வியாழன், 21 ஜூலை, 2011

குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா?

கொழும்புக்குப் பறந்து போய் இந்தியாவின் மேலாதிக்கத்தைப் பற்ற வைக்கும் சிவசங்கர் மேனனும், பாதித் தூக்கத்தில் எழுந்து பாய்லர் அடுப்பைப் பற்ற வைக்கும் டீக்கடை மலையாளியும் ஒரே வர்க்கமா? இல்லை இங்கே தமிழர்கள் டீக்கடை வைக்கக் கூடாது என்று யார் தடுத்தார்கள்? மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் சரவணபவன் தமிழ் முதலாளி, மேசை துடைப்பதற்கு தமிழர் அல்லாத மாற்றாரை, நேபாளிப் பையன்களை வைத்திருக்கின்றாரே, அதென்ன தமிழரின் பெருந்தன்மையா? குறைந்த கூலிக்கு ஆள் தேடும் உழைப்புச் சுரண்ட லா?
தமிழனுக்கு ஒன்று என்றால் கேட்க நாதியில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் இனவாதிகள். பிற இன மக்களைக் குறைந்த கூலிக்கு கசக்கிப் பிழியும் தமிழ் முதலாளிகளை இவர்கள் எப்போதாவது தட்டிக் கேட்டிருக்கிறார்களா? நாமக்கல் தவிட்டெண்ணெய் ஆலையில் தீ விபத்தில் கருகிச் செத்தார்கள் பீகார் தொழிலாளிகள். மலையாளி டீக்கடைக்காரரைப் பார்த்து காயும் தமிழினவாதிகள், கருகிய பீகார் தொழிலாளிகளின் உழைப்பில் பணம் கொழிக்கும் தமிழ் முதலாளியைக் கண்டு காய்வதில்லையே, இது தமிழின உணர்வா, அல்லது முதலாளித்துவ வர்க்க உணர்வா? ஆதிக்க வர்க்கம் மட்டுமல்ல,
ஆதிக்க சாதித்தன்மையும் தமிழினவாதத்தின் உள்ளடக்கமாக உள்ளது. டீக்கடையில் மலையாளி, உணவு விடுதி யில் கன்னடன், உயர் பதவியில் தெலுங்கன், பிற இனத்தான் என்று ஒவ்வொரு துறைக்கும் லிஸ்ட் வைத்துக் கொண்டு சோற்றுக் கையால் சொடுக்கு போடும் இந்தப் பேர்வழிகள் பீ அள்ளும் தெலுங்கன் லிஸ்டை பீச்சங்கையால் கூடக் காட்டுவதில்லையே! “தமிழன் பீயை தெலுங்கன் அள்ளலாமா?” என்று ஆர்ப்பரிப்பதில்லையே! கக்கூசுக்குள் மட்டும் முக்காமல் முனகாமல் தமிழினவாதம் பக்காவாக வெளியேறும் மர்மமென்ன?
பிற இனமக்களின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் காலந்தோறும் மலம் அள்ளுவதைக் கூசாமல் ஏற்கும் இனவாதத்தால், டீ போடுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாதாம்! இனவாதத்திற்குள் ஒளிந் திருக்கும் சாதியக் கண்ணோட்டத்தை, திருப்பூரில் உலகத் தமிழின மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த ஒரு தோழர் மேடையிலேயே சுட்டிக்காட்டிப் பேச, தமிழ்ச் சான்றோர் விருது வாங்க வந்திருந்த பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற முதலாளித் தமிழரின் மனம் நோகுமென்றும், இது அநாகரிகமென்றும் அங்கேயே மாவீரன் நெடுமாறன் பேசிய தோழரைக் கண்டித்தது மறக்க முடியாத தமிழ்தேசிய நினைவல்லவா?
தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி? தமிழர்களுக்குள்ளாகவே எல்லோரும் ஒன்று கிடையாது, சமம் கிடை யாது என்ற நிலை இருக்கும் போது, இதை நேர்மையாகப் பரிசீலித்து, நேர்மறையில் ஆதிக்க வர்க்க, சாதி எதிர்ப்பு என்ற அடிப்படையில் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், தமிழின ஓர்மைக்கும் போராடுவதுதான் நேர்மையானது. அதை விடுத்து பிற மாநில, தேசிய இன மக்களைத் தமிழின வளர்ச்சிக்குத் தடையாகவும், பகையாகவும் காட்டிக் கொடுப்பது என்பது ஆளும்வர்க்கத்தின் ஐந்தாம் படை வேலை.
எப்படி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பாரதிய ஜனதா கும்பல் சாதியப் பிளவுகளைக் கடந்து இந்துக்களை ஒன்றுதிரட்ட முடியாதென்பதால், முசுலீமையும் கிறித்தவரையும் எதிரியாகக் காட்டி மதவெறிக்கு ஆள் பிடிக்கிறதோ, அதே போல தமிழின ஓர்மைக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளை எதிர்த்துப் போராடும் நேர்மையில்லாத இனவாதிகள் பிற தேசிய இன மக்களை எதிரியாகக் காட்டியே தமிழின ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஈழத் தமிழன் செத்ததற்கு வடநாட்டு தலித் கேட்டானா என்கிறார் மணியரசன். இங்கிருக்கும் தமிழன் (தலித்) செத்ததற்கு சக தமிழர்கள் என்ன செய்தார்கள்? செந்தட்டி தலித் படுகொலைக்கு தமிழகம் குமுறியதா? கயர்லாஞ்சிக்கு முற்றுகை உண்டா?
பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்சினையில் ஆதிக்க சாதிவெறியைக் கடைபிடிக்கும் சாதிக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு நிர்ப்பந் தத்தை ம.க.இ.க முன்வைத்தவுடனேயே.. ஆகா இது மறைமுகப் பார்ப்பனியம் என்கிறார் மணியரசன். பார்ப்பன தேசிய நாயகன் ராமனை தமிழ் பழங்குடி கடவுள் என்று அவர் கொண்டாடுவதும், பார்ப்பன இந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு அம்சமான சாதியமைப்பு முறையை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் பேசுவதும் நேர்முகப் பார்ப்பனியம் அல்லவா?!
இந்த லட்சணத்தில் வடநாட்டு தலித் மாயாவதி போன்றவர்கள் இந்தியா என்பதை ஏற்றதன் மூலம் பார்ப்பனியத்தை ஏற்று விட்டார்கள்.. எனவே இனி தமிழன் யாரையும் நம்பிப் பயனில்லை. உலகெங்கும் உள்ள தமிழன் தானே போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. .. வா.. வா.. தமிழ் நாட்டு விடுதலைக்கு தயாராவோம் என்று துண்டைப் போட்டுத் தாண்டுகிறார் மணியரசன்.
இங்கிருக்கும் தனிச்சுடுகாடு, தனிக்குவளை, தனிக்கோவில், உள்ளிட்டவைகளைத் தகர்க்க கொங்கு வேளாளக் கவுண்டர்களையும், தேவரையும், இன்ன பிற ஆதிக்கசாதி வெறியையும் அகற்றுவோம் வா! அதுவே தமிழ் தேசியக் கடமைக்கு முதற்படி என்று வீதியில் இறங்கத் தயாராக இல்லாமல், வடக்கு முதல் தெற்கு வரை இந்திய தேசியமாகக் காட்சியளிக்கும் சாதிவெறியைத் தகர்க்காமல் பிற தேசிய இன மக்களைப் பகையாகக் காட்டி தமிழ்த் தேசியத்தைக் கட்டித் தூக்குவதற்காக சாதிப் பூணூலையே இனமாகத் திரிப்பதற்கு இவர்கள் படாதபாடு படுகிறார்கள்.
“தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..” என்பது இவர்களுடைய முத்திரை முழக்கம். மலையாளிக்கும், தெலுங்கனுக்கும், மராத்தியனுக்கும் எல்லா தேசிய இனமக்களுக்கும் தனித்தனியாக ஒரு நாடு இருப்பது போலவும், தமிழனுக்குத்தான் தனிநாடு தரவில்லை போலவும் என்ன ஒரு பம்மாத்து? இந்தியாவின் எல்லா இனங்களின் மீதும் தான் இந்து தேசிய ஒடுக்குமுறை இருக்கிறது, சுய நிர்ணய உரிமை இல்லை. தமிழன் மட்டுமா, பல்வேறு இன மக்களும் தான் இந்தியா முழுவதும், ஏன் இந்தியாவைத் தாண்டியும் எல்லாத் திசைகளிலும் நாடோடிகளாகப் பிழைப்பு தேடி ஓடுகிறார்கள்.
பீகார், ஒரிசா தொழிலாளிகள் தமிழகத்திலும், தமிழர்கள் மகாராஷ்டிரா கடலை மிட்டாய் கம்பெனிகளிலும், ஆந்திரா, பெங்களூரு குவாரிகளிலும், நேபாளிகள் கொட்டாம்பட்டியிலும், ஆசிய நாட்டு மக்கள் வளைகுடாவிலும் என இனம் கடந்து, எல்லை கடந்து மக்களை விரட்டுகிறது மூலதனம். உலகமயமாக்கத்தால் விவசாயமும் உள்ளூர் தொழில்களும் அழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் விசிறியடிக்கப்படுவது தமிழனுக்கு மட்டுமா நடக்கின்றது? இந்த நிலைமையை மாற்ற, யதார்த்தத்தில் வர்க்கமாக மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, “தமிழா.. தமிழா” என்ற தனியாவர்த்தனம் வாசித்து என்ன பயன்?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அருமையான சிந்தனை, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்