சிவகங்கை:சிவகங்கை அகதிகள் முகாம்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் (எல்.டி.டி.இ) ஊடுருவியிருக்கலாம், என தகவல் வந்துள்ளதால், கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை உட்பட 5 இடங்களில் அகதிகள் முகாம் செயல்படுகிறது. இங்கு, நூற்றுக்கணக்கான அகதிகள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களது நடவடிக்கைகளை உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, கியூ பிரிவு போலீசாரும் கண்காணிக்கின்றனர். முகாம்களில் வசிப்பவர்கள் தவிர்த்து, புதிதாக ஒருவர் வந்தால் அவர் பற்றியும், எந்த நோக்கத்திற்காக வந்தார் என்பது போன்று பல்வேறு விபரங்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர். விடுதலைப்புலி?:இந்நிலையில், இலங்கையில் இருந்து தப்பித்து வரும் தமிழீழ விடுதலைப்புலிகள், பக்கத்து மாநிலமான தமிழகத்திற்குள் ஊடுருவி வருவதாக தெரிகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் வழியாக சிவகங்கைக்குள் அதிகளவில் வந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அகதிகள் முகாம்களில் கண்காணிப்பினை கியூ பிரிவு போலீசார் பலப்படுத்தியுள்ளனர்.மத்திய அமைச்சர் அடிக்கடி வந்து செல்லும் மாவட்டமாக இருப்பதால், அரசும் தீவிர கண்காணிப்பினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" இலங்கை, கண்டியை சேர்ந்த ஒருவர், கடந்த 2 ஆண்டிற்கு முன் விடுதலைப்புலிகள் தலைவர்களில் ஒருவரான கருணாகரனிடம் இருந்துள்ளார். அவர், ஆந்திராவில் இருந்து 60 அகதிகளை, போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளார். கேரளாவிலிருந்து ஆட்களை கடத்த முயற்சித்த அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். போலீசிடமிருந்து தப்பியவரை, அவரது மொபைல் போன் "சிக்னலை' வைத்து, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் போலீசார் கைது செய்தனர். மேலும் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இருக்கிறதா என தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக'' தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக