சனி, 18 ஜூன், 2011

பா.ம.க.வில் திடீர் பிளவு: நிர்வாகிகள் தலைவர் மணி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக

தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க.,வின் தொடர் தோல்விக்கு அக்கட்சியின் தலைவர் மணியே காரணம். அவர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, இடைப்பாடி பா.ம.க., முன்னாள் , எம்.எல்.ஏ., காவேரி திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளார். மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு குரல் கொடுக்க தயாராக உள்ளதால், பா.ம.க., தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

கடந்த, 1989 முதல் 2011 வரை நடந்த ஒன்பது தேர்தல்களில் ஆறாவது முறையாக கூட்டணி மாற்றத்தை அரங்கேற்றிய, பா.ம.க., நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தான் போட்டியிட்ட, 30 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மணி போட்டியிட்ட, மேட்டூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதிலும், பல்வேறு தில்லு முல்லுகள் அரங்கேறின. பலர் தொகுதி மாறி போட்டியிட்ட நிலையிலும், தோல்வியே பரிசாக கிடைத்தது. இந்த தோல்வியால், பா.ம.க.,வின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ள நிலையில், 'தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர், பதவியில் இருந்து மணி விலக வேண்டும்' என, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள் பலர் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இடைப்பாடி முன்னாள், பா.ம.க., எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலருமான காவேரி திடீர் என, மணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பது போல, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., - தி.மு.க.,வுடன் கூட்டணி ஏற்பட, தலைவர் ஜி.கே.மணி முன் கூட்டியே திட்டம் தீட்டி விட்டார். பென்னாகரம் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, ராமதாசிடம் சென்று முறையிட்டு, தன் மகன் தமிழ்குமரனுக்கு, அடம் பிடித்து சீட் வாங்கினார். பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, கருணாநிதி ஆட்சியை பாராட்டி பேசினார். இது பென்னாகரம் தொகுதி பா.ம.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பா.ம.க.,வின் வெற்றியை பாதித்து, இரண்டாம் இடத்தை பெற்றுக் கொடுத்தது. ராமதாஸ் பேரனின் திருமண அழைப்பிதழை வழங்க, முன்னாள் முதல்வர் கருணாநிதியை ராமதாஸ் சந்திக்க சென்றார். அதற்கு முன்பாகவே, மணி, கருணாநிதியிடம் பேசி, ராமதாஸ் வருகிறார். கூட்டணியை பேசி முடிவு செய்து விடுங்கள் என, தெரிவித்து, அதற்கு ஏற்றபடி காய் நகர்த்தி கூட்டணியை அமைத்து விட்டார்.

தி.மு.க., ஆட்சியின் போது பா.ம.க., - தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே தொடர் மனக்கசப்பு, அக்கட்சியினரின் அடாவடிகள் ஆகியன இணைந்ததால் பொதுமக்கள், பா.ம.க.,வை தோல்வி அடைய செய்து விட்டனர். "ஆக்டோபஸ்' போன்று செயல்பட்டு, தேர்தலின் போது வேறு பக்கமும் பேச முடியாமல் செய்து, பா.ம.க.,வை பலவீனமடைய செய்து, தோல்வியை பெற்றுத் தந்த தலைவர் மணி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதே போல் மேலும் பல முன்னாள் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள், கட்சி தலைமைக்கு தங்கள் அதிருப்தியை தெரியப்படுத்தி உள்ளனர். காவேரி தலைமையில் அணி சேர தயாராகி வருகின்றனர். அதனால், கட்சி தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. அதே சமயம் காவேரி போன்றவர்கள், கட்சியை உடைக்க சதி செய்கின்றனர் என, ஜி.கே.மணி தரப்பினர் ராமதாசிடம் புகார் கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: