புதன், 11 ஆகஸ்ட், 2010

யாழ். அரச அதிபர்,பாதுகாப்பு வலயங்களுக்குள் சிக்கியுள்ள நெற்செய்கைக்குரிய

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் சிக்கியுள்ள நெற்செய்கைக்குரிய வயற்காணிகளில் பெரும்போக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி ஹித்துருசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள கோரிக்கையில்,
"யாழ்ப்பாணத்தின் பொருளாதார முதுகெலும்பாக விவசாயமே விளங்குகிறது.எனினும் மிக நீண்ட காலமாக நிகழ்ந்து வந்த போர் குடாநாட்டின் விவசாயத்துறையை நலிவுறச் செய்து விட்டது.தற்போது போர் ஓய்வுக்கு வந்து விட்டது.

ஆயினும் இன்னமும் -போர் முடிந்த பின்னும்- உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊர் இழந்தவர்கள் அகதிகளாக அவலப்படுகின்றனர்.எல்லா இடங்களிலும் இயல்பு வாழ்வு மீளத்திரும்பும் போது இவர்கள் மட்டும் ஏதிலிகளாகவேயுள்ளனர்.எனவே இந்த மக்களின் வாழ்வை முன்னரைப் போன்று வளமான நிலைக்கு இட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு. இதற்கு வசதியாக உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள்  முடங்கிக் கிடக்கும் வயற்காணிகளில் விவசாயிகள் பெரும் போக நெற்செய்கையில் ஈடுபட அனுமதிக்க ஆவன செய்ய வேண்டும்.
அத்துடன் குடாநாட்டில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்தவும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
இக்கோரிக்கைகளை விரைவில் பரிசீலித்து நிறைவேற்றுவதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி ஹித்துருசிங்க உறுதியளித்தார் என யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: