வெள்ளி, 17 ஜூன், 2011

தமிழைப் பேசாத தீவிர தமிழ்ப் பற்றாளர்கள் வாழும் மலாக்கா


மலாக்கா நீரிணையின் கேந்திர அமைவிடத்தில் மலேசிய அரசிற்குச் சொந்தமான மலாக்கா துறைமுகம் இருக்கிறது. கிழக்கு மேற்கு வாணிபம் காரணமாகப் 14ம் நூற்றாண்டில் மலாக்காத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் ஐரோப்பாவின் முன்னாள் வர்த்தக மையமான வெனிஸ் (Venice) நகருக்கு நிகரான முக்கியத்துவம் மலாக்காவுக்கு இருந்தது. (Malacca)


கலிங்க பட்டணத்தில் இருந்தும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் பாய்க் கப்பல்கள் மூலம் மலாக்கா வந்த தமிழ் வாணிபர்கள் மலாக்கா செட்டி என்று அழைக்கப்பட்டார்கள். மலாய் மொழியில் செட்டி என்றால் வியாபாரிகள் என்று பொருள். நாட்டுக்கோட்டைச் செட்டிகள் வேறு இவர்கள் வேறு என்பதைக் கவனிக்க வேண்டும்.


சுமத்திரா தீவின் பலம்பாங்(Palembang) நகரின் அரச குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் இந்து இளவரசன் பரமேஸ்வரா 14ம் நூற்றாண்டில் மலாக்காவைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தான். இப்பகுதி மரமொன்றுக்குப் பெயர் மெலாக்கு. அதன் காரணமாக இந்தப் பகுதிக்கு அவன் மலாக்கா என்று பெயரிட்டான்.பரமேசுவராவின் பிரதம அமைச்சர், நிதி அமைச்சர், தளபதி ஆகியோர் தமிழர்களே. ஒரு மீன்பிடிக் கரையோரக் கிராமத்தைத் துறைமுகம் ஆக்கியவர்கள் அங்கு வாழ்ந்த தமிழர்களே. கல்வியிலும் வியாபாரத்திலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள். பரேமேஸ்வரா அவர்கள்உதவியோடு தனது ஆட்சியைப் பலப்படுத்தினான்.


திருமணம் செய்யும் நோக்கில் மன்னன் பரமேஸ்வரா 1414ல் சுமாத்திராவின் ஆச்சே (Acheh) நகருக்குச் சென்று அங்கே பாசாய் (Pasai) பகுதி முஸ்லிம் இளவரசியை மணந்தான். அத்தோடு முஸ்லிம் மதத்தைத் தழுவித் தனது பெயரைச் சுல்தான் இஸ்கந்தர் ஷா (Sultan Ikandar Shah) என்று மாற்றினான்.


மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்றபடி பலர் முஸ்லிம்களாக மதம் மாறினாலும் அரண்மனைத் தமிழர், வாணிபத் தமிழர், கப்பலோட்டிய தமிழர் இந்து மதத்தை கைவிடாமல் ஒழுகி வந்தனர். கஜபதி அம்மன் என்ற கோவிலையும் அமைத்து வழிபட்டனர். ஆனால் பலர் மலாய் மற்றும் சீனப் பெண்களை மணந்து புதிய கலப்பினத்தை உருவாக்கினார். தமிழ் நாட்டிலிருந்து மணப் பெண்கள் கொண்டுவரப்படாததே இதற்கு காரணம்.


அல்போன்சோ டி அல்பூகுவர்குவே (Alfonso) என்ற போத்துக்கீசிய கடற்படைத் தலைவன் மலாக்காவை 1511ல் கைப்பற்றினான். மலாக்காவில் போத்துக்கீசிய ஆட்சி 1641ல் டச்சுக்காரர்கள் வரும் வரை 130 வருடம் நிலைதத்து. சுல்தான்கள் ஆட்சி அத்தோடு முடிவுற்றது.


ஆனால் மலாக்கா செட்டிகளின் செல்வாக்கு மாத்திரம் குறையவில்லை. சிலர் கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். பெரும்பாலானோர் இந்து மதத்தில் நின்றனர். ஆனால் வேற்றினப் பெண்களை மணப்பதை மாத்திரம் நிறுத்தவில்லை. மலாய் மற்றும் சீனப் பெண்கள் செட்டிகளை விரும்பித் திருமணம் செய்து இந்து முறைப்படி வாழ்ந்தார்கள். தமிழ்ப் பண்பாட்டையும் கடைப்பிடித்தார்கள்.


டச்சுக்காரர் வருகையோடு மலாக்கா செட்டிகளின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது. வாணிப முயற்சிகள் டச்சுக்காரர் கைகளுக்கு மாறின. மலாக்கா செட்டிகள் சிறு வியாபாரம் மற்றும் விவசாயத்தில் இறங்கினர். மலாக்கா செட்டிகள் இந்து மத அனுட்டானங்களில் தீவிரமாக இருந்ததை டச்சுக்காரர்கள் ஏற்றுக் கொண்டனர்.


மலாக்காவின் டச்சு கவர்னர் போர்ட் ( Bort) 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோவில் கட்ட வழங்கினார். 1781ம் ஆண்டின் அரசு கெசட் நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது, சிறீ பொய்யாத விநாயகர் மூர்த்தி என்ற பெயரில் கட்டப்பட்ட கோவில் இன்றும் விமரிசையாக எழுந்து நிற்கிறது. இந்தப் பிரதேசத்தில் கட்டப்பட்ட முதலாவது இந்துக் கோயில் என்ற சிறப்பு பொய்யாத விநாயகருக்கு உண்டு.


மலாக்கா செட்டிகள் ஏழு தலைமுறையைக் கடந்து விட்டார்கள். இந்து மதப் பற்றில் இறுக்கமாக இருக்கிறார்கள் சீன, மலாய்ப் பெண்களை இந்து முறைப்படி திருமணம் செய்கிறார்கள். தேவார திருவாசகங்களை ஆங்கிலம், சீன, மலாய் மொழிகளில் எழுதி நெக்குரிகிப் பாடுகிறார்கள். கலப்பின தமிழ் , சீன மலாய் இளைய தலைமுறையினர் திருநாள் பெருநாள்களில் தமிழர்களுடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, இறவுக்கை சேலை போன்றவற்றை அணிகிறார்கள்.


ஏழு தலைமுறையாக மொழியை இழந்த சோகம் மலாக்கா செட்டிச் சமூகத்தில் காணப்படுகிறது. 1824ல் மலாக்கா ஆங்கிலேயர்கள் வசமானபிறகு ஆங்கிலம் கற்றவர்கள் தமிழைக் கற்க மறந்து விட்டார்கள். 1957ல் மலேசியா சுதந்திரம் பெற்றது. அப்போதும் அவர்கள் தமிழைக் கற்கவில்லை.


யுனெஸ்கோ (Unesco) மலாக்காவை மனித குலத்தின் வரலாற்று இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. ( World Heritage ) தாய் மொழி இழப்பின் சோகம் அதை அனுபவித்தவர்களுக்கு மாத்திரம் தெரியும். மலாக்கா செட்டிகள் அதிலிருந்து மீள முயற்சிக்கிறார்கள். இந்து மதத்தில் காட்டிய தீவிரத்தை இப்போது தமிழ் மொழியைப் படிப்பதில் காட்டத் தொடங்கிவிட்டார்கள்

கருத்துகள் இல்லை: