வியாழன், 10 ஜனவரி, 2013

பத்தாண்டுகளுக்கு பிறகு, பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன

புதுடில்லி:  பயணிகளை அதிகம் பாதிக்காத வகையில், உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் மூலம், 6,600 கோடி ரூபாய் திரட்ட, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் தொகை மூலம், மிக மோசமான நிலையில் இருக்கும், ரயில் சேவைகள் இனியாவது மேம்படுமா என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.ரயில்வே துறை, 16 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததும், அமைச்சராக நியமிக்கப்பட்ட, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பவன்குமார் பன்சால், "கட்டணங்கள் உயர்த்தப்படும்' என, அடிக்கடி அறிவித்தபடி இருந்தார்."பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும், ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படலாம்' என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிரடியாக கட்டணங்கள் உயர்வு அறிவிப்பு வெளியானது. பார்லிமென்ட் கூட்டம் முடிந்த பின், கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.21ம் தேதி முதல்...டில்லியில் நேற்று மதியம், பத்திரிகையாளர்களை சந்தித்த, அமைச்சர் பவன்குமார் பன்சால், கட்டண மாற்றங்களை அறிவித்தார். அவர் கூறியதாவது:ரயில் பயணிகள் கட்டணம் மட்டுமே, இப்போது உயர்த்தப்பட்டுள்ளன. சரக்கு கட்டணங்களில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வரும் ரயில்வே பட்ஜெட்டில், பயணிகள் கட்டண உயர்வு இருக்காது. புதிய கட்டணங்கள், இம்மாதம் 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கட்டண உயர்வால், ரயில்வே துறைக்கு, ஆண்டுக்கு, 6,600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். ஜன., 21 முதல் மார்ச், 31 வரையிலான காலகட்டத்தில் மட்டும், 1,200 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.புறநகர் சாதாரண, இரண்டாம் வகுப்பு கட்டணம், கி.மீ.,க்கு, 2 பைசாவும், புறநகர் இல்லாத இடங்களில், கி.மீ.,க்கு, 3 பைசாவாகவும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளன. இரண்டாம் வகுப்பு மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம், கி.மீ.,க்கு, 4 பைசாவாகவும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில்களில், 6 பைசாவாகவும் கூடுதல் கட்டணம் இருக்கும்.
"ஏசி' சேர் கார் மற்றும் "ஏசி' மூன்றடுக்கு பெட்டிகளில், கி.மீ.,க்கு, கூடுதலாக 10 பைசா கொடுக்க வேண்டியிருக்கும். அதே போல், முதல் வகுப்பு கட்டணத்தில், 3 பைசா, "ஏசி' இரண்டடுக்கு பயணத்திற்கு, 6 பைசா, "ஏசி' முதல் வகுப்புக்கு, 10 பைசா என, கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மோசமான நிலையில் துறை
பயணிகள் கட்டண உயர்வு, நீண்டகாலமாக மேற்கொள்ளாததால், மிகவும் மோசமான நிதி நிலையில் உள்ள ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த, கட்டணங்கள் இப்போது உயர்த்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அமைச்சர் பன்சால் கூறினார்.ரயில் பயணிகள் கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்த போதிலும், ஒரே நேரத்தில், அனைத்து வகுப்பு கட்டணங்களும் உயர்த்தப்பட்டது, பத்தாண்டுகளுக்கு பிறகு, இதுவே முதல் முறை. கூட்டணி அரசு காரணமாக, ரயில் கட்டண உயர்வு அமலாகாத நிலை மாறி, காங்கிரஸ்அமைச்சர் பன்சால் இதற்கான வழியை காட்டி விட்டார்.பயண கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பிளாட்பார டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தொடர்ந்து, 5 ரூபாயாக நீடிக்கும்.முதல் வகுப்பு, "ஏசி' இரண்டடுக்கு மற்றும் "ஏசி' முதல் வகுப்பு எக்சிகியூடிவ் கட்டணங்கள், கி.மீ.,க்கு, முறையே, 10 பைசா, 15 பைசா மற்றும், 30 பைசா என்ற அளவில், நடப்பு ரயில்வே பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சரக்குக் கட்டணமும் உயரும்
சரக்கு கட்டணங்கள், வரும் ரயில்வே பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள், 21ம் தேதிக்கு பிறகு பயணம் செய்யும் போது, கட்டணத்தின் வித்தியாசத்தை, டிக்கெட் பரிசோதகர்களிடம் கொடுத்து கொள்ளலாம். மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் சேவை, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சீர்செய்து, மக்களுக்கு நல்ல சேவை தர, ரயில்வே நிர்வாகம், அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ளாத வரை, கட்டண உயர்வு என்பது சுமையாகவே கருதப்படும்.
ரியாக்ஷன்
கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்ற நிலை ஏற்பட்டதால், வேறு வழியின்றி, உயர்த்தியுள்ளோம். இதற்காக, கட்சி தலைவர், சோனியாவின் அனுமதியை கேட்க தேவையில்லை. ஏனெனில், கட்சி வேறு; ஆட்சி வேறு.- காங்., செய்தி தொடர்பாளர், ரஷீத் ஆல்வி.
""மக்களுக்கு எதிரான முடிவு. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு, அனைத்து பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் வகையில், ரயில் கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.''- குருதாஸ் குப்தா, இந்திய கம்யூனிஸ்ட்.-
-
நாட்டின் சாமானிய மக்கள், விலையேற்றத்தால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வேகட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதால், மேலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். உயர் வகுப்புகள் தவிர்த்து, பிற கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும். - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
----
""ரயில்வே துறையை மேம்படுத்த, முன்னேற்ற பாதையில் முன்னெடுத்துச் செல்ல, கட்டண உயர்வு அவசியமானது. ரயில்வே உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது; பெருகும் நஷ்டத்தை தவிர்க்க, கட்டண உயர்வு மிகவும் தேவையானதே.''
- இந்திய தொழில் கூட்டமைப்பு
ரயில்வே துறை என்பது, சமுதாயத்திற்கு தொண்டாற்றும் பொறுப்பு வாய்ந்தது. லாப நோக்கில், கட்டணங்களை உயர்த்துவது நியாயமில்லை. பார்லிமென்ட்டில் இல்லாமல், வெளியே அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குரியது.- ரயில்வே முன்னாள் அமைச்சரும், திரிணமுல் காங்., தலைவர்களில் ஒருவருமான, முகுல் ராய்.

கருணாநிதி (தி.மு.க.,): மக்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும், தி.மு.க., ஆதரிக்காது.
பணவீக்கத்தால் சாதாரண மக்கள் கடும் பாதிப்பில் உள்ள நிலையில், ரயில் பயணிகள் கட்டணத்திலும், 20 சதவீதம் உயர்வு செய்துள்ளது, ஜனநாயக விரோத செயல். உயர்த்தப்பட்ட கட்டணங்கள், வாபஸ் பெற வேண்டும். - பாரதிய ஜனதா
.பயணிகள் கட்டண உயர்வு, நீண்டகாலமாக மேற்கொள்ளாததால், மிகவும் மோசமான நிதி நிலையில் உள்ள ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த, கட்டணங்கள் இப்போது உயர்த்தப்பட்டுள்ளன.பன்சால்ரயில்வே அமைச்சர்

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு என்ற வரிசையில், தற்போது ரயில் கட்டணங்களை, ரயில்வே பட்ஜெட்டிற்கு, முன்னதாகவே, மத்திய அரசு உயர்த்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், அமைந்துள்ளது. கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.ஜெயலலிதா,தமிழக முதல்வர்  dinamalar.com

கருத்துகள் இல்லை: