தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறை பல்வேறு தரப்பினரையும் ஏதாவது ஒருவகையில் எதிர்வினையாற்றத் தூண்டியுள்ளது. பரவலான ஜனநாயக சக்திகள் பெண்களைக் குதறும் பாலியல் வன்முறைகளையும் அவற்றைக் களைவது பற்றியுமான விவாதங்களை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளனர். சமீப காலமாக தேசிய ஊடகங்களில் இருந்து உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றன.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்க அதிக பட்ச தண்டனை வழங்குவதா அல்லது இக்குற்றங்களின் சமூக அடிப்படை என்னவென்பதைப் பார்த்து அவற்றைக் களைவதற்கு முன்னுரிமை வழங்குவதா, பாலியல் விழிப்புணர்ச்சிக் கல்வி வழங்கினால் குற்றங்களைத் தடுக்க முடியுமா என்று பரவலாக விவாதங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். இப்படி நாடெங்கும் மக்களின் விவாதப் பொருளாக மாறி அமளி துமளி ஆகிக் கொண்டிருந்த போது ஓரமாக உட்கார்ந்து ‘மிச்சர் தின்று கொண்டிருந்த’ இந்துத்துவ சங்கப் பரிவாரங்களும் இப்போது வாயைத் திறக்கத் துவங்கியுள்ளன.

அண்டங்காக்காய் வாயைத் திறந்தால் இசையா வழியும்? பல நாட்களாக மலச்சிக்கலால் அடிபட்டவன் அவித்த மொச்சைப் பயிறைத் தின்ற கணக்காக சங்கப் பரிவாரங்களின் கருத்துக்கள் இப்போது மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
மோகன் பகவத்
கடந்த ஜனவரி 4-ம் தேதி அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை” என்று சொல்லியிருக்கிறார். மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களிலோ காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் மாஃபியா ‘பாஸை’ வெளியில் ஊருக்குள் அனுப்பும் போது வாயின் மேல் இறுக்கமாக ‘டயப்பர் பேடு’ கட்டித் தான் அனுப்புவார்கள். ஆனாலும் சில அசந்தர்பங்களில் இப்படி நடந்து விடுவது வாடிக்கை. தொடர்ந்து அவர்களின் அமைப்பு வழக்கப்படி மோகன் பாகவத்தின் ‘வாய்ப்போக்கிற்கு’ பொழிப்புரை எழுத முன் வந்த ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், “எங்க தலைவருக்கு பெண்கள் மேல் நிறைய மரியாதை உள்ளது, ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கூட வழங்கலாம் என்று சொல்லியிருக்கிறோம்” என்கிற ரீதியில் சமாளித்துக் கொண்டிருந்தார்.
ஆங்கில செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் ‘பாரதம் என்று அவர் சொன்னது நிலப்பகுதியை அல்ல; அது கலாச்சாரம் பற்றியதாக்கும்’ என்று பின்நவீனத்துவவாதிகள் பேரரசு படத்தில் குறியீடுகளைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் போல் பாரதிய ஜனதா உள்ளிட்ட பரிவார அமைப்பினர் பாகவத் கக்கிப் போட்டதில் நல்லரிசியைத் தேடிக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக மோகன் பாகவத்தின் மூஞ்சியில் கட்டியிருந்த டயப்பர் பேடு நெகிழ்ந்து விட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கடந்த  6-ம் தேதியன்று பேசிய மோகன் பாகவத், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருப்பது ஒரு ஒப்பந்தம் என்றும் இந்த ஒப்பந்தம் ஒழுங்காக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அது என்ன அந்த ஒப்பந்தம்? அதாகப்பட்டது, பெண்கள் கணவனின் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வீட்டை ஒழுங்காக பராமரித்து வர வேண்டுமாம் – அதற்கு பதிலாக ஆண்கள் மனைவியின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமாம். இந்த முறை பொழிப்புரைகளுக்கு வாய்ப்புகள் ஏதும் தராமல் அவரே விளக்கிக் கூறி விட்டார்.
இவைகளெல்லாம் ஏதோ வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள் அல்ல. பெண்களை போகப் பொருட்களாகவும் உடமைகளாகவும் பார்க்கும் பார்ப்பனிய சித்தாந்தம் தசை நரம்பு எலும்பு மூளை என்று உடலின் சகல பாகங்களிலும் ஊரி ஊத்தைக் கொழுப்பெடுத்த ஒருவனின் வாயில் இருந்து தான் இந்த விதமான வார்த்தைகள் வெளிவர முடியும்.
பாரதம் என்பதை மோகன் பாகவத் கிராமப்புறம் எனும் அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் சரி பழைய பார்ப்பன கலாச்சாரம் என்கிற பொருளில் சொல்லியிருந்தாலும் சரி, அங்கே பெண்களின் நிலைமை நரகல் தொட்டியின் நாற்றத்தை விட கேடுகெட்ட நிலையில் தான் உள்ளது. ஹரியானாவின் கிராமங்களில் தலித் பெண்களை ஆதிக்க சாதி ஆண்கள் வன்கொடுமை செய்த சம்பவங்களும், காட்டு வேட்டை எனும் பெயரில் தண்டகாரண்யத்தில் ஆதிவாசிப் பெண்களுக்கு எதிராய் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், வாச்சாத்தி சம்பவங்களும், அசாமில் ஆயுதப்படையினர் நடத்திய பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் நடந்தது மோகன் பாகவத் சொல்லும் பாரதத்தில் தான். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழைக் கூலி விவசாயிகளின் வீட்டுப் பெண்களிடம் மைனர்தனம் காட்டும் ஆதிக்க சாதி ஆண்டைகளின் சொர்க்கபுரி தான் மோகன் பாகவத் விரும்பிக் கேட்கும் ‘பாரதம்’
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் விதந்தோதும் பாரதப் பண்பாட்டின் யோக்கியதையும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் விதமாக இல்லை. திரேதாயுகத்தின் ராமன் சம்சாரத்தை சந்தேகப்பட்டு நெருப்பில் தள்ளினான் என்றால் துவாபர யுகத்தின் கிருஷ்ணனோ கேடுகெட்ட பொம்பளைப் பொறுக்கி. ஊரில் இருக்கும் பெண்களின் ஆடைகளைக் களவாடுவதையே ஃபுல் டைம் ஜாபாக வைத்திருந்தவன் தான் கிருஷ்ணன். வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வரும் வரைக்கும் ராம ராஜ்ஜியத்தின் நீதி நெறிகளுக்குள் முங்கி முக்குளித்துக் கொண்டிருந்தவர்கள் தான் கைம்பெண்களை நெருப்புக்குள் தள்ளி சதி மாதாக்கள் ஆக்கினர்.
இதிகாச காலத்தின் இந்திரன் துவங்கி இண்டெர்நெட் காலத்தின் தேவநாதன் வரை ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பேரொளி வீசிப் பிரகாசிக்கும் பாரதப் பண்பாடெனும் சோமபானத்தை அருந்தி மோன நிலையில் சித்தியடைந்தவர்கள் வேறு யாருமல்ல – அவர்கள் தான் காஞ்சிபுரத்தின் பெரிய வால், சின்ன வால், தேவநாதன், நித்தியானந்தா, பிரேமானந்தா, கல்கி சாமியார், கேரளாவின் கண்டரர், சிதம்பரத்தின் தீட்சிதர் போன்ற மகான்கள், ரிஷிகள் மற்றும் முனிகள்.
அன்னார் முன்வைக்கும் பாரதக் கலாச்சாரத்தின் இன்னொரு பிரதிநிதி அசாராம் பாபு என்கிற சாமியார். “கற்பழித்தவர்கள் மட்டுமல்ல, கற்பழிக்கப்பட்ட பெண்ணும் தான் குற்றவாளி. தன்னைக் கற்பழிக்க வந்தவர்களை ‘அண்ணா’ என்று அழைத்து தன்னை விட்டு விடுமாறு அந்தப் பெண் கெஞ்சியிருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது” என்று பேசியிருக்கிறான். தில்லி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் செய்த குற்றத்திற்கு சற்றும் குறையாத இந்தப் பேச்சுகளுக்காக இந்த ஆளைத் தூக்கி உள்ளே வைக்காமல் அரசியல் கட்சிகள் ‘பேச்சை வாபஸ் வாங்கச்’ சொல்லி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாராம்சத்தில் அசாராம் பாபு பேசியதற்கும் மோகன் பாகவத்தின் கருத்துக்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. பெண்கள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும், வெளியில் செய்ய வேண்டிய வேலைகளை ஆண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் – அப்படியே வெளியே வந்து யாராவது ‘கற்பழிக்க’ வந்தால் காலில் விழுந்து கெஞ்சுங்கள் என்கிறான் இந்தச் சாமியார்.
தேவதாசி முறை, பொட்டுக்கட்டி விடுவது என்று மிட்டா மிராசுகளுக்கும் பண்ணையார்களுக்கும் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கி வைத்து ‘கோயில்தலமனைத்தும் விபச்சாரம் செய்குவோம்’ என்று கூத்தாடிய கலாச்சாரம் தான் ஆர்.எஸ்.எஸ் அமைக்கப் போவதாய்ச் சொல்லும் ராமராச்சியத்தின் கலாச்சாரம். காலச்சக்கரத்தை பின்னோக்கித் திருப்பி மீண்டும் அதே பழைய கலாச்சாரத்துக்கே திரும்பவும் போய் செத்து செத்து விளையாடலாமே என்று கேட்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத். பிய்ந்த செருப்புகளைத் தயாராய் வைத்துள்ளீர்களா நண்பர்களே?
இந்தப் பேச்சுக்களும் கருத்துக்களும் வெறும் வாய்க்கொழுப்பு என்று ஒதுக்கித் தள்ளத் தக்கதல்ல. இவர்களின் கையில் நாட்டை ஒப்படைத்தால் என்னவாகும் என்பதன் ஒரு சிறிய முன்னோட்டம் தான் இந்தப் பேச்சுக்கள். தேசத்தை “பாரத மாதாவே” என்று படத்தில் மாட்டி தொட்டுக் கும்பிட்டு விட்டு அதன் வளங்களை கூறு போட்டு விற்க, கக்கத்தில் லெதர் பேக்கோடு அலைந்த பாரம்பரியம் கொண்டவர்கள் இவர்கள் தான். பாரதீய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் தான் காங்கிரசை விட வெறி கொண்ட முறையில் தேசத்தின் வளங்கள் அனைத்தும் – ஆறுகள், மலைகள், நிலங்கள் உள்ளிட்டு – பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் வைக்கப்பட்டது.
ஆக, இவர்கள் முன்வைக்கும் கலாச்சாரமும் அரசியலும் பொருளாதாரக் கொள்கைகளும் வேறு வேறல்ல. இந்த நச்சுப் பாம்புகளைக் கண்ட இடத்தில் அழித்து ஒழிப்பது தான் மக்களின் உடனடிக் கடமை.