புதன், 15 ஜூன், 2011

பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!

பார்த்தசாரதி - சரண்யா’’யாரு… காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்ட பாவத்துக்காக தன்னோட மாமனாராலயே ஆள் வச்சு சாவடிக்ப்பட்டிச்சே… அந்த பார்த்தசாரதியை பார்க்க வந்தீங்களா? ம்… என்னத்த சொல்ல… நானும் இந்த ஏரியாக்காரன்தான். அம்பது வருஷங்களா இங்கதான் இருக்கேன். ஒரு ஈ,எறும்பு அசைஞ்சா கூட எனக்கு தெரிஞ்சுடும். அப்படியிருக்கிறப்ப அந்தத் தம்பி இருபது வருஷங்களா இதே ஏரியாவுலதான் இருந்திச்சுன்னு பேப்பர்ல பாத்ததும் அப்படியே பகீர்னு ஆகிப்போச்சு. சத்தியமா சொல்றேன்… பேப்பர்ல பார்த்தசாரதியோட ஃபோட்டோவை பார்த்ததும் முன்னபின்ன பார்த்தா மாதிரியோ, பேசினா மாதிரியோ நினைவேயில்ல. அந்தளவுக்கு தானுண்டு… தன்வேலையுண்டுனு அந்தத் தம்பி இருந்திருக்கு. எனக்கு மட்டும் இப்படியொரு மாப்பிள்ளை கிடைச்சிருந்தா அப்படியே கோயில் கட்டி கும்பிட்டிருப்பேன். ஆனா, பணக்காரனுங்களுக்கு எங்க மனுஷனோட குணம் தெரியுது? ஒரு தும்மல் கூட எவ்வளவு விலை போகும்னுதான கணக்கு பார்க்கறாங்க? என்னவோ போங்க… முன்னாடியெல்லாம் தெற்குப் பக்கம்தான் சாதி, அந்தஸ்தை பார்த்து இப்படி கொலை செய்வாங்கனு படிச்சிருக்கேன்… இப்ப இந்தப் பழக்கம் சென்னைக்கும் வந்திருக்கு… இதெல்லாம் நல்லதுக்கில்ல… ஆமா…’’
என்றபடி அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்கெட் சாலையில், மீன் மார்கெட்டுக்கு எதிர்புறமாக செல்லும் சாலையை அடையாளம் காட்டினார். அதுதான் அய்யாவு முதலி தெரு. பார்த்தசாரதியின் குடும்பம் அத்தெருவில்தான் வசிக்கிறது. சாலையின் தொடக்கத்தில் ‘சிந்தாதிரிப்பேட்டை உதவி காவல் மையம்: உபயம் சிந்தாதிரிப்பேட்டை வணிகர் பெருமக்கள்’ என்னும் பெயிண்ட் உதிர்ந்த போலீஸ் பூத், காவலர்கள் இன்றி காற்றாடிக் கொண்டிருந்தது. சாலையின் குறுக்கே ஓடையை போல் ஓடுகிறது கழிவு நீர். அதைத் தாண்டினால் சாலையின் இருபுறகும் கடைகள். பெரும்பாலும் சந்தன மாலை உட்பட செயற்கையான மாலைகளை விற்கும் கடைகள். இதனையடுத்து ஒரு சின்ன ஹார்டுவேர். பிறகு புரொவிஷன் ஸ்டோர். பெட்டிக் கடைகள். இக்கடைகளின் மாடிகளில் மக்கள் வசிக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக துணிகள் வெயிலில் காய்ந்துக் கொண்டிருந்தன. பிறகு வருபவை அனைத்தும் குடியிருப்புகள்தான்.
வீடுகளோ, கடைகளோ இடைவெளியின்றி அடுத்தடுத்து இருக்கின்றன. ஒரு வீடு அல்லது கடையின் எல்லை அடுத்த வீடு அல்லது கடையின் ஆரம்பமாக இருக்கிறது. ஐம்பதடி தூரம் நடந்தால் இடது புறத்தில் சின்னதாக மசூதி. மேலும் ஐம்பதடி நடந்தால் வலப்புறம் ‘சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்’. இக்கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் வெள்ளை சுண்ணாம்படித்த வீட்டின் மாடியில்தான் பார்த்தசாரதியின் குடும்பம் வசித்து வருகிறது.
ஆங்காங்கே சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்களில், இடைவெளி விட்டு ஜன்னல்கள் முளைத்திருக்கின்றன. அனைத்துமே மர ஜன்னல்கள். எல்லாமே திறந்திருக்கின்றன. எந்த ஜன்னலுக்கும் கொக்கியும் இல்லை. அவை நேராக நிற்கவும் இல்லை. ஒரு புறமாக சாய்ந்த நிலையில் காணப்படும் அந்த ஜன்னல்களின் கம்பிகள் துருவேறி, எளிதில் வளைக்கக் கூடிய அல்லது பிடுங்கக் கூடிய நிலையில் இருக்கின்றன.
வாசலில் காலிங்பெல் இல்லை. வாசக் கதவும் மரக் கதவுதான். சாயம்போன பழுப்பு நிறம். இடுப்பு வரை வெறும் மரச்சட்டங்கள். அதன் பிறகு நீள வடிவ மரப் பலகையின் நடுவில் நான்கு, நான்கு கம்பிகள். அந்தக் கம்பியின் இடைவெளியில் கைவிட்டால் உட்புறமாக இருக்கும் தாழ்பாளை அணுகலாம். ஆனால், கவனமாக அந்தத் தாழ்பாளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் வாயைப் பிளந்தபடி காட்சியளிக்கும் அந்த இரும்புத் தாழ்பாளின் முனைகள் கைகளை கிழித்துவிடும்.
தாழ்பாளை நீக்கியதும் கைகளை அழுத்தி கதவைத் திறந்தால்… கரகர ஒலியுடன் கதவு திறக்கிறது. அதுதான் காலிங் பெல் போலும். சரியாக மூன்றடி நீளமுள்ள தாழ்வாரம். அதன் பிறகு கீழ் வீட்டுக்கான கதவு. அக்கதவை ஒட்டினால் போல வலது புறத்தில் மாடிக்கு செல்லும் படிக்கெட்டுகள்.
கைகள் இல்லாத கறுப்பு பனியனை அணிந்திருந்த, சுமாராக எட்டு வயதுள்ள சிறுவன் கீழ் வீட்டின் கதவை திறந்தபடி வந்தான். ”நீங்க யாரு..? யாரைப் பார்க்கணும்..?” என்றெல்லாம் கேட்காமல், ”பார்த்தசாரதி வீடுதான? மேல போங்க. ஆனா, சத்தம் போடாம போங்க. என் தம்பி தூங்கிட்டு இருக்கான்…” என்றபடி மாடிப் படிக்கெட்டை சுட்டிக் காட்டினான்.
மாடிப்படியின் அகலம் இரண்டடி இருக்கும். நீளம் என்று என்று பார்த்தால் அதிகபட்சம் ஓரடித்தான். சற்றே தாட்டியான உடலுள்ளவர்கள் அப்படிகளில் நேராக ஏற முடியாது. படிக்கெட்டின் நடுவில் ஆங்காங்கே உடைந்திருப்பதால் கால்களை கவனமாக ஊன்ற வேண்டும். ஏழு படிக்கெட்டுகள் வரை ஏறியதும் சராசரி உயரமுள்ளவர்கள் கூட குனிவது நல்லது. இல்லாவிட்டால் தலை இடிக்கும். இதன் பிறகு குறுகலான இரண்டு படிக்கெட்டுகள். அதன் பிறகு இடப்புறமாக முன்பைப் போல் மூன்று படிக்கெட்டுகள்.
பார்த்தசாரதியின் வீடு திறந்தே இருக்கிறது. கீழே சிறுவன் பேசியது கேட்டிருக்க வேண்டும். எனவே கதவின் அருகில் காலடி சத்தம் கேட்டதுமே, ”உள்ள வாங்க…” என குரல் அழைக்கிறது.
செவ்வகமான ஹால். தரைத்தளம் சிமெண்டினால் பூசப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே விரிசலும், சில இடங்களில் சற்றே பெயர்ந்தும் காணப்படுகிறது. கூரையை மரச் சட்டங்கள் தாங்கியிருக்கின்றன. வாசக் கதவுக்கு எதிர்முனையில், மர ஈசி சேரில் பெரியவர் ஒருவர் சாய்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் சாயம் போன சாம்பல் நிற பிளாஸ்டிக் சேர் காலியாக இருக்கிறது. பெரியவருக்கு அந்தப் பக்கம், சுவற்றுடன் ஒட்டியபடி பழைய மர டேபிள். அதன் மீது புதியதாக ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க, பார்த்தசாரதியின் புகைப்படம், ரோஜா மாலையுடன் சுவற்றில் சாய்ந்தபடி வருபவர்களை வரவேற்கிறது.
அந்த மர டேபிள் ஆடாமல் இருப்பதற்காக, கால் பகுதியின் அடிப்பாகத்தில் சின்னதாக ஒரு கருங்கலை வைத்திருக்கிறார்கள். டேபிளுக்கு கீழே, புதியதாக ஒரு சின்ன எவசில்வர் குடமும், அதன் மீது மஞ்சள் தடவப்பட்ட தேங்காயும், தேங்காயை சுற்றிலும் மாவிலையும் இருக்கிறது.
”உட்காருங்க…” என தன் அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை அந்தப் பெரியவர் காட்டினார். அவரது உறவினர்கள் ஏழெட்டு பேர், சுவற்றுடன் ஓட்டியபடி நின்றிருந்தனர்.
”நீங்க பத்திரிகைக்காரங்கனு தெரியுது. ஆனா, எந்தப் பத்திரிகைனு நீங்க சொன்னாலும் என்னால புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா, எனக்கு படிப்பறிவு கம்மி. அதனால நானே நடந்ததை சொல்ல ஆரம்பிச்சுடறேன்.
என் பேரு சந்திர மோகன். டைலர். இப்ப தொழில் செய்யறதில்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன். பையன்தான் கடைசி. என் பொண்டாட்டி ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே இறந்துட்டா. கொஞ்ச நாள் பிராட்வேல இருந்தோம். அப்புறம், இதோ இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தோம். சுமாரா ஒரு பதினேழு, பதினெட்டு வருஷங்களா இதே வீட்லதான் குடியிருக்கோம். நாங்க குடிவந்தப்ப இந்த வீட்டுக்கு வாடகை இருநூறு ரூபா. இப்ப இரண்டாயிரம் ரூபா வாடகை தர்றோம். பசங்களை கஷ்டப்பட்டு படிக்க வைச்சேன். பொண்ணுங்களை கட்டி கொடுத்ததும் தொழிலை விட்டுட்டேன்.
என் பையன் நல்லா படிப்பான். கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிச்சான். ப்ளஸ் 2 முடிச்சதும் இன்ஜினியரிங் படிக்கறேன்னு சொன்னான். அந்தளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. அதனால அவனாவே பேங்க்ல லோன் வாங்கி படிச்சான். படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை கிடைக்கலை. சின்னச் சின்ன வேலையாதான் கிடைச்சது. வீட்டு சூழ்நிலை புரிஞ்சு கிடைச்ச வேலைக்கு போனான். நைட் ஷிப்ட் வேலைதான் பெரும்பாலும் கிடைச்சது. அவனுக்கு கம்ப்யூட்டரை ரிப்பேர் பண்ணத் தெரியும். அதனால பகல்ல அந்த வேலையை பார்த்தான். இந்த வருமானத்துலதான் படிப்புக்காக அவன் வாங்கின லோனையும் கட்டினான். குடும்பத்தையும் பார்த்துகிட்டான்.
இதுக்கு நடுவுல ஒரு பொண்ணை காதலிக்கறதா சொன்னான். அந்தப் பொண்ணு பேரு சரண்யா. நாங்க முதலியாருங்க. அவங்க நாயுடு. இதுபோக ஏணி வைச்சா கூட எட்ட முடியாத அளவுக்கு அவங்க பணக்காரங்க. அதனால இது சரிப்பட்டு வருமானு நான் யோசிச்சேன்.
ஆனா, சரண்யாவ பார்த்ததும் இப்படியொரு மருமக கிடைச்சா நல்லா இருக்குமேனு நான் நினைச்சேன். அந்தளவுக்கு பந்தா இல்லாம, பணக்கார திமிரு இல்லாம எங்கிட்டயும், என் பொண்ணுங்க கிட்டயும் அன்பா பழகினா.
இவங்க காதலிக்கிற விஷயம் தெரிஞ்சதும் சரண்யாவோட அப்பாவும், அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. எங்களையும் சரி, எங்க வீட்டையும் சரி, அவங்களுக்கு பிடிக்கலை. ‘இதெல்லாம் சரிப்பட்டு வராது. என் பொண்ணை மறந்துடு’னு என் பையன் கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ஆனா, என் பையனும், சரண்யாவும் உறுதியா நின்னாங்க. அதனால அவங்க வீட்ல திரும்பவும் பேச நான் போனேன்.
அவங்க வீடு பங்களா. என்னை நிக்க வைச்சு பேசி ‘இந்தக் கல்யாணம் நடக்காது’னு சொல்லி அனுப்பிட்டாங்க…” என்று அவர் சொல்லும்போதே அவருக்கு இருமல் வந்தது.
”பார்த்துப்பா… பார்த்து…” என்றபடி அழுது வீங்கிய முகத்துடன் உள்ளறையிலிருந்து ஒரு பெண் வேகமாக வந்து அவரது மார்பை தடவி விட்டார். ”இவதான் சரண்யா… என் மருமக…” இருமலின் வழியே அந்தப் பெரியவர் அறிமுகப்படுத்தினார்.

சரண்யா
சரண்யா”அதிகம் பேசினா இவருக்கு இருமல் வரும். அதுக்காக, பேசாமயும் இருக்க முடியாது. ஏன்னா, நடந்த கொடூரத்தை உங்கள மாதிரி பத்திரிகைகாரங்ககிட்ட இப்ப சொன்னாதான் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்னு நம்பறோம். அதனாலதான் திரும்பத் திரும்ப எங்க துக்கத்தை சொல்லிகிட்டே இருக்கோம்…” என பெரியவரின் மார்பை தடவியபடியே சரண்யா பேச ஆரம்பித்தார்.
”கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் பெரம்பூர், பெரியார் நகர்ல எங்கப்பா அம்மா கூடதான் நான் இருந்தேன். எங்கப்பா நரசிம்மன். அவரு வில்லிவாக்கம் குடிநீர் வடிகால் வாரியத்துல உதவி செயற்பொறியாளரா இருக்காரு. அம்மா பேரு லதா, கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர். ஒரேயொரு அண்ணன். பேரு அரவிந்த். இன்ஜினியரிங் முடிச்சுட்டு வெளிநாடு போக டிரை பண்ணிட்டு இருக்கான். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம்.
சின்ன வயசுலேந்தே எங்க வீட்டை எனக்கு பிடிக்காது. எங்கப்பாவும், அம்மாவும் கவர்மெண்ட் செர்வண்ட்ஸ்தான். ரெண்டு பேரோட சம்பளத்தையும் சேர்த்தா அதிகபட்சம் மாசம் முப்பதாயிரம் ரூபாதான் வரும். ஆனா, எங்களுக்கு சென்னைல மட்டுமே 5 வீடுகள் இருக்கு. இதுதவிர எங்க சொந்த ஊரான அரக்கோணத்துல சொத்துக்கள் இருக்கு. நிச்சயம் இதெல்லாம் அவங்க சம்பளத்துல வாங்கியிருக்க முடியாது. வேற வழியில சம்பாதிச்ச பணம்தான். ஒருமுறை லஞ்சம், ஊழல் தொடர்பா எங்கப்பா மேல விசாரணை கூட நடந்தது. ஆனா, எப்படியோ தப்பிச்சுட்டாரு.
வீட்ல எங்கப்பா சாது. அம்மா வைச்சதுதான் சட்டம். பண ரீதியா எல்லாத்தையும் எங்கம்மாதான் பார்த்துப்பாங்க. எல்லாத்தையும் பணத்தை வைச்சே மதிப்பிடுவாங்க. பணக்கார ஃப்ரெண்ட்ஸோட பழகினா அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிப்பாங்க. அதுவே ஏழையாவோ அல்லது சுமாரான நிலைல இருக்கிற ஃப்ரெண்ட்ஸாவோ இருந்தா ‘அவங்க கூட எல்லாம் ஏன் பழகற’னு என்னை திட்டுவாங்க. இதெல்லாம் எனக்கு பிடிக்காது. அடிக்கடி அவங்களோட சண்டை போடுவேன். எங்கண்ணன் எப்பவும் அம்மா பக்கம்தான். அப்பா வாயே திறக்க மாட்டாரு. அதனால தனிமைப்பட்டு நின்னேன்.
இந்தநேரத்துலதான் ‘சாட்டிங்’ மூலமா 5 வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தசாரதி அறிமுகமானாரு. ஒருத்தரையொருத்தர் சந்திக்காமயும், ஃபோட்டோ கூட பரிமாறிக்காமயும் நட்பா பழகினோம். காஞ்சிபுரம் பக்கத்துல எம்.பி.பி.எஸ். படிக்க எனக்கு சீட் கிடைச்சது. உண்மையை சொல்லப் போனா பணம் கொடுத்து சீட் வாங்கினோம்னு சொல்லணும்.
மூணு வருஷங்களுக்கு முன்னாடி நானும் பார்த்தசாரதியும் நேருக்கு நேர் ஒரு பொது இடத்துல சந்திச்சோம். பணத்தை பெரிசா நினைக்காத பார்த்தசாரதியோட குணம் எனக்கு பிடிச்சிருந்தது. ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடிதான் அவரோட நான் வெறும் நட்பா மட்டும் பழகலை… காதலிக்கவும் செய்யறேன்னு புரிஞ்சுது. ஏறக்குறைய பார்த்தசாரதியும் அதே மனநிலைதான் இருந்தாரு. அதனால பரஸ்பரம் நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம்.
நான் வீட்லேந்து தினமும் காலேஜுக்கு போயிட்டு வந்துட்டிருந்தேன். சீக்கிரமா காலேஜ் விட்டு வர்றப்ப அல்லது வார கடைசில நாங்க ரெண்டுபேரும் ஊர் சுத்துவோம். இதை யாரோ பார்த்துட்டு எங்க வீட்ல போட்டுக் கொடுத்துட்டாங்க.
எங்க காதலை பத்தி எங்கப்பா என்ன நினைச்சார்னு இன்னி வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனா, எங்கம்மாவும், அண்ணனும் இதை ஏத்துக்கலை. பலமா எதிர்த்தாங்க. பார்த்தசாரதியை நான் மறக்கணும்னு என்னை அடிச்சாங்க. ஆனா, நான் உறுதியா நின்னேன்.
அதனால ஃபைனல் இயர் படிக்கிற எனக்கு அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க. ஒரு அமெரிக்க மாப்பிள்ளையோட கடந்த ஜனவரி 27-ம் தேதி எனக்கு நிச்சயதார்த்தம் நடத்தினாங்க. இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாதுனு காலேஜ் ஹாஸ்டல்ல தங்கினேன். ஆனா, வார கடைசில வீட்டுக்கு வர்றப்ப பார்த்தசாரதியை நான் சந்திக்கக் கூடாதுனு ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி செஞ்சாங்க. என்னுடைய செல்ஃபோனையும், லேப்டாப்பையும் பிடுங்கிட்டாங்க. ‘பார்த்தசாரதிய நீ எங்களுக்கு தெரியாம கட்டிகிட்டாலும் உன் தாலிய அறுத்து உனக்கு இரண்டாவது கல்யாணம் செஞ்சு வைப்போம்’னு சொன்னாங்க.
ரொம்ப அருவெறுப்பா ஆகிடுச்சு. கொஞ்சமா ஒட்டிட்டிருந்த பாசம் கூட விட்டுப் போயிடுச்சு. பணம் பணம்னு அலையற எங்கம்மாவையும், அண்ணனையும் பார்க்கவே எனக்கு பிடிக்கலை. பணத்தை பத்தி பெரிசா நினைக்காத, சின்ன வயசுலேந்து நான் தேடிக்கிட்டிருந்த அன்பை மட்டுமே முக்கியமா கருதற பார்த்தசாரதியோட குடும்பம் எனக்கு பெரிசா தெரிஞ்சது. எந்தக் காரணத்தை கொண்டும் இவங்களை இழந்துடக் கூடாதுனு உறுதியா இருந்தேன்.
நடுவுல எங்கண்ணன், பார்த்தசாரதியை கூப்பிட்டு மிரட்டினான். ஆனா, ‘சரண்யாவ உயிருக்கு உயிரா காதலிக்கறேன். அவளை யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்’னு பிடிவாதமா நின்ன பார்த்தசாரதிய பார்க்க பிரமிப்பா இருந்தது. உண்மைய சொல்லணும்னா அந்தக் கணத்துலேந்துதான் நான் அதிகமா பார்த்தசாரதியை நேசிக்க ஆரம்பிச்சேன்னு சொல்லணும்.
உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறதுனு தெரியலை. நீங்க சின்ன வயசுலேந்து எதை தேடிட்டு இருந்தீங்களோ… எது கிடைக்கவே கிடைக்காதுனு நம்பிட்டு இருந்தீங்களோ… அது உங்க முன்னாடி வந்து நின்னு ‘உனக்காகத்தான் நான் காத்திருக்கேன்’னு சொன்னா எப்படி இருக்கும்? அப்படியான மனநிலைதான் நான் இருந்தேன்.
அதனால கடந்த பிப்ரவரி மாசம் 10ம் தேதி நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டோம். பிப்ரவரி 23ம் தேதி சின்னதா ஒரு ரிசப்ஷனை வச்சோம். எங்க வீட்லேந்து யாருமே வரலை.
நான் வாழ்ந்த வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். அது பல் விலக்கறதுலேந்து ஆரம்பிக்கிற வேறுபாடு. ஆனா, இந்த வீட்லதான், இந்த நாலு சுவத்துக்குள்ளதான் நான், நானா இருக்கேன். எந்தவிதமான மன சங்கடமும் இல்லாம சந்தோஷமா இருக்கேன். இருக்கிற சாப்பாட்டுல எனக்கும் ஒரு வாய் கொடுக்கிறாங்க. ஆனா, வயிறார நான் சாப்பிடறேன்.
எங்க கல்யாணத்துக்கு பிறகுதான் பார்த்தசாரதிக்கு ஒரு நல்ல வேலை டைடல் பார்க்குல கிடைச்சது. நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன். வார கடைசில இங்க வந்துடுவேன்.
திருமணத்துக்கு பிறகு எங்கம்மாவும், அப்பாவும் அமைதியா ஆகிட்டாங்க. அண்ணன் கூட எந்த ரியாக்ஷனும் காட்டலை.  இது அவங்க வழக்கத்துக்கு மாறானது. அதனாலயே ஏதோ பெரிசா ப்ளான் பண்ணறாங்கனு என் மனசு கடந்து அடிச்சுகிட்டே இருந்துச்சு. பார்த்தசாரதிகிட்ட என் பயத்தை சொன்னா, ‘எதுக்கு வேண்டாததை போட்டு குழப்பிக்கற’னு என்னை டைவர்ட் பண்ணிடுவாரு. ஆனாலும் நான் சமாதானமாகலை.
தினமும் காலைலயும், மாலைலயும் நான் பார்த்தசாரதியோட பேசுவேன். அப்படித்தான் ஜூன் 2-ம் தேதி காலைலயும் அவரோட பேசினேன். ஆனா, கொஞ்ச நேரத்துலயே கால் கட்டாகிடுச்சு. திரும்பவும் கூப்பிட்டேன். அப்ப பார்த்தசாரதி யார் கூடவோ வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தாரு. ‘என்ன பிரச்னை? யாரோட சண்டை போடறீங்க’னு கேட்டேன். அவர் பதில் சொல்றதுக்குள்ள அவரோட செல்ஃபோன் கீழ விழுந்து, ஆஃப் ஆகிடுச்சு. அதுக்குப் பிறகு விடாம தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச் ஆஃப்னே வந்தது.
பயந்து போய், பார்த்தசாரதியோட அப்பாவுக்கு ஃபோன் பண்ணினேன். அவருக்கும் எந்த விவரமும் தெரியலை. பகல் பூரா பார்த்தசாரதியை தொடர்பு கொள்ளவே முடியலை. வீட்டுக்கும் அவர் வரலை. ஆபீசுக்கும் அவர் போகலை. அதனால அலறியடிச்சு சென்னைக்கு வந்தேன். நிச்சயம் இது எங்க அப்பா, அம்மாவோட வேலையாதான் இருக்கும்னு உறுதியா நம்பினேன்.
மாலையே சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுத்தோம். பார்த்தசாரதோட செல் நம்பரை வாங்கி, டிரேஸ் பண்றதா சொன்னாங்க. நான் தெளிவா எங்கப்பா, அம்மா, அண்ணனை விசாரிங்கனு சொன்னேன். எங்கப்பாவோட பெயரையும், வேலையையும் கேட்டவங்க சட்டுனு ஜர்க் ஆனாங்க. அதுக்குப் பிறகு அவங்க போக்கே மாறிடுச்சு.
‘பார்த்தசாரதிக்கு வேற அஃபேர் இருந்துச்சா… பணம் கேட்டு என்னை டார்ச்சர் பண்ணினாரா… கெட்டப் பழக்கங்கள் அவருக்கு இருக்கா’னு தேவையில்லாத கேள்விகளை கேட்க ஆரம்பிச்சாங்க. இந்த நிலைலதான் கடந்த 7-ம் தேதி ராத்திரி திண்டிவனம் பக்கத்துல ஓலக்கூர் பாலத்துக்கு கீழ எரிஞ்ச நிலைல ஒரு உடலை போலீஸ்காரங்க கண்டுபிடிச்சாங்க…”
துக்கத்தை கட்டுப்படுத்தி சரண்யா சொல்லிக் கொண்டிருக்கும்போது, பார்த்தசாரதியின் அப்பா வாய்விட்டு அழ ஆரம்பித்தார். ”அழாதீங்கப்பா… நான் இருக்கேன்… அக்கா, கொஞ்சம் இவரை உள்ள கூட்டிட்டு போங்க…” என்று சரண்யா சொன்னதையடுத்து பார்த்தசாரதியின் சகோதரிகள் அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு, உடைந்த குரலில் சரண்யா தொடர்ந்தார். ”இந்தத் தகவல் எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் போச்சு. சிந்தாதிரிப்பேட்டை போலீஸ்காரங்க, அப்பாவை (சந்திரமோகனை) திண்டிவனம் கூட்டிட்டு போனாங்க. கேசியோ வாட்ச், சிவப்பு நிற உள்ளாடை, காப்பி கலர் பேண்ட்டை வச்சு அந்த உடல், பார்த்தசாரதியுடையதுதான்னு அடையாளம் காட்டினாரு…”
கண்களை மூடி சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், ”டிஎன்ஏ ரிசல்ட்டும் அதை ஊர்ஜிதபடுத்திச்சு.

எந்த பார்த்தசாரதியோட நான் வாழ்ந்தா சந்தோஷமா இருப்பேனோ, அந்த பார்த்தசாரதியை என்னை பெத்தவங்களே உயிரோட எரிச்சு கொன்னுட்டாங்க. உண்மைல அவங்களுக்கு நான் மகளாதான் பொறந்தேனா அல்லது என்னை எங்கேந்தாவது வாங்கினாங்களானு தெரியலை.
பார்த்தசாரதிக்கு 24 வயசாகுது. எனக்கு 23 வயசு. மூணு மாசங்கள் கூட நாங்க முழுசா சந்தோஷமா வாழலை. அதுக்குள்ள எல்லாமே முடிஞ்சுடுச்சு…”

சரண்யா - பார்த்தசாரதி
துப்பட்டாவால் தன் முகத்தை மூடி அழுதார் சரண்யா. மெளனமாக நிமிடங்கள் கரைய சட்டென ஆவேசத்துடன் நிமிர்ந்தார். ”நான் புகார் கொடுத்தப்பவே எங்க வீட்டாரை கூப்பிட்டு விசாரிச்சிருந்தாங்கனா என் புருஷனை காப்பாத்தியிருக்கலாம். நான் ஏதோ, வேணும்னே எங்க அப்பா, அம்மா, அண்ணன் மேல கம்ப்ளைண்ட் கொடுக்கிறதா நினைச்சுட்டாங்க. எங்கப்பாவோட வேலைய பார்த்து அடங்கிட்டாங்க. ஆனா, இப்ப என்ன ஆச்சு..?”
அருகிலிருந்த 12-ம் தேதியிட்ட ‘மாலை மலர்’ நாளிதழின் 3ம் பக்கத்தை விரித்தார். ”எங்கப்பாவே நான்தான் கூலிப்படையை ஏவி கொன்னேன்னு சரணடைஞ்சிருக்காரு. இதுக்காக 5 லட்சம் ரூபாய கொடுத்தாராம். நூறு ரூபாய கூட எங்கம்மாவுக்கு தெரியாம எடுத்து எங்கப்பா செலவு செய்ய மாட்டாரு. அப்படியிருக்கிறப்ப இவ்வளவு பெரிய தொகைய எங்கம்மாவுக்கு தெரியாமயா கொடுத்திருப்பாரு? எங்கம்மாவையும், அண்ணனையும் காப்பாத்தறதுக்காக குற்றத்தை தானே செஞ்சதா வாக்குமூலம் கொடுத்திருக்காரு. போலீசும் அதை நம்புது. ஆனா, நான் சும்மா விட மாட்டேன். எங்கப்பாவ தூண்டிவிட்ட எங்கம்மாவும், எங்கண்ணணும் கைது செய்யப் படணும். மூணு பேருமே தண்டிக்கப்படணும்…”
மூச்சு வாங்க பேசிய சரண்யா, சற்று நிதானத்துக்கு வந்தார். ”என்னை ஐஏஎஸ் ஆக்கிப் பார்க்கணும்னு என் புருஷன் ஆசைப்பட்டாரு. அவரோட ஆசைய நான் நிறைவேத்தணும். அதுக்காகவே எம்.பி.பி.எஸ். ஃபைனல் இயர் முடிச்சதும், ஐஏஎஸ்-க்கு படிக்கப் போறேன். தன் படிப்புக்காக அவரு பேங்க்ல வாங்கின லோன் இன்னும் அடையலை. அதை நான் அடைப்பேன். அவரோட இடத்துல இருந்து இந்தக் குடும்பத்தை காப்பாத்துவேன்… நாசமா போற அந்தஸ்துக்காக பெத்தவங்களே இப்படியா கொடூரமா நடந்துப்பாங்க…” உதடு துடிக்க பேசிய சரண்யா, சட்டென எழுந்தார். ”ஐ’ம் சாரி… தப்பா நினைக்காதீங்க… நான்… நான்… உள்ள போறேன்…” என்றபடி உள்ளறைக்கு சென்றார்.
வெளியே வந்த பிறகும் சரண்யாவின் கேவல் கேட்டுக் கொண்டே இருந்தது.
நன்றி வினவு inaiyam

கருத்துகள் இல்லை: