்கு யாருமே இல்லையான்னு அழுதேன்.
அப்போதான் பகவானா பார்த்து குருமூர்த்தி, சோ ராமசாமி, சுப்புரமணியன் சாமின்னு பலரை அனுப்பினான். மயிலாப்பூர், மாம்பலம் மாமியெல்லாம் கச்சேரியைத் தவிர வேற எதுக்காவது சேர்ந்தாப்ல வெளியே வந்து பார்த்திருப்பேளா? அவாள்ளாம்கூட எனக்காக மனித சங்கிலி அமைச்சாடா.. நேக்கே கண்ணுல தண்ணி வந்துடுத்து. முடிஞ்சா அவா எல்லாருக்கும் ஒரு தங்க சங்கிலி வாங்கித் தரணும். ஆனா அதுக்கும் இந்த பீடை ஜென்மங்கள் ஏதாச்சும் கிண்டல் பண்ணி வைக்கும்.
ஆனாலும் சமயத்துல நம்ம சப்போர்டர்ஸ் கூட ஏதாச்சும் வினையா பண்ணிடறா. நம்ம சுப்புணிய பாருங்கோ, எனக்காகவும் நம்ம மதத்துக்காகவும் எவ்வளவோ பண்ணிண்டுருக்கான். நம்ம தீர்ப்பு வந்ததும் வாய வச்சுகிட்டு சும்மாயில்லாம ஜெயலலிதா மன்னிப்பு கேக்கணும்னு சொல்றான். அதை கேட்டதுலேருந்து எனக்கு பேதி நிக்கவேயில்லை. கார்த்தாலேருந்து ரெண்டு கட்டு வாழையிலை ஆயிடுத்துடாம்பி. நான் சுப்புணிக்கு ஒன்னேயொன்னு சொல்லிக்கிறேன் “நாமல்லாம் ஊரான் குடியை கெடுக்கத்தான் பூமிக்கு வந்திருக்கோம். நம்ம காலை நாமளே வார வரலை”.
sankaracharya-courtநம்ம குருமூர்த்தியை பத்தி சொல்லலைன்னா நேக்கு போஜனம் கிடைக்காதுடா. நான் அரஸ்ட் ஆன நாள்ல இருந்து அவன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ல மாஞ்சு மாஞ்சு எழுதுறான்டா. தீர்ப்பு வந்த மக்கா நாளே தினமணில முக்கா பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதினான் பாரு, காவியம்டா அது. அவனுக்கு கொஞ்சம் புலமை மட்டும் இருந்ததுன்னா நமக்கு இன்னைக்கு ஒரு மாணிக்கவாசகரே கிடைச்சிருப்பார். அப்பேற்பட்ட குருமூர்த்தியே தன் கட்டுரையில உண்மை குற்றவாளிகள கண்டுபிடிக்கணும்னு போற போக்குல சொல்றாண்டா. இன்னொரு இலைக்கட்டுக்கு ஆர்டர் பண்ற மாதிரிதான் இவா பேச்செல்லாம் சமயத்துல ஆயிடறது. பத்தாத்துக்கு தீர்ப்பு வாசிக்கறச்சே ஒரு பிரம்மஹத்தி “ சாமி நீதி ஜெயிச்சுடுச்சு”ங்கறான்.. நேக்கு ஈரக் குலையெல்லாம் நடுங்கிடுத்து. நாம் ஜெயிச்சோம்னு சொன்னா ஆகாதா, வயசான காலத்துல எனக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுத்துன்னா இந்த லோகத்த யார் காப்பாத்தறது?
அப்பப்போ கசமுச வீடியோ பார்க்குறதுக்காக இண்டர்நெட்டை பார்க்கறச்சே, பலரும் நமக்கு எதிரா பேசறது புரியறது. அதை எழுதறெதெல்லாம் சின்னப்பயலுகளா இருக்கா. நம்ம சப்போர்ட்டர்செல்லாம் சஷ்டியப்பபூர்த்தி முடிஞ்சு ஒரு மாமாங்கம் ஆன மாதிரி இருக்கறதுகள். நேக்கு இதெல்லாம் சரியா படலடா அம்பி. இண்டர்நெட் பாக்கற பழக்கம் ஆரம்பிக்கறச்சே அதை கட்டி ஆண்ட நம்மவாளெல்லாம் இப்போ எங்கே? சூத்திரால்லாம் கம்பியூட்டர் வழியா வந்து கருவறையை கைப்பற்றிடுவாளோன்னு நேக்கு பயமா இருக்கு. ஒன்னு அரசாங்கத்தை தூண்டிவிடுங்கோ இல்லை ஒரு வைரசை அனுப்பியாவது இவாளையெல்லாம் ஒடுக்குங்கோ.
என்னைப் பத்தி சொன்ன அவதூறுக்கெல்லாம் இப்போ பதில் சொல்லிடறேன். லேடீஸ் ஹாஸ்டல்ல எனக்கு ஒரு சொகுசு அறை கட்டிண்டதா அரசாங்க வக்கீல் டிவியில ஒரு முறை சொன்னார். ஆமா, அந்த பெண்டுகள்ளாம் என்னை நம்பின்னா அங்க இருக்கா.. அவாளை பத்திரமா பார்த்துகறது என் பொறுப்போல்லையோ, அதான் அங்க எங்களுக்கு ஒரு ரூம் கட்டினோம். நம்ம மோடி புள்ளாண்டான் சமாச்சாரத்தை கேட்டதுக்கு பிறகுதான் நேக்கே இந்த காரணம் உறைச்சது. ஒரு எழுத்தாளர்கிட்ட ஏடாகூடம் பண்ணினேன்தான். அவா நட்சத்திரப்படி நம்மளாண்ட ஒத்துப் போயிருக்கனும். கிரகநிலைகள் சாதகமா இல்லாததால கொஞ்சம் சிக்கலாயிடுத்து. ஒத்துக்குவான்னு நினைச்சு பண்ணிட்டேன் (தருண் தேஜ்பாலுக்கு ஒரு நமஸ்காரம்), பிராமணாளா வேற போயிட்டா அதனால மன்னிச்சுக்குங்கோ.
பால சுவாமிகளுக்கு பூக்கூடையில் வச்சு புளூ ஃப்லிம் சிடி கொடுத்ததா ஒரு கம்ப்ளெயின்ட் சொல்றா. ஆமா அதையெல்லாம் பப்ளிக்காவா எடுத்துண்டு வர முடியும்? மடம்கறது நாலுபேர் உலாவற இடம், அங்கேயெல்லாம் கொஞ்சம் லஜ்ஜையோடதான் நடந்துக்க முடியும். அதோட இல்லாம நம்ம சின்னவன் கொஞ்சம் அசமஞ்சம். கோயில் செலையெல்லாம் அவனுக்கு புரியறதில்லை. அதனால ஒரு கிளாரிஃபிகேஷனுக்காக பார்த்திருக்கலாமோல்யோ? அது மட்டுமா, ஆதிசங்கரரே சவுதர்ய லஹரி பாடினவர்தான். நம்ம அம்பியும் அப்படி ஏதாச்சும் டிரை பண்ணி இருக்கலாமோனோ?
நம்மவா எல்லோரும் ஒன்னை புரிஞ்சிக்கனும். சிவபெருமானே “பிட்டுக்காக” மண் சுமந்து பிரம்படி வாங்கியிருக்கார். அதைப்போல இதுவும் நம்ம மடத்துக்கு வந்த சோதனைன்னு நினைச்சுக்குங்கோ. ஒரு பிராமணனை கொன்னதால வந்த பிரம்மஹத்தி தோஷம் இந்த தீர்ப்போட போச்சுன்னு நினைச்சுக்கோங்கோ. பகவான் அந்த கறையெல்லாம் துடைச்சுட்டார். அதனால பக்தாளெல்லாம் மீண்டும் மடத்துக்கு அடிக்கடி வரனும். அதைவிட முக்கியம் நம்மாத்து பொம்மனாட்டிகளையும் அழைச்சுண்டு வரணும்.
ஹரஹர சங்கர..ஜெய ஜெய சங்கர.
- வில்லவன் vinavu.com 

கருத்துகள் இல்லை: