தமிழக அரசு உயர்த்தியுள்ள வாட் வரிவிதிப்பால் அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் வாட் வரிவிதிப்பை அதிகரித்து உத்தரவிட்டது. பொதுமக்களின் உயிர் காக்கும் அத்தியாவசிய தேவையான மருந்துப்பொருட்களும் இந்த வாட் வரிவிதிப்பிலிருந்து தப்பவில்லை. மருந்துக்கடைகளில் ‘கன்ஸ்யூமர் குட்ஸ்’ எனப்படும் நாப்கின், பேபி பவுடர், பேபி ஆயில், சோப் போன்ற அயிட்டங்களுக்கு முன்பு இருந்த 12.5 சதவீத வரிவிதிப்பு தற்போது 14.5 சதவீதமாகவும், மற்ற மருந்துப்பொருட்களான மாத்திரை, டானிக் மற்றும் மருத்துவ உபகரண வகைகளுக்கு முன்பு இருந்த 4 சதவீத வரிவிதிப்பு தற்போது 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பு கடந்த ஜூலை 12 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மருந்துப்பொருட்களின் விலை திடீர் உயர்வு கண்டுள்ளது. இதனால் மருந்துக்கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருந்துப்பொருட்களின் விலை கூடுதலாக நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. மருந்து வியாபாரம் செய்வோர் தங்களுக்கான லாப கமிஷனை இழந்தும், ஒருசில வியாபாரிகள் தங்கள் மீதான வரிச்சுமையை நேரடியாக நுகர்வோர் மீது திணித்தும் விற்பனை செய்து வருகின்றனர்.
மதுரை மாநகரில் மட்டும் மருந்து பொருட்கள் சப்ளை செய்ய 200க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் திருச்சியில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை தினமும் கோடி க்கணக்கில் மருந்துப்பொருட்களை சப்ளை செய்து வருகின்றனர். கூடுதல் வாட் வரிவிதிப்பினால் ஏற்கனவே அனைத்து பொருட்களும் விலைவாசி ஏற்றம் கண்டுள்ள நிலையில், அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்களை பாதிப்படைய வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக