சனி, 12 ஜனவரி, 2013

“எனக்கு கார் தந்து, சீர் தந்த ஜெயலலிதா மடியில் விழுந்தேன்!”

நாஞ்சில் சம்பத் கொடுத்த ஷாக் “எனக்கு கார் தந்து, சீர் தந்த ஜெயலலிதா மடியில் விழுந்தேன்!”

Viruvirupu  “எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எனும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்த, ஜெயலலிதாவின் மடியில் விழுந்தேன்” என்று கூறி அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க.வின் புதிய கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் “நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை” பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நடந்தது. அதில் கலந்து கொண்டி நாஞ்சில் சம்பத், “இந்திய அரசியலில் தலை நிமிர்ந்து நிற்கும் புரட்சித் தலைவி அமமா, இந்தியாவின் தலைமகளாவார். காலம் கனிந்து விட்டது.
எந்த தலைமையை ஏற்றுக் கொண்டதற்காக அடக்குமுறைகளை சந்தித்தேனோ, அந்த தலைமையே என் உயிருக்கு உலை வைக்க நினைத்தபோது, கழுகு விரட்டிய மாடப்புறா சிபிச்சக்கரவர்த்தி மடியில் விழுந்தது போல, நான் அம்மாவின் (ஜெயலலிதா) மடியில் விழுந்தேன்” என்றார்.
வெயிட் எ மினிட். மடியில் விழுந்தீரா? ஐயகோ, இதை வைத்தே உங்களுக்கு டிக்கெட் கிழித்து விடுவார்களே அ.தி.மு.க.வில்.
கழுகு விரட்டிய மாடப்புறாவை சிபிச்சக்கரவர்த்தியின் காலில் விழ வைத்து, “அம்மா காலடியில் விழுந்தேன்” என்று சொல்லியிருக்கலாமே அண்ணே! அ.தி.மு.க.வில் ‘அம்மா மடியில் விழும்’ வழக்கம் ஏதும் கிடையாது என்பதை அறியாதவராக உள்ளீரே ஐயா! இதற்குள் அம்மாவுக்கு புகார் தட்டி விட்டிருப்பார்களே ரத்தத்தின் ரத்தங்கள்!
பேச்சின் ஆரம்பத்தில் இப்படி அ.தி.மு.க. கொள்கை தெரியாமல் மடியில் விழுந்துவிட்ட நாஞ்சில் சம்பத், தொடர்ந்து பேசிய பேச்சும் சுவாரசியமாகவே உள்ளது. இதோ அதையும் படியுங்கள்.
“எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எனும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்து, 52 மாவட்டங்களுக்கும் சென்று வா, நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் எனும் குருச்சேத்திர போரில் வெற்றி ஈட்டி வா! என்று அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார். காலம் மாறும், காரிருள் உடையும், உறக்கம் கலையும், உணர்வுகள் பூக்கும், சரித்திரம் மாறும், நாளை இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதாவை அமர வைக்க நாடே தயாராகி விட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சில பரமபத விளையாட்டுகளை விளையாடி, அ.தி.மு.க. அரசுக்கு அவப்பெயர் உருவாக்க கருணாநிதி திட்டமிடுகிறார். ஆனால் அது நடக்காது!” என்றார்.
கருணாநிதி பரமபத விளையாட்டு விளையாடி விட்டு போகட்டும். இப்போது உங்கள் கட்டத்தில், ‘மடியில் விழுந்த பாம்பு’ நிற்கிறதே. காலில் விழுந்தாவது தப்பித்துக் கொள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை: