வியாழன், 16 ஜூன், 2011

சிபிஐ நிரா ராடியா திடீர் சந்திப்பு-ஆவணங்களை ஒப்படைத்தார்

டெல்லி: சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்கை அரசியல் தரகர் நீரா ராடியா இன்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார்.

பல்வேறு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் சேர்ந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு நிரா ராடியாவும் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதையடுத்து இவரை சிபிஐ, அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் கண்காணித்து வந்தனர். இவரது தொலைபேசியை வருமான வரித்துறையினர் ஒட்டுக் கேட்டபோது தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல உண்மைகள் வெளியில் வந்தன.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது ராசாவுக்கு தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்ததிலும் நிரா ராடியாவுக்கு முக்கிய பங்குள்ளதும், சில முன்னணி தொழிலதிபர்கள் சார்பில் ராசாவுக்காக ராடியா 'லாபி' செய்ததும் அவரது தொலைபேசி பேச்சுக்கள் மூலம் தெரியவந்தது.

2ஜி ஊழல் வழக்கில் மொத்தம் 125 பேரை சிபிஐ சாட்சிகளாக சேர்த்துள்ளது. அதில் நிரா ராடியாவின் பெயர் 44வது சாட்சியாக இடம் பெற்றுள்ளது.

இதனால் நிரா ராடியாவும் கைதாவார் என்று கருதப்பட்டது. ஆனால், இவருக்கு ஆதரவாக இந்தியாவின் மிக பலம் வாய்ந்த கார்ப்பரேட் லாபி செயல்பட்டு, இவரது கைதை தடுத்து வருவதாகக் கூறப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிபிஐ தனது 3வது துணை குற்றப்பத்திரிகையை ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யவுள்ளது. அதில் ராடியாவின் பெயர் இடம் பெறலாம் என்று கூறப்படும் நிலையில், இன்று நிரா ராடியா திடீரென சிபிஐ இயக்குநரை சந்தித்தார்.

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது நிரா ராடியா தனது தரப்பு நியாயத்தை விளக்கியதாகத் தெரிகிறது. மேலும் 2ஜி விவகாரம் தொடர்பாக சில ஆவணங்களையும் அவர் சிங்கிடம் சமர்பித்ததாகத் தெரிகிறது.

2ஜி வழக்கின் சாட்சிகளில் ஒருவரான நிரா ராடியா சிபிஐ அதிகாரிகளை சந்திக்க உரிமை உள்ளதாக சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

English summary
Corporate lobbyist Niira Radia met CBI director A.P. Singh on Wednesday. The meeting lasted for about half-an-hour. Sources told Radia submitted some documents related to the 2G case.

கருத்துகள் இல்லை: