புதன், 11 ஆகஸ்ட், 2010

உலகின் முதல்10 சிக்கனமான நகரங்கள் பட்டியல்

பொதுவாக உலகின் பணக்கார நகரங்கள், செலவுமிக்க வாழ்க்கை முறை கொண்ட நகரங்கள் என்றெல்லாம் பட்டியல் போட்டால் அவற்றில் முதலிடம் பிடிப்பவை ஐரோப்பிய நகரங்களாகவே இருக்கும்.

ஆனால் செலவில்லாத சிக்கனமான நகரங்கள் என்று பார்த்தால் லத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவை மட்டுமே பட்டியலில் இடம் பெறும். ஒரு ஐரோப்பிய நகரம் கூட இந்தப் பட்டியலில் வராது.

இந்த முறையும் உலகின் டாப் 10 செலவு குறைந்த அல்லது சிக்கனமான வாழ்க்கை முறை கொண்ட நகரங்கள் என்ற பட்டியலைத் தயாரித்துள்ளது மெர்சர் காஸ்ட் ஆப் லிவிங் சர்வே என்ற அமைப்பு. மார்ச் மாத சர்வதேச நாணய மாற்று மதிப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சர்வே இது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இந்திய நகரம் கொல்கத்தா!

இனி உலகின் டாப் 10 சிக்கனமான நகரங்கள் பட்டியல்:
1. கராச்சி
பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகர் இது. 12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெருநகரமான கராச்சிதான் பாகிஸ்தானின் வருவாயில் பெரும்பகுதியைத் தருகிறது. இந்த நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் 78 பில்லியன் டாலர்கள்.

ஆனால் மக்களின் வாழ்க்கை முறை, இந்நகரில் வசிப்பதற்கான செலவு எல்லாமே எளிமையானவை என்கிறது சர்வே.
2. மனாகுவா
நிகராகுவாவின் தலைநகரம் மனாகுவா, தொடர்ச்சியான அரசியல் புயலையும், இயற்கையின் சீற்றங்களையும் சந்தித்து வரும் நகரம். மக்கள் தொகை வெறும் 18 லட்சம்.
உலகின் இரண்டாவது செலவில்லா நகரம் மனாகுவாதான் என்கிறது மெர்சர் சர்வே. இத்தனைக்கும் வால்மார்ட், டெலிபோனியா, யூனியன் பெனோசா, பர்மாலட் போன்ற நிறுவனங்கள் இந்த நகரில் தங்கள் வர்த்தக சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துள்ளன.
3. இஸ்லாமாபாத்
பாகிஸ்தானின் 10வது பெரிய நகரம் இது. நிர்வாகத் தலைநகரும் கூட. 1.74 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த அழகிய நகரம், சிக்கனமான வாழ்க்கை முறையில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது.
4. லா பாஸ்  கடல் மட்டத்திலிருந்து 12000 அடி உயரத்தில் இருக்கும் லா பாஸ் பொலிவியா நாட்டின் தலைநகரம். 8.77 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரைவிட்டுச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அத்தனை சுலபத்தில் மனசு வருவதில்லையாம். அத்தனை சிக்கனமான நகரம்.கொஞ்சம் விலையிலேயே ஸ்வெட்டர்கள், ஹேண்ட் பேக்குகள் என பார்த்துப் பார்த்து வாங்க முடியும்.
5. அஷ்காபட்
துர்க்மெனிஸ்தானின் தலைநகரம் அஷ்காபெட். 6.95 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். காட்டன் மற்றும் மெட்டல் வொர்க் தொழிலை அடிப்படையாகக் கொண்டது.

மக்களின் வாழ்க்கை முறை மகா எளிகை. கால நிலையும், இருப்பிடச் செலவும் யாரையும் இங்கேயே இருந்துவிடத் தூண்டும்.
6. பிஷ்கெக்
கிர்கிஸ்தானின் தலைநகரமான பிஷ்கெக், முன்பு பிஷ்பெக் அல்லது ஃப்ரன்ஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. 1.25 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். விவசாயம்தான் அடிப்படை. மெர்சரின் செலவில்லாத நகரங்களில் 6 வது இடத்தைப் பிடித்துள்ளது.

7. அடிஸ் அபாபா
எத்தியோப்பியத் தலைநகர் இது. 33 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம் பரந்த பட்ட தொழில் அமைப்பைக் கொண்டது.வர்த்தகம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, சுகாதாரம், சமூக நலம், ஹோட்டல், சேவைத் துறை, கால்நடை மற்றும் விவசாயம் என அனைத்துமே இந்த நகர மக்களின் வாழ்க்கை ஆதாராமாக உள்ளது.
8. கொல்கத்தா
இந்தியாவின் முன்னாள் தலைநகரம், மேற்கு வங்க மாநிலத்தின் இந்நாள் தலைநகரம் கொல்கத்தா. ஒன்றரை கோடி மக்கள் வசிக்கும் பிரமாண்ட நகரம் இது.
கிழக்கு இந்தியாவின் வர்த்தக - நிதி மையம் என்று கூட கொல்கத்தாவை வர்ணிக்கிறார்கள். சிக்கனமான வாழ்க்கை முறை. உணவு, உடை என எல்லாமே குறைந்த விலையில் கிடைப்பதாக மெர்சர் சர்வே சொல்கிறது.
9.டெகுசிகல்பா
ஹோண்டுராஸின் தலை நகரம் இந்த டெகுசிகல்பா. 1.25 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். கடந்த 1998-ம் ஆண்டு வீசிய பெரும்புயல் இந்த நகரத்தையே முறித்துப் போட்டது. 5 நாட்கள் வீசிய இந்தப் பெரும் புயலில் டெகுசிகல்பா நகரின் ஒரு பகுதியே சிதைந்து போனது.அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு, இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது இந்த நகரம்.
10. விண்தோயக்
நமீபியாவின் தலைநகரம் விண்தோயக். 2.33 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரம்தான் நமீபியாவிந் முதுகெலும்பு. பெரும் தொழில் நிறுவனங்கள் இங்கே வர்த்தக மையங்களைக் கொண்டுள்ளன. சிக்கனமான நகரங்களின் பட்டியலில் 10வது இடம் விண்தோயக் நகருக்குதான்!

கருத்துகள் இல்லை: