வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

சேர்ந்தே இருப்பது:தமிழர்களும் அகதி வாழ்க்கையும்

நவீன திருவிளையாடல்
கே.பியை சந்திப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசின் அனுசரணையுடன் சென்றிருந்த புலி முக்கியஸ்தர்களில்  கிறீபதி முக்கியமானவர்.  இவர் வெள்ளவத்தையில் ஒரு ஹொட்டலில் ரீ குடித்துக்கொண்டிருக்கிறார். அருகில் இருந்த ஒருவர் தமிழ்ப்பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றை உரத்துப்படிக்கிறார்.
செய்தி இதுதான்:
இதனால் அறியத்தருவது என்னவென்றால் இலங்கை ஜனாதிபதிக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துவைப்பவர்களுக்கு வடமாநில கவர்னர் பதவி தருவதாக அரசு அறிவித்திருக்கிறது. இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கான வல்லமை உடையவர்கள் ஆய்வுக்கட்டுரையாக ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து பதவியை பெற்றுக்கொள்ளலாம்.
இச்செய்தியை கேட்டுக்கொண்ட கேட்ட கிறீபதி; அருகில் இருந்தவரிடம் : என்னபதவி என்று திரும்ப கூறுவீர்களா? எனக்கேட்டார்.
செய்தியை வாசித்தவர் : அதாவது வடக்குக்கான கவர்னர் பதவி
கிறீபதி :   கவனர் பதவி! லண்டனில் இருந்து இருந்து குப்பை கொட்டுவதை விட கவர்னர்பதவியை எடுத்து லைவ்வில் செட்டிலாகி விடலாம். ஆமா ஜனாதிபதியின் சந்தேகம் என்ன! அதனுடைய விபரம் தெரியுமா? உங்களால் அந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கமுடியுமா?
செய்தியை வாசித்தவர்: அது தெரிந்தால் நான் இங்கு இருக்கப்போகிறேன்.
கிறீபதி:  அது சரி அது தெரிந்தால் நீ ஏன் இங்கு இருக்கப்போகிறாய்.
கிறீபதி ஆட்டோ பிடித்து கதிரேசன் கோவிலுக்கு ஓடுகிறார்.
கிறீபதி:  (கோவிலுக்குள் நுழைந்து) ஐயோ நான் என்ன செய்வேன். கடவுளே! வடக்கு கவர்னர் பதவி எனக்கு கிடைக்கிற மாதிரி அருள் புரிய மாட்டாயா? கடவுளே! நான் கூப்பிடும்போது ஏனென்று கேட்கக்கூடாதா
கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்து ரி.என் ஏ தலைவர் சம்பந்தர் கிறீபதிக்கு அருகில் வருகிறார்.
சம்பந்தர்:  தம்பி
கிறீபதி:   யாரையா அது?
சம்பந்தர்:   அழைத்தது நான்தான்
கிறீபதி:  யாரையா நீங்க ஏன் அழைத்தீங்க.
நானா! தமிழ்களின் இனப்பிரச்சினையை தந்தை செல்வா காலத்தில் இருந்து அமிர்தலிங்கம் அவர்களுடன் கதைத்தும் பேசியும் புலிகளுடன் வன்னியில் உண்டும் புரண்டும் தமிழ்ச்செல்வனுடன் தேசிய இனப்பிரச்சினையில் பாடம் எடுத்து இந்திய அரசைப்பார்க்க  டெல்லிக்கு சென்று அவர்களுடன் பேசி மகிந்த அரசுக்கு தமிழர்கள் சார்பாக தீர்வை வைக்க முடியாமல் திரு திரு முழிக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவன் நான்.
கிறீபதி:  ஆகா நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளைப் பார்த்தால் எதுவித பிரச்சினையுமில்லாது வசதியாக இருக்கும் தலைவர்போல் தெரிகிறது.
சம்பந்தர்:  அப்படியானால் நீர்
கிறீபதி:   என்ர கோலத்தைப்பார்த்தால் தெரியவில்லையா புலிகளை நம்பி சொகுசா வாழ்ந்த நான் முள்ளிவாய்க்காலுக்குப் பின் எந்தப்பக்கம் போவது என திரு திருவென விழிக்கிறேன்.
சம்பந்தர்:  அதுதான் தனியாக நின்று புலம்பிக் கொண்டிருக்கிறாயோ
கிறீபதி:   ஆமா ஆமா சர்வதேசத்திடம் சொல்லியும் ஒரு பிரயோசனமும் இல்லை. அதுதான் இங்கு நின்று புலம்பி;கொண்டிருக்கிறேன்.
சம்பந்தர் : நீ இங்கு புலம்பிக் கொண்டிருப்பதை தம்பி மாவை  என்னிடம் சொன்னான்.
கிறீபதி:   எப்படி சொன்னார். நேரே வந்து சொன்னாரா
கைத்தொலைபேசியில் சொன்னான்
கிறீபதி:    என்ன நீங்க நட்டுக்கழண்டவர் போல் சொல்கிறீர்கள். எப்படி அவர் சொல்வார்.
சம்பந்தர்:  ஹோட்டலில் உமக்கருகில் இருந்து ரீ குடித்தவரே என் தம்பி மாவைதான். தமிழர்களின் தலைவனாக இருக்கிற எனக்கு உமது பிரச்சினை எதுவேன்று தெரிந்து விட்டது.
கிறீபதி:  விட்டால் நீங்கள் உலகத் தமிழர்களின் தலைவன் என்று சொல்வீர்கள் போலிருக்கிறதே!
சம்பந்தர்:   அதுவும் உண்மைதான்.
கிறீபதி:    தமிழர்களுக்கு தீர்வுத்திட்டம் தயாராகி விட்டதா?
சம்பந்தர்:   ஹா ஹா  ஹா
கிறீபதி:   நல்லா தட்டிற்று போலிருக்கிறது. ஐயோ! மகிந்தாவின் சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டால் கவர்னர் பதவி கிடைத்து விடுமே!
சம்பந்தர்:   கவலைப்படாதே! அதை நான் உனக்குத் தருகிறேன்.
கிறீபதி:    என்ன நீர் தயாரித்த தீர்வு அறிக்கையை நான் கொண்டுபோய் எனது அறிக்கையை காட்டுவதா. ஏதொ நான் உளறுவதை வைத்து என்னையும் புலம்பெயர் பிரதிநிதி ஒத்துக்கொள்கிறார்கள். அதையும் கெடுக்கவா
சம்பந்தர்:    பரவாயில்லை.
கிறீபதி:    உளறலாம் என்கிறீர்களா!
சம்பந்தர்:   உனக்கு கவர்னர் பதவி வேண்டுமா இல்லையா?
கிறீபதி:      வேணுமே உங்களுக்கு வேணாமா. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்து இருக்கிறீர்களே அதனால்தானா
சம்பந்தர்:   எனக்கு கவர்னர் பதவி மீது பற்றில்லை தம்பி. உனக்கு கவர்னர் பதவி வேண்டாமா இல்லையா?
கிறீபதி:  அதுசரி நீரே ஒரு தீர்வு அறிக்கையை எழுதிவிட்டு  நேரே மகிந்தாவிடம் கொடுக்கப் பயந்து அதை என் மூலமாக தள்ளிவிடப் பார்க்கிறீர் போலிருக்கு
சம்பந்தர்:   என் திறமை மீது நம்பிக்கை இல்லாவிட்டால் உன்னிடம் திறமை இருந்தால் என்னிடம் கேள்வி கேட்டுப்பாரும்.
கிறீபதி:   என்னது எங்கிட்ட எங்கிட்டவே மோதிப்பார்க்கிறாயா. பார்க்கத்தான் விசுக்கோத்துப்போலிருக்கிறேன். ஆனால் புலிகளிடம் இருந்து தப்பி பிழைத்தவன். நான் ரெடி தயாராக இரு
சம்பந்தர்:   கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?
கிறீபதி:    இரு இரு எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்.
சம்பந்தர்:   கேளும். கேட்டுப்பாரும்
கிறீபதி:   பிரிக்க முடியாதது
சம்பந்தர்:    தமிழர்களும் பிரச்சினைகளும்
கிறீபதி:  பிரியக்கூடியது
சம்பந்தர்:  வடக்கும் கிழக்கும்
கிறீபதி:   சேர்ந்தே இருப்பது
சம்பந்தர்:   தமிழர்களும் அகதி வாழ்க்கையும்
கிறீபதி:    சேராதிருப்பது
சம்பந்தர்:    தமிழர்களும் ஒற்றுமையும்
கிறீபதி: சொல்லக்கூடாதது
சம்பந்தர்:   போர்க்குற்றம்.
கிறீபதி:    சொல்லக்கூடியது
சம்பந்தர்:  பிரபாகரன் மண்டையைப்போட்டது
கிறீபதி:    பார்க்கக்கூடாதது
சம்பந்தர்:   விஜயின் சுறா திரைப்படம்
கிறீபதி:   பார்க்கக்கூடியது
சம்பந்தர்:   மனாட மயிலாட
கிறீபதி:   அரசியலில் சிறந்தது
சம்பந்தர்:    கட்சி தாவுவது
கிறீபதி:    த.தே கூ என்பது
சம்பந்தர்:    தக்காளி தேசிக்காய் கூட்டு
கிறீபதி:    கடிதத்திற்கு
சம்பந்தர்:  ஆனந்தசங்கரி
கிறீபதி:  வீணைக்கு
சம்பந்தர்:    டக்ளஸ்
கிறீபதி:  மிரட்டலுக்கு
சம்பந்தர்:  மேர்வின் சில்வா
கிறீபதி:    குத்துக்கரணத்திற்கு
சம்பந்தர்:   கே.பி
கிறீபதி:   மென்டலுக்கு
சம்பந்தர்:   நீ
கிறீபதி:  கிண்டலுக்கு
சம்பந்தர்:   சோ
கிறீபதி:   நான்
சம்பந்தர்:  என்ன கற்றகரியில் சேர்ப்பது எனத் தெரியவில்லை
கிறீபதி:    ஐயா! நீர்தான் தமிழர்களின் தலைவர். நான் ஒரு வெற்றுவேட்டு. அறிக்கையைத் தாருங்கள்

கருத்துகள் இல்லை: