புதன், 20 ஜூலை, 2011
வாக்குகளை எதிர்பார்த்து சேவை செய்வது எமது நோக்கமல்ல கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் ஜனாதிபதி
வாக்குகளை எதிர்பார்த்து சேவை செய்வது எமது நோக்கமல்ல. நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வது எமது பொறுப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயல்படுபவர்கள் 13வது திருத்தம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். எனினும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுவதே எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி குறுகிய அரசியல் நோக்கங்கள் மூலம் மீண்டும் இந்த நாட்டைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஊவா மாகாண சபையின் நிதியுதவியுடன் யாழ். கோப்பாய் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி பாடசாலைக் கட்டடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.பிரதமர் டி. எம். ஜயரத்ன, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பவித்ரா வன்னியாரச்சி, குணரத்ன வீரக்கோன், திஸ்ஸ கரலியத்த, பிரதியமைச்சர்கள் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, ரோஹணகுமார திசாநாயக்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக பிரதமர் டி.எம். ஜயரட்ன பல அமைச்சர்களுடன் இணைந்து இப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.கடந்த 30 வருட காலம் நிச்சயமற்றதும் எதிர்பார்ப்புகளை சூன்யமாக்கியதாகவும் கழிந்துள்ளது. அந்த 30 வருட பின்னடைவுகளை மீளப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.அத்துடன் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் திட்டங்கள் வடக்கு மக்களின் உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு எமக்குண்டு.
பொதுவாகவே எமக்கு வாக்கு அளிக்காதவர்களுக்கு நாம் ஏன் சேவை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. நாம் அந்த நிலைப்பாட்டில் செயற்படுபவர்கள் அல்ல. நான் இந்த நாட்டின் சகல மக்களினதும் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய வேண்டியது எனது பொறுப்பு.குறிப்பாக யாழ். குடாநாட்டின் வீதிகள் மின்சாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சகல தேவைகளையும் நிறைவேற்றுவதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். உங்களின் எதிர்காலம் மட்டுமன்றி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கவும் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஊவா மாகாண முதலமைச்சர் சiந்திர ராஜபக்ஷ மற்றும் மாகாண மக்களின் அனுசரணையுடன் கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டடமொன்றை இன்று நான் திறந்து வைத்தேன்.அதேபோன்று நாளைய தினம் எமது அமைச்சர்கள் சமகாலத்தில் இருபது பாடசாலைக் கட்டடங்களைத் திறந்து வைக்கவுள்ளனர்.
மக்கள் நலன் தொடர்பாக யார் சொல்வதையும் நான் செவிமடுப்பேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உங்கள் பிரச்சினைகள் பற்றி என்னுடன் தொடர்ந்து பேசுகின்ற ஒருவர். ஏனையோர் 13 வது திருத்தம் பற்றி மட்டுமே பேசுவார்கள். எனினும் அமைச்சர் டக்ளஸ் மக்களின் பிரச்சினைகள் தேவைகள் பற்றி பேசுபவர்.
குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் சிலர் அவர்களின் சொந்தப் பிரச்சினை பற்றியே சிந்திப்பவர்கள் அவர்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே அவர்கள் செயற்படுகின்றனர். அத்தகைய நடவடிக்கைகளால் நாட்டைத் துண்டாட நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.நாம் அனைவரும் இந்நாட்டு மக்கள் நாம் ஒன்றாய் வாழ்வோம். ஒன்றாய் செயற்படுவோம்.நாம் அனைவரும் இணைந்து எமது கிராமத்தையும் இந்த நாட்டையும் கட்டியெழுப்புவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி: தமிழ் மக்கள் பயம் சந்தேகமின்றி பாதுகாப்பாக வாழக்கூடிய சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அம்மக்கள் பட்ட துன்ப துயரங்களை நான் அறிவேன்.வடக்கின் வசந்தம் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் மேலும் பல்வேறு அபிவிருத்திகள் இப்பகுதியில் முன்னெடுக்கப்படும்.
தற்போது அரசாங்கம் அதிக நிதியினை அபிவிருத்திக்காகச் செலவிடும் மாகாணம் வடமாகாணமே. இப்பகுதி அபிவிருத்தியைப் போன்றே தொழில் வாய்ப்புகளும் முக்கியமானது. நீங்கள் அனைவரும் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும்.அதுவே எமது நோக்கம்.வடக்கின் வசந்தம் உங்கள் வசந்தம். உங்கள் பிள்ளைகளின் வசந்தம். உங்கள் பிரதேசத்தின் வசந்தம் வெற்றிலையின் வெற்றி.உங்கள் வெற்றி, நமது வெற்றி வெற்றிலைச் சின்னம் வெற்றியின் சின்னம், அதற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எமது வேலைகளை வென்றெடுப்போம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக