வியாழன், 16 ஜூன், 2011

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்

: ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

C Suresh - Charlotte,இந்தியா
2011-06-16 04:27:49 IST Report Abuse
நிஜமாகவே புலரிகிறது. எல்லா பெரிய மனிதர்களும் இது போல் நடந்து கொண்டால்., ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்வர், பள்ளிக்கு பராமரிப்பு ஒழுங்காக நாடாகும், ஆசிரியர்கள் தங்கள் தரத்தை உயர்த்தி கொள்வர், குழந்தைகளுக்கு கனிவு மேம்படும், பள்ளியில் பாதுகாப்பு வசதிகள் பெரிதாகபடும். பள்ளி உயர, ஊர் உயரும், ஊர் உயர மாநிலம் உயரும். அற்புதம்!!!
 
Nedunchezhian T - Mayiladuthurai,இந்தியா
2011-06-16 04:12:07 IST Report Abuse
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டின் மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல் பாராட்டுக்குரியது. அரசு பள்ளிகளைத் தாழ்வாக நினைக்கும் போக்கு நடுத்தர மக்களிடம் அதிகம் உள்ளது. அரசு பள்ளிகளில் சில வசதி மற்றும் சுகாதார குறைவுகள் உள்ளன என்பவை மறுக்கமுடியாதவைதான் என்றாலும் அவைகளைப் போக்கிக் கொள்ளமுடியும். கல்விக் கொள்ளையடிக்கும் மெட்ரிக், சிபிசிஎஸ் போன்ற பகட்டு நிறைந்த பள்ளிகளில் முதலில் தரமான ஆசிரியர்கள், கல்வியியலில் பட்டம் ஆசிரியர் இல்லை என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எல்லாருக்கும் முன்மாதிரியாகப் படித்தவர்கள் திகழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆட்சித்தலைவர் ஆனந்தகுமார் அவர்களை வாழ்த்துகிறோம். வழக்கம்போல் இந்தச் செய்தியைச் சிறப்பாக வெளியிட்ட தினமலருக்கு நல்வாழ்த்துகள். படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான்.....போவான்.......ஐய்யோன்னு போவான் என்று மகாகவி பாரதியார் கூறியது நினைவுக்கு வருகிறது.
Veluppillai Thanga - Toronto,கனடா
2011-06-16 03:31:45 IST Report Abuse
கனடாவில் தொடக்க பள்ளி தொடக்கம் பல்கலை வரை எல்லாமே அரச பள்ளிகள் தான். பிள்ளைகளை குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள தொடக்கப்பள்ளிக் கூடத்தில்தான் சேர்க்க வேண்டும். விரும்பிய பள்ளியில் சேர்க்க முடியாது. மழலைப் பள்ளிகளை மட்டும் தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. படிப்பதற்கு அதிசயமாக இருக்கிறதா? அதாவது ஒரு முதலாளித்துவ நாட்டில் சம சீர் கல்வியா என்று?
A.Sivakumar - New Jersey,யூ.எஸ்.ஏ
2011-06-16 01:00:21 IST Report Abuse
வாழ்த்துக்கள். “Collector’s daughter studying in govt. school” இதெல்லாம் இப்போ நியூஸ்சா வருதேன்னு பார்க்கும் போதுதான் கொஞ்சம் வருத்தம். 15 வருசத்துக்கு முன்னடி இது ஒரு மேட்டரே இல்ல. இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லைனு சொன்னது அவரோட தன்னடக்கத்தை காட்டுது. "ஆல் தி பெஸ்ட்"
 

கருத்துகள் இல்லை: