புதன், 11 ஆகஸ்ட், 2010

எதிர்வரும் நாட்களில் சுமார் 500 தமிழ் குடியேற்றவாசிகள் கனடா


‘எம்.வி. சன் ஸீ’ எனும் கப்பலில் வந்துகொண்டிருப்பதாகக் கருதப்படும் இலங்கைத் தமிழ் குடியேற்றவாசிகளை தடுத்து வைப்பதற்காக கனேடிய அரசாங்கம் சிறைச்சாலைகளை தயார்படுத்தி வருகிறது. இக்கப்பல் இன்னும் சில தினங்களில் கனடாவின் மேற்குப் பிராந்திய மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கப்பலில் வரும் மேற்படி நபர்கள் மாப்பிள் ரிட்ஜ் எனும் மாவட்டத்திலுள்ள இரு சிறைச்சாலைகளில் தங்கவைக்கப்படலாம் என தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அதிகாரி ஜோன் லீபர்ன் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் சுமார் 500 தமிழ் குடியேற்றவாசிகள் அல்லது அகதிகளை கையாள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக்கப்பலில் சுமார் 100 ஆண்களும் 80 பெண்களும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இக்கப்பல் சரியாக எப்போது கனடாவை வந்தடையும் எனத் தெரியாதுள்ளது என லீபர்ன் கூறியுள்ளார்.
இக்கப்பலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களும் இருக்கலாம் என கனேடிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். “இக்கப்பல் யுத்தத்தில் சிக்கியிருந்த, அறியப்பட்ட பயங்கரவாதிகள் நீண்டகாலம் செயற்பட்ட பகுதியுடன் தொடர்புடையது” என வான்கூவர் குடிவரவு சட்டத்தரணி ரிச்சர்ட் குர்லன்ட் தெரிவித்துள்ளார்.
“கோதுமையையும் உமியையும் வேறாக்குவது எப்படி? அடிக்கடி யுத்த குற்றவாளிகளும் பயங்கரவாதிகளும் அப்பாவி மக்கள் நிறைந்த படகுகளில் பயணிகள் போல் மறைந்திருப்பர்” என குர்லன்ட் கூறியுள்ளார்.
இதேவேளைஇ மற்றொரு கப்பல் கனேடிய கடற்பரப்பை நோக்கி வந்தால் ஆச்சரியமில்லை என இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர் மார்ட்டின் கொலகொட் கூறியுள்ளார்.
“இதுஇ குறிப்பாக தமிழ் மக்களுக்கு அபிமான சேருமிடமாக விளங்குகிறது. பல வருடங்களாக கனடாவை அடைவதில் அவர்கள் அதிக வெற்றி சதவீதத்தை கொண்டுள்ளனர். 2003 ஆம் ஆண்டில் மாத்திரம் உலகின் ஏனைய அனைத்து பகுதிகளையும்விட இங்கு அதிக எண்ணிக்கையானோர் உள்வாங்கப்பட்டனர்” என மார்ட்டின் கொலாகட் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: