திங்கள், 7 ஜனவரி, 2013

மாணவி பலாத்காரம் : அப்ரூவராக மாற இருவர் விருப்பம்

புதுடில்லி : டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரில், இரண்டு பேர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் சட்ட உதவி வேண்டும் என, கோரியுள்ளனர்.டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி, தூக்கி வீசினர். மாணவியின் ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோர்ட்டில் ஆஜர் : இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேரின், 14 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் நேற்று, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஜோதி கெலரின் அறையில், அவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, நான்கு பேரில் இருவரான, பவன் குப்தா மற்றும் வினய் சர்மா என்ற இருவரும், தங்களுக்கு சட்ட உதவி தேவையில்லை என்றும், வழக்கில், அப்ரூவராக மாற விரும்புவதாகவும், மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், மற்ற இருவரான ராம்சிங் மற்றும் அவரின் சகோதரர் முகேஷ் ஆகியோர், தங்களுக்கு சட்ட உதவி வேண்டும் என, கேட்டனர். இதையடுத்து, நான்கு பேரின் நீதிமன்ற காவலையும், வரும், 19ம் தேதி வரை நீட்டித்த மாஜிஸ்திரேட், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை பரிசீலித்த கோர்ட், ஏற்கனவே பிறப்பித்துள்ள, "வாரன்ட்' அடிப்படையில், இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார்.


மாஜிஸ்திரேட் மேலும் கூறுகையில், "அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ள பவன் குப்தாவும், வினய் சர்மாவும், இதுதொடர்பாக, தக்க மனுவை, கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். ராம் சிங் மற்றும் முகேஷுக்கு சட்ட உதவி அளிக்கப்படும்' என்றார். கைதானவர்களில், ஐந்தாவது நபரான, அக்ஷய் தாக்கூரின், நீதிமன்ற காவல், வரும், 9ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனாலும், மற்றவர்களுடன் சேர்ந்து, அவனும் இன்று கோர்ட்டில் ஆஜராகிறான். கைதான ஆறாவது நபர், சிறார் என்பதால், அவன் தொடர்பான வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் நடைபெறும்.குற்றம் சுமத்தப்பட்டவர்கள், மாஜிஸ்திரேட்டின் அறையில் ஆஜர்ப்படுத்தப்பட்டாலும், நீதிபதி கோர்ட்டிலேயே உத்தரவுகளை பிறப்பித்தார். கோர்ட் நடவடிக்கை களை, பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கூடாது என, அங்கு ஆஜராகியிருந்த மீடியாக்களை சேர்ந்த யாருக்கும் உத்தரவிட வில்லை.

நிபுணர்கள் கருத்து : இதற்கிடையில், மரண தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே, பவன் குப்தாவும், வினய் சர்மாவும், தாங்கள் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சட்ட நிபுணர்களோ, "டில்லியில் நடந்தது போன்ற கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்ட யாரும், அப்ரூவராக மாற முடியாது' என, தெரிவித்துள்ளனர்.
அவர் மேலும் கூறியதாவது: ஒரு சில வழக்குகளில், ஆதாரங்களைத் திரட்ட போலீசார் சிரமப்படுவர்; அப்படிப்பட்ட நேரங்களில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களையே, அப்ரூவராக மாறும்படி கேட்டுக்கொள்வர். இதன்மூலம், சாட்சியாக மாறுவோர், தண்டனையிலிருந்து தப்பலாம் அல்லது குறைவான தண்டனை பெறலாம். ஆனால், டில்லி சம்பவத்தில், அதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு, சட்ட நிபுணர்கள் கூறினர்.மகளின் பெயரை வெளியிட கோரிக்கை : "டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான மருத்துவ மாணவியின் பெயரை, மத்திய அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும்' என, அந்த மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தன் சொந்த கிராமத்தில், பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பலியான என் மகளின் உண்மையான பெயரை அறிந்து கொள்ள உலகமே விரும்புகிறது. அவளின் பெயரை வெளியிடுவது, இதுபோன்ற பலாத்கார சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, உயிரோடு வாழும் பெண்களுக்கு, தைரியம் கொடுப்பதாக அமையும். என் மகள், தவறு எதையும் செய்யவில்லை. தன்னை பாதுகாத்துக் கொள்ள முற்பட்டே, அவள் இறந்தாள். அதனால், அவளின் பெயரை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என, நாங்களும் ஆசைப்படுகிறோம். என் மகளை சீரழித்தவர்களை, நேருக்கு நேர் சந்திக்க, நான் முதலில் விரும்பினேன்.

ஆனால், இப்போது அதை விரும்பவில்லை. கோர்ட் அவர்களை தண்டிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர் என்பதை நான் கேட்க வேண்டும்; அது போதும். விலங்குகளைப் போல நடந்து கொண்ட, ஆறு பேருக்கும், மரண தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, சமூகத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும். இவ்வாறு, மாணவியின் தந்தை கூறினார்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: