வெள்ளி, 22 ஜூலை, 2011

போர்க்குற்ற விசாரணையில்லையேல் இலங்கைக்கான உதவி ரத்து : அமெரிக்கா

இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் குழு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீர்மானத்தின்படி, மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடாபான தீர்மானத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவாட் பேர்மன் முன்மொழிந்தார். இலங்கையின் போர்க்குற்றச்சாட்டு உட்பட்ட ஊடக சுதந்திரம், அவசரகால சட்ட நீக்கம் என்பனவும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2010- ம் ஆண்டின் நிதியாண்டுக்காக இலங்கைக்கு வழங்கவென 13 மில்லியன் டாலர்களை அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் அந்த நாட்டு அரசிடம் கோரியுள்ளது. எனினும் நாடாளுமன்றத்தின் தீர்மானம் உடனடியாக அமலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: