புதன், 15 ஜூன், 2011

ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியம் தேவை: முதல்வர் ஜெயலலிதா

பல்வேறு துறைகளிலும் தமிழகம் ஒட்டுமொத்த வளர்ச்சி பெறுவதற்கான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானிய நிதி உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.30 பக்க மனு: தில்லியில் பிரதமரைச் சந்தித்தபோது 30 பக்க கோரிக்கை மனு ஒன்றை ஜெயலலிதா அளித்தார். அதில் இந்த கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
  தமிழகத்தின் மற்ற மக்களுக்கு உரிய அனைத்து சமூக நலத்திட்டங்களும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. அதற்குக் கூடுதலாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14.1 கோடி செலவாகும். அதை மத்திய அரசு வழங்க வேண்டும்.கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி உரிமையை மீட்டுத் தர வேண்டும்.மீன்பிடித் தொழில்: பூம்புகார், முகையூரில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்து ராமேஸ்வரத்தில் மீன்பிடிப் படகுகள் அதிகம் சேராமல் தவிர்க்க வேண்டும்.நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது அதை பதப்படுத்திட "நடுக்கடலில் மீன் பதப்படுத்தல் வசதி' என்ற முன்னோடி திட்டத்தைத் தொடங்க ரூ.80 கோடி தர வேண்டும்.விசைப் படகுகளுக்கு டீசலுக்கான மத்திய கலால் வரி விலக்கு தருவதற்கான விதிகள் நடைமுறைக்குப் பொருந்தாமல் உள்ளன. எனவே அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும்.மொத்தத்தில் மீன்பிடி துறைக்கு ஒட்டுமொத்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.245 கோடியும், ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.10 கோடி தொடர் செலவு நிதியும் அளிக்க வேண்டும்.கடலோர பாதுகாப்புப் படைக்கு ரூ.107 கோடியில் புதிய வாகன வசதிகள் செய்து தர வேண்டும்.மின்துறை: தமிழ்நாடு மின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை கடனில் இருந்து மீட்கவும், குவிந்த நட்டத்தைக் குறைக்கவும் ரூ.40 ஆயிரம் கோடி உதவியை வழங்க வேண்டும்.தமிழகத்தில் 10 இடங்களில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கிராமங்களில் சூரியசக்தி தெருவிளக்குகள் அமைக்கவும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு வீடுகளுக்கு இலவச சூரிய மின்சக்தி வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.எனவே 3,000 மெகாவாட் திறனுக்கு 10 சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க, தெருவிளக்குகள் அமைக்க ரூ.45 ஆயிரம் கோடி தேவை.கூடங்குளம் அணுமின் திட்டம், நெய்வேலி அனல்மின் திட்டம்-2, கல்பாக்கம் அணுமின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செய்யூரில் 4,000 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.2011 ஜூன் முதல் 2012 மே வரையில் தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும். ஏற்கெனவே இதுகுறித்துப் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.மோனோ ரயில் திட்டம்: மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ.16,650 கோடி செலவாகும். இதற்கு தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் கீழ் நிதியுதவி செய்ய வேண்டும்.அடுத்த 5 ஆண்டுகளில் 68 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க ரூ.10,200 கோடி செலவாகும். இந்தத் தொகையை சிறப்பு மானியமாக மத்திய அரசு வழங்க வேண்டும்.தமிழக நதிகள் இணைப்பு: தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவிரியை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு நதிகளுடன் இணைத்து வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், உபரி நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது நீர்வழித் தொகுப்பை உருவாக்கி வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கும் உதவியாக இருக்கும் இதற்கு ரூ.4,000 கோடி செலவாகும்.இந்திய அரசு அறிவிக்கை செய்துள்ள ஐந்து உள்நாடு நீர்வழித் தடங்களில் பழவேற்காடு ஏரியில் இருந்து புதுவை வரையிலான 132 கி.மீ. நீளமான பாதை தமிழகத்தில் வருகிறது. இது சரக்கு, பயணிகள் போக்குவரத்து, சுற்றுலாவுக்கு உதவியாக இருக்கும். இதற்கு ரூ.650 கோடி செலவாகும். இந்த தொகைகளை மத்திய அரசு வழங்க பரிசீலிக்க வேண்டும்.காவிரி நடுவர்மன்ற தீர்ப்பாயம் 5.2.2007-ல் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (கெஜட்) வெளியிடுவதுடன், அதை முழுமையாக அமல் செய்ய காவிரி நீர் நிர்வாக வாரியத்தை செயல்படுத்த வேண்டும்.கடன் சுமையைக் குறைக்க: தமிழக அரசு கடன் சுமையைக் குறைக்க ஒரு லட்சம் கோடி ரூபாயை உதவியாக மத்திய அரசு வழங்க வேண்டும். இதுதவிர மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவியை வழங்க வேண்டும்.முதியோர், விதவை உள்ளிட்ட 8 திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது. இவற்றில் 3 திட்டங்களுக்கு மட்டும் தலா ரூ.200 என்ற அளவில் மத்திய அரசு வழங்குகிறது. மீதியை மாநில அரசு வழங்குகிறது. எனவே மாநிலத்துக்கு சுமார் ரூ.2,556 கோடி நிதிச்சுமை ஏற்படுகிறது. எனவே மத்திய அரசின் பங்களிப்பை தலா ரூ.1,000 ஆக உயர்த்தவும், எல்லா திட்டங்களுக்கும் நிதி உதவி வழங்கவும், பயனாளிகள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பை நீக்கவும் வேண்டும். இதற்காகக் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.2556.82 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.சிறப்பு பொது விநியோக திட்டம்: சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு வகைகள், எண்ணெய், மசாலாப் பொருள்கள் வழங்குவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,036 கோடி செலவாகிறது. இதில் பாதியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.தரமான மருத்துவ சேவைக்கு: மூன்றாம் நிலை மருத்துவமனைகளை மேம்படுத்தி கிராம மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதற்காக அடுத்த இரு ஆண்டுகளில் மத்திய அரசு சிறப்பு மானியமாக ரூ.1800 கோடி வழங்க வேண்டும்.மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்த அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.500 கோடி தேவைப்படும்.நகர்ப்புற அடிப்படை வசதிகளுக்கு: வளரும் நகர்ப்புறங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடி தேவைப்படும். நகர்ப்புறங்களின் குடிநீர் சப்ளையை மேம்படுத்த ரூ.9,500 கோடி தேவைப்படும். சாலை வசதியை மேம்படுத்த ரூ.5,700 கோடி, பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற ரூ.1,100 கோடி தேவை.நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்க, ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி தேவை. இவற்றுக்காக ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் இரண்டாம் பகுதியைத் தொடங்க வேண்டும்.சூரிய சக்தி பசுமை வீடுகள்: சூரியசக்தி மின் வசதியுள்ள பசுமை வீடுகள் கட்ட ஆண்டுக்கு ரூ.1,125 கோடி தர வேண்டும். இதுதவிர ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகளுக்கு சூரியசக்தி மின்சார வசதி செய்ய ரூ.300 கோடி சிறப்பு மானியம் வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முதல்வர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: