வியாழன், 21 ஜூலை, 2011

அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : பண்ருட்டி ராமச்சந்திரன்


நில அபகரிப்பு, மிரட்டி பணம் பறித்தல், மோசடி ஆகிய புகார்களில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளிகளான என்.சுரேஷ்பாபு என்கிற பொட்டு சுரேஷ், ஜி.தளபதி, கிருஷ்ணபாண்டி, கொடி சந்திரசேகரன், கொடைக்கானல் நகராட்சி தலைவரான எஸ்.முகமது இப்ராகிம் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங் கோட்டை மற்றும் மதுரை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று இந்த இரு சிறைகளுக்கும் நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "அவர்கள் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அப்பாவிகள் என்பதால் அவர்களை சந்தித்ததாக' கூறினார்.

இந்த சந்திப்பின் போது அழகிரியுடன் திமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

மு.க.அழகிரியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர்,‘’சிறையில் உள்ள  தனது

கூட்டாளிகளை சந்தித்திருக்கும் அழகிரியின் செயல், அந்த கிரிமினல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் குறுக்கிடுவதற்கு சமமாகும். இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
எனவே நியாயமான மற்றும் சுதந்திரமான  விசாரணையை உறுதி செய்வதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அழகிரிடமிருந்து விளக்கம் கோரி பெற்று அவரை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: