டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, நாடாளுமன்ற கூட்டுக் குழு, நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறையினரின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வருகிறது.
இந்த ஊழலால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத்துறை கூறியுள்ளது. ஸ்பெக்ட்ரத்தை வேண்டிய நிறுவனங்களுக்கு, மிகக் குறைந்த விலையில் தருவதற்காக ரூ. 30,000 கோடி வரை பணம் கைமாறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் பெயர்கள் இடம் பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நி்ர்வாக அதிகாரி சரத்குமார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர யுனிடெக் வயர்லஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாம் (இப்போது எடில்சாட் டிபி) நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்களை முறைகேடாகப் பெற்ற இந்த நிறுவனங்கள் அவற்றை விற்று கொள்ளை லாபம் ஈட்டியுள்ளன. குறிப்பாக யுனிடெக் நிறுவனம் தான் இதில் மிக அதிகமான லாபம் சம்பாதித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை வாங்கியதும் இந்த நிறுவனம் தனது 66.5 சதவீத பங்குகளை நார்வேயின் டெலிநார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததன் மூலம் ரூ. 6,135 கோடி லாபம் ஈட்டியது.
முறைகேடாக லாபம் ஈட்டிய இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் பணிகளை அமலாக்கப் பிரிவு தொடங்கியுள்ளது. யுனிடெக் வயர்லஸ் (தமிழ்நாடு பிரிவின்) ரூ.5,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கப் போவதாக அந்த நிறுவனத்துக்கு அமலாக்கப் பிரி்வு நோட்டீஸ் அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து டிபி ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதன் துணை நிறுவனமான சினியுக் பிலிம்ஸ் (இதன்மூலம் தான் கலைஞர் தொலைக்காட்சிக்கு டிபி ரியாலிட்டி நிறுவனம் ரூ. 214 கோடியைத் தந்தது) ஆகிய நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கப் பிரிவு முடக்கும் என்று தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக