சனி, 23 ஜூலை, 2011

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும் புத்தகம் வழங்கவில்லை

சென்னை : சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்க ஆரம்பித்து, ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்,  பாடப்புத்தகங்களை  வழங்காமல்  தமிழக அரசு தொடர்ந்து  பிடிவாதம் பிடித்து வருகிறது.   இதனால் தமிழகம் முழுவதும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் பெற்றோர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த  அதிமுக அரசு மறுத்து, சமச்சீர் கல்வியை நிறுத்த சட்ட திருத்தம் கொண்டு வந்து,  பழைய பாடத்திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தது.  இதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி சமச்சீர் கல்வியின் தரத்தை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவினர் 2 வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பேரில் உயர்நீதி மன்றம் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியிருந்தது. இதன்படி வல்லுநர் குழு உயர்நீதி மன்றத்தில் தங்கள் பரிந்துரையை தாக்கல் செய்தனர்.

கடந்த 18ம் தேதி உயர்நீதி மன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில்,‘ உடனடியாக பாடபுத்தகங்களை வழங்க ஆரம்பிக்க வேண்டும்;  வரும் 22ம் தேதிக்குள் அந்த பணியை முடிக்க  வேண்டும் என்று  தீர்ப்பு கூறியது. சட்டதிருத்தத்தையும் ரத்து செய்தது. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத அரசு உச்சநீதி மன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டிலும்  அரசு கோரிய தடையை வழங்க முடியாது என்றும், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றமும் தெரிவித்துவிட்டது. மேல் முறையீட்டு மனுவின் மீது 26ம் தேதி இறுதி விசாரணை நடத்த உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம் சொன்ன தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது  என்று உச்ச நீதி மன்றம் கூறி விட்டது. அதாவது, ஐகோர்ட் கூறியபடி, பாட புத்தகங்களை உடனடியாக வழங்க ஆரம்பிக்க வேண்டும்; ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்’ என்று தான் உச்ச நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், கோர்ட்  கூறிய தீர்ப்பின்படி நடந்து கொள்ளாமல் தமிழக அரசு  பிடிவாதமாக உள்ளது. நேற்றே சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று மாலை வரை பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 26ம் தேதி வரை அதிகாரிகளை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அரசின் இது போன்ற செயல்களால் பெற்றோரும் மாணவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காலாண்டு தேர்வுக்கான நாள் நெருங்கும் நிலையில் இன்னும் பாடப்புத்தகம் வழங்காமல் இருப்பது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தகம் வழங்க வேண்டும் என்று கேட்டு பள்ளிகளில் முற்றுகையிட்டனர். சாலைகளில் அமர்ந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் ஆகிய இரண்டும் சமச்சீர் கல்வி புத்தகத்தை வழங்க வேண்டும் என்று உறுதியாக கூறியும் தமிழக அரசு அந்த உத்தரவை மதிக்காமல் உள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழங்க தொடர உள்ளனர். இதைத் தொடர்ந்து உடனடியாக சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர் அரசிடம் வலியுறுத்தி கேட்டு வருகின்றனர். ஆனால் மேல் முறையீட்டு மனுவின் மீது உச்சநீதி மன்றம் இறுதி விசாரணை நடத்தி முடிவு அறிவிக்கும் வரை¬யில் தமிழக அரசு தனது பிடிவாதத்தை விடாதுபோல் தெரிகிறது.

அரசுக்கு நோட்டீஸ்

உச்சநீதி மன்றத்தில் சமச்சீர் வழக்கில் ஆஜரான வக்கீல் கே.பாலு  கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றம் , கடந்த 18ம் தேதி வழங்கிய உத்தரவில் மாணவர்களுக்கு சமச்சீர்பாடம் நடத்த ஏதுவாக பாடபுத்தகங்களை உடனடியாக ஆசிரியர்களுக்கு விநியோகிக்க வேண்டும். வரும் 22ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகம்  வழங்க வேண்டும் என்ற உத்தரவிட்ட்து. உச்ச நீதிமன்றம் இந்த கால அவகாசத்தை நீட்டித்து,

வருகிற 2ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இதுவரை சமச்சீர் பாட புத்தகங்களை எந்த பள்ளிக்கும் வழங்க வில்லை. அதற்கான பணியை தொடங்க வில்லை. இணைய தளத்தில் இருந்த சமச்சீர் பாடப்புத்தகங்களை நீக்கிவிட்டனர். இது உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இதற்கு தலைமை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர். இயக்குனர் ஆகியோர் பொறுப்பு ஏற்க வேண்டும். உடனே பணியை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று வக்கீல் நோட்டீசு இந்த 3 பேருக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை: