செவ்வாய், 14 ஜூன், 2011

கலைஞர்: அதிமுக ஆட்சி செய்த 22 ஆண்டுகளில் கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை?



கச்சத்தீவு தீர்மானம் மகிழ்ச்சி; என் மீது
விமர்சனக்கணைகளை வீசத்தான் இந்த தீர்மானம்
கலைஞர் அதிமுக ஆட்சி செய்த 22 ஆண்டுகளில் கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை? என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு தொடர்பாக ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கலைஞர்.
அவர்,தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருவாய்த்துறையை வழக்கில் இணைந்து கொள்ள தமிழக அரசே ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவர வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த தீர்மானம் இல்லாமலே அந்த வழக்கில்  வருவாய்த்துறை இணைந்து கொண்டு வாதாட முடியாதா?’’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால்,கச்சத்தீவுக்காக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ள
கலைஞர்,அந்த தீர்மானத்தின் மீது ஜெயலலிதாவும், எதிர்க்கட்சியினரும் பேசிய கருத்துக்களைப் பார்க்கும் போது தம் மீது விமர்சனக் கணைகளை வீசத்தான் அந்த தீர்மானமே கொண்டுவரப்பட்டது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு, மத்திய அரசினால் திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு வழங்கப்பட்டது பற்றியும் அதனை வழங்கும் போது கடந்த 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்த உரிமைகள் கூட கடந்த 1976ம் ஆண்டு குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்றபோது பறிக்கப்பட்டது குறித்தும் பலமுறை விளக்கம் அளித்திருப்பதை கலைஞர் நினைவு கூர்ந்துள்ளார்.

கச்சத்தீவை திமுக தாரை வார்த்து விட்டது என்று தகவல்களை ஆரம்பம் முதலே அறிந்து கொள்ளாமல் தொடர்ந்து முழங்கிக்கொண்டிருக்கும் அதிமுக, தான் ஆட்சி செய்த 22 ஆண்டுகளில்  கச்சச்தீவை ஏன் மீட்கவில்லை? என்றும் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பது என்ற முடிவை மத்திய அரசு எடுத்தபோது திமுக அரசு அதற்கு பெரும் எதிர்ப்பை தெரிவித்தது என்று கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அதற்கு பிறகு வந்த நெருக்கடி நிலை காலத்தில் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் விளக்கப்பட்ட ஒப்பந்த ஷரத்துகளை மீண்டும் சேர்க்கக்கோரி மத்திய அரசோடு தொடர்ந்து வாதிட்டுக்கொண்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கச்சத்தீவை தாரை வார்க்க திமுக ஒப்புக்கொள்ளவும் இல்லை. உடன்படவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள கலைஞர் பாராளுமன்றத்திலேயே இந்த தீர்மானம் வந்தபோது திமுக வெளிநடப்பு செய்திருக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 1994ம் ஆண்டும் பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பல பிரச்சனைகள் இருந்தாலும் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத்தான் கச்சத்தீவு அளிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்ததை மறந்து, இன்று வீராவேசமாக பேசுகிறார் என்றும் கலைஞர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: